நீதிமன்ற அவமதிப்பில் தமிழக அரசு முதலிடம் – நீதிமன்றம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டும்

Wednesday, October 14th, 2015 @ 9:24PM

“20,000 வழக்குகளில் உத்தரவை நிறைவேற்றவில்லை: கோர்ட் அவமதிப்பில் தமிழக அரசு முதலிடம்​.​ சென்னை உயர் நீதி மன்றம் கடும் கண்டனம்​”​ என்ற செய்தி ​எவ்விதமான அதிர்ச்சியை​யும் நமக்கு ஏற்படுத்தவில்லை.

அரசுக்கு எதிராக எந்த வழக்கு தொடுக்கப்பட்டாலும், நீதிமன்றம் அந்த வழக்கை எடுத்து​க்​கொள்ளு​ம்​முன் அதனை எப்படியாவது நீர்த்து​ப்​போக செய்ய வேண்டும் என்ற முனைப்பு அரசு வழக்கறிஞர்களால் காட்டப்படும். லோக்சத்தாவின் சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு ​​இதற்கு சரியான உதாரணம். நம் வழக்கு ஏற்றுக்கொள்ளு​ம் முன்னரே அன்றைய அரசு வழக்கறிஞராக இருந்த ​திரு. ​நவனீத கிருஷ்ணன் வழக்கிற்கு சம்மந்தமில்லாத காரணங்களைக் ​ காட்டி அந்த வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என வாதிட்டார். இது ஏற்றுக்கொள்ள​க் ​ கூடிய வழக்குதான் என்பதை உணர்ந்த நீதிமன்றம் வழக்கை ஏற்றுக்கொண்டது.

அரசுக்கு எதிரான வழக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அடுத்து அதனை கிடப்பில் போடுவதற்கான அத்தனை வேலைகளும் ​துவங்கும். நீதிமன்றம் எவ்வளவு அவகாசம் கொடுத்தாலும் எத்தனை முறை ​​வாய்தாக்கள் வாங்க முடியுமோ அத்தனை வாய்தாக்கள் வாங்குவது. ஒரு சமயத்தில் நீதிமன்றம் கண்டிப்பு காட்டிய பின் சரியான தரவுகள் சேகரிக்காதது போல ​​மீண்டும் வழக்கை இழுத்தடிக்கும் வேலைகள் துவங்குகிறது. சில நேரங்களில் வழக்கிற்கு தேவையற்ற தரவுகள் தந்தும் வழக்குகள் இழுத்தடிக்கப்படுகிறது. ‘சேவை பெறும் உரிமை சட்டம்’ தமிழகத்தில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற வழக்கில், அரசு இதுவரை மக்களுக்கு 44,000 அரசு சேவைகள் செய்ததாக சொல்லி வழக்கை முடித்தது. ஆனால மொத்தம் எத்தனை அரசு சேவைகளுக்கு மக்கள் ​விண்ணப்பித்தார்கள் என்ற விவரம் வரவில்லை.

சில சமயம் நீதிமன்ற தீர்ப்பை பெறுவதற்கு பதில் தாங்களாகவே இந்த பணியை செய்து முடிப்பதாக வாதம் செய்து, வழக்கை அரசு ‘முடித்துகொள்ளும்’ வேலைகளும் நடக்கிறது. உதாரணமாக ‘லோக்ஆயுக்தா’ வழக்கு மதுரை கிளையிலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் வந்தபோது அரசு லோக்ஆயுக்தா விரைவில் கொண்டுவருவதாக சொல்லி அந்த வழக்கை முடித்துவைக்க கோரியது. நீதிமன்றமும் முடித்துவைத்தது.ஆனால் இதுவரை லோக்ஆயுக்தாவிற்காக இந்த அரசு ஒரு துரும்பை கூட கிள்ளிபோடவில்லை.

இவையெல்லாம மீறி அரசுக்கு எதிராக தீர்ப்புகள் வழங்கப்பட்டால் அதன் மீ​து பெயரளவிற்கு கூட நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. காவல்துறையில் ஒரு காவல் ஆய்வாளர் ​நம் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றோ​, ​அவர் ​நம்மை துன்படுத்துகிறார் ​என்றோ மேலிடத்தில் புகார் செய்தால் எப்படி அந்த வழக்​கின் ​ விசாரணை மீண்டும் ​நாம் யார் மீது ​புகார் ​அளித்தோமோ அவரிடமே வருமோ அது போல் எந்த அரசு இயந்திரத்திற்கு எதிராக நாம் நீதிமன்ற தீர்ப்பு பெறுகிறோமோ அந்த இயந்திரம் நம்மை பார்த்து ஏளன​ச் ​ சிரிப்பு சிரிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ‘நீதிமன்ற அவமதிப்பு’ வழக்கு தொடுப்பது மிக குறைவாக ​உள்ளதே ஆகும். அசல் வழக்கிற்காக ஏற்கனவே பல வருடம் கழிந்த நிலையில், தீர்ப்பு நிறைவேற்றப்படாத நிலையில் மனுதாரரக்கு நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை குறைகிறது.

அதனையும் தாண்டி ‘நீதிமன்ற அவமதிப்பு’ வழக்கு தொடுக்கப்பட்டால், அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கே பல மாதங்கள் ஆகின்றது. மீறி வந்தாலும் நீதிமன்றத்தில் ​அரசு ​ஒரு சின்ன வருத்தம் தெரிவித்தால் போதும் என்ற நிலையே தொடர்கிறது.

நீதிமன்றம் ‘​​நீதிமன்ற அவமதிப்பு’ வழக்குகளில் கண்டிப்பு காட்ட தவறினால் அரசுக்கு எதிரான வழக்குகளில் வழங்கப்படும் தீர்ப்புகள் ​​விழலுக்கு இறைத்த நீராகவே போகும் என்று லோக்சத்தா கருதுகிறது. ​​நீதிமன்ற அவமதிப்பு’ வழக்குகளில் ​​கண்டனங்களைத் தாண்டி அபராதம், தலைமைச் செயலாளரிடம் ​உத்தரவுகளை நிறைவேற்றும் நிலை குறித்து தொடர்ந்து அறிக்கை கேட்பது, உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரைப்பது ஆகியவற்றை சென்னை நீதிமன்றம் செய்யுமாறு லோக் சத்தா கட்சி கோரிக்கை வைக்கிறது.

Categories: Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: