​லோக் சத்தா கட்சி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வரவேற்கிறது. எனினும் முக்கியக் குறைபாடுகளில் விளக்கம் கேட்கிறது

Thursday, September 10th, 2015 @ 8:00PM

பல்வேறு முதலீடுகளைக் கொணர்ந்து தமிழகத்தின் தொழில்வளத்தைப் பெருக்கும்பொருட்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அரசு முன்னெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும் இம்மாநாட்டில் அரசு பொறுப்புணர்வுடன் தான் செயல்படுகிறதா என்றும், வாக்களிக்கப்பட்ட முதலீடுகளைக் கொண்டுவர அரசு உறுதி செய்யுமா என்றும் கேள்வி எழுப்புகிறது.

மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள கையொப்பான ஒப்பந்தங்களின் ​மூலம் வரும் முதலீட்டின் ​எண்ணிக்கை ​மிகப் ​பெரிதாக இருக்கையில், இவற்றில் எத்தனை ஒப்பந்தங்கள் உண்மையாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 2011 ஆம் ஆண்டு தொடங்கி மொத்தம் ரூ. 1,53,939 கோடி மதிப்பிலான முதலீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை வெறும் ரூ. 5,592 கோடி முதலீடே அமலாக்கப்பட்டுள்ளது. ஆக, அறிவிக்கப்பட்டதில் அமலாக்கப்பட்ட முதலீட்டின் விழுக்காடு வெறும் 3.6% மட்டுமே. மற்ற முதலீடுகள் ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது தெரியவேண்டியுள்ளது. முதலீடு செய்வதற்கு உதவும் வகையில் ​சுதந்திர ​சந்தைக்கு உகந்தவாறு அரசின் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டியுள்ளது.

மேலும், மாநாடு நடத்தப்பட்ட விதம், அது ஆளுங்கட்சியின் தற்பெருமையைப் படமிட்டுக் காட்டும் நிகழ்ச்சியாகவே தோன்றியது. முன்னதாகவே நடக்க வேண்டிய மாநாடு முதல்வரின் கைதால் ஒத்திவைக்கப்பட்டது. இப்போதும் மாநாட்டுக்கான விளம்பரங்கள் முதல்வரின் சுய பிம்பத்தை உயர்த்திப் பிடித்தனவே அல்லாமல் அரசு நலன்களை முன்னிறுத்தியதாகத் தோன்றவில்லை.

காடோ நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, தமிழ்நாட்டின் பொருளாதாரச் சுதந்திர ​ஒப்பீட்டு எண்​ ​(எளிதாக தொழில் தொடங்கி நடத்த அளபுரு) ​, 2011 ஆம் ஆண்டைவிட 2013 ஆம் ஆண்டு சரிந்துள்ளது. இதனை ஒழுங்கு செய்ய அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அரசு சீரிய முறையில் தொடர்ச்சியாக திட்டங்களின் அமலாக்கத்தைக் கண்காணிக்க வேண்டுமென லோக் சத்தா கட்சி வலியுறுத்துகிறது. முதலீட்டாளர்களுக்கு அரசு நடைமுறைகளில் உள்ள தடங்கல்களை நீக்கவேண்டுமெனக் கோருகிறது. புதிய முதலீடுகளுக்கான உரிமங்களையும் ஒப்புறுதிகளையும் உரிய நேரத்திலும் முறைகேடுகளில்லாமலும் வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறது.

தமிழக அரசு மீண்டும் மீண்டும் மாநிலத்தில் மின்சாரச் சேமிப்பு மிதமிஞ்சி உள்ளதென்று பொய்சொல்லி வருகிறது. ஆனால் மாநிலத்தின் மின்சாரத் தேவை மற்றும் இருப்புக்கான தரவுகள் அதற்கு நேர்மாறாக உள்ளன. தென்மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள முதலீடுகள் வரவேற்கத்தக்கது. அப்பகுதியில் பலமுனைப்பட்ட பொருளாதார​ முன்னேற்றத்திற்கும், அதிகார ​பரவலாக்கம் நிகழ​வும் ​ அது வாய்ப்பளிக்கும். முன்னதாக பல முதலீட்டாளர்கள் தென்மாவட்டங்களில் தொழில் தொடங்க முனைப்பு தெரிவித்தபோதிலும், உட்கட்டமைப்பு வசதியின்மை காரணமாக அவர்கள் பின்வாங்கியது குறிப்பிடவேண்டியது. உட்கட்டமைப்பு வசதிகளை , குறிப்பாக மின்சார இருப்பை, மேம்படுத்த ஆவன செய்வது அரசின் கடமையாகும்.

சில பெருஞ்செலவுடைய மின்சாரத் திட்டங்களில், முதலீட்டாளர்களுக்கும் ஆளும் கட்சிக்கும் இடையே இரகசிய ஒப்பந்தங்கள் இருப்பதாகப் பேசப்படுகிறது. இதற்குக் காரணம் அரசுத் துறைகளின் ஒளிவுமறைவுத் தன்மையும், தகவல் ஆணையத்தின் செயலிழப்பும் ஆகும். வெளிப்படைத்தன்மை இல்லையேல், ஊழல் பெருகி நேர்மையான வணிகம் பாதிக்கப்பட்டு, போலி முதலாளித்துவத்திற்கே வழிவகுக்கும். அரசின் இயங்குமுறைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவந்தும், தகவல் ஆணையத்தை செயலூக்கப்படுத்தியும், நேர்மையான முறையில் முதலீடுகளுக்கு வழிவகை செய்ய வேண்டுமென்று அரசிடம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.​

Categories: Press Releases
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: