அரசே! வெள்ள நிவாரணம் – குடும்பத்திற்கு ரூ 1 லட்சம் வழங்கு சொத்து வரியை திருப்பிக்கொடு

Sunday, November 22nd, 2015 @ 7:31PM

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நகரவாழ் நடுத்தர வர்க்க மக்களுக்கு ரூ 1 லட்சமும், நகர ஏழைகளுக்கு ரூ 20,000-ம் வழங்க வேண்டுமென லோக்சத்தா கோருகிறது. மேலும் மாநகராட்சியின் அலட்சியத்திற்கு இழப்பீடாக கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் கட்டிய ‘சொத்து வரியை’ மக்களிடமே திருப்பி தர வேண்டும் என்ற கோரிக்கையையும் லோக்சத்தா கட்சி வைக்கிறது.

வட கிழக்கு பருவ மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை நகர வாசிகளை சந்தித்தும், அவர்களுக்கு வசித்த பகுதிக்கு சென்று தொடர் ஆய்வுகள் நடத்தியபின் லோக்சத்தா கட்சி இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தது.

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பெய்து வரும் மழை பருவ காலத்து மழையே இன்றி பருவம் தப்பிய மழையோ அல்லது கடுமையான பேரிடரோ அல்ல. வானிலை எச்சரிக்கை மையமும் தொடர்ந்து கடும் மழைக்கான முன் எச்சரிக்கையை பகிர்ந்து வந்தது. இது போன்ற மழை முன்னரும், கடைசியாக 2005 ஆம் ஆண்டிலும் பெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகராட்சியின் கடந்த 4 ஆண்டு நிதிநிலை அறிக்கையை ஆய்வு செய்ததில் சுமார் ரூ 5000 கோடி மழை நீர் வடிகாலுக்காக மட்டும் செலவழிக்கப்பட்டது தெரிகிறது. சுமார் 93% பணிகளும் முடிந்துவிட்டதாக மாநகராட்சி மேயர் தெரிவித்திருந்தார்.

மழை ஏற்படுத்திய பாதிப்புகளை நாம் நேரடியாகவும், ஊடகத்தின் வாயிலாகவும் கண்டபோது, நம் வரிப்பணம் மட்டுமே மழை நீரில் வடிந்துள்ளது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

நம்முடைய ஆய்வில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ‘நகர உயர் நடுத்தரவர்க்கத்தினர்’ வசிக்கும் வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் பல தெருக்களில் தனி வீடுகளுக்குள்ளும், அடுக்குமாடி குடியிருப்புகளில் தரைத் தளத்தில் இருக்கும் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து அவர்களின் வாழ்நாள் சேமிப்பு யாவும் தண்ணீரில் மிதப்பதை கண்டோம்.

அதே போல் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ‘நகர்ப்புற ஏழைகள்’ வசிக்கும் வீடுகளுக்குள்ளும் மொத்தமாக தண்ணீர் புகுந்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அடிப்படையான பொருட்கள் கூட தண்ணீரில் அடித்து சென்றதையும் கண்டோம்.

கடந்த 5 வருடங்களில் மட்டும் சுமார் ரூ 5,000 கோடி மழை நீர் வடிகாலுக்கு பயன்படுத்தப்பட்டும் இந்த அழிவு அவர்களுக்கு ஏற்பட்டதற்கு முக்கியமான காரணங்கள்:

  1. மழை நீர் வடிகால் பணிகள் இந்த பகுதிகளில் பாதியின் கைவிடப்பட்டுள்ளன.
  2. மழை நீர் வடிகால் கட்டியிருந்தும் அவற்றை ஒரு குட்டையோடோ இல்லை ஏரியோடு இணைக்காமல் விடப்பட்டு, மழை நீர் வடிகால் என்பது மழை நீர் சேமிப்பு தொட்டிகளாக மாறியுள்ளது. ஒரு மழை நீர் வடிகால் கட்டும்போது அதனை இணைக்க வேண்டும் என்ற அடிப்படை கூட இல்லாமல் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
  3. மாநகராட்சி சாலைகள் பழுதுபார்க்கப்பட்டு போடப்படும்பொழுது, ஏற்கனவே இருக்கும் சாலைகளை முழுவதும் அகற்றிவிட்டு சாலை போடவேண்டும் ஒழிய, ஏற்கனவே இருக்கும் சாலை மேல் மீண்டும் சாலை போடக்கூடாது என்ற விதி அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. 15 வருடங்களுக்கு முன் கட்டிய வீடுகள் சாலையிலிருந்து சுமார் 2 முதல் 3 அடியும், 10 வருடங்களுக்கு முன் கட்டிய வீடுகள் சுமார் 1 முதல் 2 அடியும் சாலையிலிருந்து கீழ் இறங்கியிருப்பது போன்ற தோற்றம் ஏற்படுத்துகிறது.
  4. மாநகராட்சி நீர்நிலைகள் தூர்வாரப்படாமலேயே இருந்ததால் அவற்றில் நீரின் கொள்ளளவு மிகவும் குறைந்து இருந்தது.

வெளிப்படைத்தன்மை இல்லா மேஜை தீர்மாங்கள்

கடந்த அக்டோபர் 28 நடந்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில், முதல் முறையாக, 59 மேஜை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, புதிய சாதனை படைக்கப்பட்டது. மேயர் சைதை துரைசாமி தலைமையில், சென்னை மாநகராட்சியில் 80 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில், 21 தீர்மானங்களுக்கான தகவல்கள்மட்டுமே, கவுன்சிலர்கள், பத்திரிகையாளர்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டன. இந்த தீர்மானங்கள் அனைத்தும் தானபத்திரம், மாநகராட்சி ஊழியர்களை பணி ஓய்வில் செல்ல அனுமதிப்பது, பூங்கா பணிகளுக்கு ஆணை வழங்குவது ஆகியவையே.

கட்டமைப்பு பணிகள் சம்பந்தமான முக்கிய 59 தீர்மானங்கள் அனைத்தும் மேஜை தீர்மானமாக, நான்கு வரிகளில் மட்டுமே, கவுன்சிலர்களுக்கும், பத்திரிகைகளுக்கும் தகவல்கள் அளிக்கப்பட்டன. இதன் பின்னணியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவற்றுள், கூவம், அடையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு, 22 சிப்பங்களுக்கான ஒப்பந்தம் விடப்பட்டு, பணி ஆணை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. எந்த பணி, எந்த ஒப்பந்ததாரருக்கு வழங்கி உள்ளனர்; யார் எவ்வளவு தொகை நிர்ணயித்தனர் போன்ற எந்த விவரமும் தீர்மானத்தில் இல்லை. அதே போல, 1,951 கான்கிரீட் சாலைகள் அமைக்க, 159 கோடி ரூபாய்க்கு, 21 சிப்பங்களுக்கான ஒப்பந்தம் விடப்பட்டது. இதற்கான பணி ஆணை வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இந்த பணிகளிலும், ஒப்பந்ததாரர்கள் யார், யார்; அவர்கள் நிர்ணயித்த தொகை எவ்வளவு என்ற விவரம் இல்லை.

இவ்வாறு மழைநீர் வடிகால், சாலைகள், பேருந்து நிழற்குடைகள் அமைத்தல் ஆகிய கட்டமைப்பு திட்டங்களை யார் செய்வது, என்ன தொகை நிர்ணயம், மாநகராட்சி நிர்ணயித்த தொகைக்கு கூடுதல் நிர்ணயமா, குறைத்து நிர்ணயமா போன்ற எந்த விவரங்களும் இல்லை. சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மிக அவசரமான பணிகளுக்கு மட்டும், மேஜை தீர்மானம் நிறைவேற்ற விதியில் இடம் உள்ளது. ஆனால், அவசரம் இல்லாத சாதாரண பணிகளுக்கு கூட, சமீபகாலமாக மேஜை தீர்மானங்கள் அதிகளவில் கொண்டு வரப்படுகின்றன.

கவுன்சிலர்கள், பத்திரிகைகளுக்கு முழு தகவல் அளிக்காமல் ரகசியமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது சமீபத்திய இழப்புகளுக்கு ஒரு முக்கிய காரணம் என்று லோக்சத்தா கட்சி கருதுகிறது. எந்த வித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் இயற்றப்பட்ட இந்த மேஜை தீர்மானங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.

தோல்வியடைந்த முன்னெச்சரிக்கை

கடுமையான மழை பெய்யும் என்ற எச்சரிக்கையை மாநகராட்சியும், தமிழக அரசும் தீவிரமாக பார்க்கத் தவறிவிட்டது. செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை கூட மக்களுக்கு, குறிப்பாக அடையாறு, கூவம் நதிக் கரையில் வசிக்கும் மக்களுக்கு தகவல் சொல்ல வேண்டிய பணியை கூட அரசு சரியாக கையாளவில்லை. அடையாறில் சில உயிர்கள் மாண்ட்தற்கு இதுவே முக்கிய காரணம்.

மேலும் கன மழை தொடர்ந்து பெய்வது அறிந்தும் செம்பரம்பாக்கம் ஏரியை முன்னரே திறக்காமல், கடைசி நிமிடத்தில் 18,000 கன அடி நீரை வெளியேற்றியது பேரிழப்புகளை உருவாக்கியது. அரசின் தொடர்பு சாதனங்கள் முற்றிலும் தோல்வியடந்ததையே இது காட்டுகிறது.

தமிழக அரசு துறைகளுக்குள் இருக்கும் ஒருங்கின்மை

மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் எடுப்பதில் தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மாநகராட்சி ஆகிய அரசின் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும், நிவாரண பணிகளுக்கும் தேவைப்படுகிறது. ஆனால் காலம்காலமாக இவர்களுக்குள் ஒருங்கிணைப்பும், இவர்களை அடக்கிய இணைப்பு குழு கூட்டங்களும் அரசால நடத்தப்படுவதில்லை. உள்ளாட்சிகளுக்கான கூடுதல் அதிகாரமும், இந்த துறைகளுக்குள்ளான ஒருங்கிணைப்புதான் ஒரே தீர்வு. ஆனால் தற்போது இருக்கும் நிர்வாகத்திற்கு திட்டமிடுதலிலோ அல்லது உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதிலோ அக்கறை இல்லை.

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள்

ஏரிகள் மற்றும் பிற நீர்நிலைகள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதை அதிகாரிகள் கட்டுப்படுத்தத் தவறுவதோடு இல்லாமல் அரசியல் தலையீட்டினால் இதற்கு துணை போகின்றனர். இதனால் மழை காலத்தில் வெள்ளமும் வெயில் காலத்தில் குடிநீர் பஞ்சமும் ஏற்படுகிறது. ஏரிகளில் புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுப்பதோடு ஏற்கனவே உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வழி செய்ய வேண்டும். ஏரிகளில் வசிப்போருக்கு வேறு பகுதிகளில் வீடு கொடுத்தாலும் அங்கு தரமான பள்ளிக்கூடம், மருத்துவமனை மற்றும் அவர்களுக்கான வாழ்வாதாரம் குறித்து அரசு சிந்திக்க மறுக்கிறது.

பேரிடர் மேலாண்மையில் அக்கறையின்மை

2012-ஆம் வருடம் மார்ச் மாதம் பதிப்பிக்கப்பட்ட CAG அறிக்கையில் தமிழகம் பேரிடர் மேலாண்மையைப் பொறுத்த வரையில் எந்த ஒரு அவசரகால பிரச்சனையையும் சமாளிக்க தயாராக இல்லை என தெரிவித்து இருந்தது. மேலும் பேரிடர் மேலாண்மை குறித்து எந்த ஒரு கூட்டமோ நடத்தாமல, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டியது. இது போன்ற எச்சரிக்கைகளை தமிழக அரசு புறக்கணித்து பேரிடர் மேலாண்மையில் அலட்சியம் காட்டியது. மாநில பேரிடம் மேலாண்மைக்கு தலைவர் இந்த மாநில முதல்வர் என்பது அவருக்கு தெரியுமா என்ற சந்தேகம் எழுகிறது.

நகரவாசிகளின் பேரிழப்பிற்கு உரிய இழப்பீடு

பாதிக்கப்பட்ட ‘நகர உயர் நடுத்தரவர்க்கத்தினர்’ ஒவ்வொருவரும் சுமார் ரூ 50,000 முதல் ரூ 2 லட்சம் வரையிலான சேதங்களை சந்தித்துள்ளார்கள். குறிப்பாக அவர்களின் கட்டில், சோஃபா, தொலைக்காட்சி பெட்டி, மடிக் கணினிகள், ஆடைகள், மர அலமாரிகள், குளிர்சாதன பெட்டிகள், சலவை இயந்திரங்கள் தண்ணீர் வந்த அளவிற்கு ஏற்றார்போல் பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் வெள்ளத்தினால் சேதம் அடைந்திருந்தாலும் அவற்றுக்கு காப்பீடு இருப்பதால் பிரச்னை இல்லை. தோராயமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1 லட்ச ரூபாய் வரை பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது.

‘நகர்ப்புற ஏழைகள்’ சிலர் தங்கள் வீட்டையே இழந்து நிற்கின்றனர். மற்றவர்கள் தங்களின் ஆடைகள், அடுப்புகள், பாத்திரங்கள், பெட்டிகள் என அனைத்தும் இழந்து நிற்கின்றனர். தோராயமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 20,000 வரை பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது.

குடிமக்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் சேவைகள் பெறுவதற்கான உரிமையைக் கோருகிறது லோக்சத்தா கட்சி. கட்டமைப்பு வசதிகள் செய்து மக்களைப்பாதுகாப்பது அரசின் கடமை. இது கட்டுப்படுத்தவியலா இயற்கைச் சீற்றம் அல்ல, முறையான திட்டமிடல் மூலம் சேதங்கள் பெருமளவு கட்டுப்படுத்தி இருக்க முடியும் பல வளர்ந்த நாடுகளில் செயல்படுத்தப் பட்டுள்ளது போல. தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி , வெள்ள நிலவரங்களை கையாளுதல் அரசின் தலையான பொறுப்பும் கூட. உள்ளாட்சியையும், தமிழக அரசையும் ஆட்சி செய்து வரும் அதிமுகதான் இந்த பேரிழப்புகளுக்கு முக்கிய காரணம். இந்த பொறுப்பற்ற ஆட்சிக்கும், சேதங்களை இது வரை மதிப்பிடாத்தையும் லோக்சத்தா கண்டிக்கிறது.

வழக்கமான சில ஆயிரம் நிவாரணம் பெயருக்காகத்தான் இருக்கும், லோக்சத்தா இதனை நிராகரிக்கிறது. குடும்பம் மற்றும் வீட்டு மீட்புப்பணிகளுக்காக நகர்ப்புற ஏழைகளுக்கு ரூ 20,000 முதல் நகரவாழ் நடுத்தர வர்க்க மக்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் இழப்பீடு கோருகிறது லோக்சத்தா கட்சி. இது கருணை அடிப்படையிலான இழப்பீட்டுக்கான கோரிக்கை அல்ல, கடமையைச் செய்யத்தவறிய அரசின் தோல்விக்கான இழப்பீடாகக் கருதவேண்டும்.

சொத்து வரி திரும்பத் தர வேண்டும்

சென்னை மாநகராட்சியிலிருக்கும் 200 வார்டுகளில் 75% வார்டுகள் மாநகராட்சி மற்றும் தமிழக அரசின் அலட்சியத்தால் ஏதோ ஒரு பாதிப்புக்கு உள்ளானது. சென்னை மாநகராட்சிக்கு நாம் செலுத்திய சொத்து வரியும் இவர்கள் செலவழித்துள்ள தொகையில் ஒரு பங்கு வகிக்கிறது. ஆனால் பொதுமக்கள் யாவரும் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மாநகராட்சியின் அலட்சியத்திற்கு இழப்பீடாக கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் கட்டிய ‘சொத்து வரியை’ மக்களிடமே திருப்பி தர வேண்டும் என்ற கோரிக்கையை லோக்சத்தா கட்சி வைக்கிறது.

மேலும் மேற்கூறிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு இனி இதுபோல வெள்ளம் வரமால் தடுக்கவேண்டும் எனவும் கோருகிறது.

Categories: Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: