பள்ளியை கல்லூரியாக்கி அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களின் எதிர்காலத்தை அரசாங்கம் பாழக்குகிறது

Sunday, November 1st, 2015 @ 5:11AM

ஆர்கே நகரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, ஒரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாண்புமிகு முதல்வர் செல்வி. ஜெயலலிதா துவக்கிவைத்துள்ள நிகழ்வு கண்டிக்கத்தக்கது. வழக்கம்போல ஓய்வில் இருக்கும் தமிழக முதல்வர், வழக்கம்போல காணொளி மூலம், இல்லாத ஒரு கல்லூரியை துவக்கிவைத்து செய்துள்ள மாபெரும் புரட்சி நகைப்புக்குரியது. சுமார் 8 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது, முதல்வரின் தேர்தல் காலத்து சுயதம்பட்டத்திற்காக அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டு, மாணவர்கள் தயார் செய்து, அவர்களுக்கு சேர்க்கை அளித்து ஒரு கல்லூரிக்கான எந்த வசதியுமே இல்லாத நிலையில் தன் பொற்கரங்களால் திறந்துவைத்து பெருமிதம் அடைந்துள்ளார்.

ஆர்கே நகர் பகுதியில் ஒரு கல்லூரி மிக அவசியமானது என்றாலும், அதற்கான குறைந்தபட்ச கட்டமைப்பு வசதிகள் ஏதுமே இல்லாமல் அக்கல்லூரியை திறந்து வைத்துள்ளமை தனக்கு வாக்களித்த மக்களை முட்டாளாக்கும் செயலே அன்றி வேறு என்னவாகும். ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அம்மாணவர்களின் தேவையை கூட பூர்த்தி செய்யாமல் இருக்கும் நிலையில் முதல்வருக்கு ஏன் இந்த பகல் வேஷம். புதிதாக திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கல்லூரிக்கு பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆய்வகங்கள், பாடத்திட்டங்கள், குறைந்தபட்ச தேவையான வகுப்பறைகள் என எதுவுமே இல்லாமல் எந்த அடிப்படையில் இந்த திறப்புவிழா நடத்தப்பட்டது? இதே கட்டமைப்புகளோடு ஒரு தனியார் கல்லூரி ஆரம்பிக்க முடியுமா? தனியார் கல்லூரிக்கு ஒரு நியாயம் அரசுக் கல்லூரிக்கு ஒரு நியாயம் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

இதே போல் முன்னர் கோவையில் தொடங்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம் ஒரு மூடப்பட்ட அரிசி ஆலையில் நடத்தப்பட்டது. அவர்கள் குறைந்தது 20 கி.மி பயணித்து கோவை அரசுக்கல்லூரிக்கு வந்தே சிறப்பு பாடங்கள் மற்றும் ‘செய்முறை கூடங்களுக்கு’ வரவேண்டி இருந்தது. திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகம் ஒரு தனியார் கட்டிடத்தில் சில வகுப்புகளுடன் அங்கீகாரமற்ற தனியார் பள்ளியைப்போல் செயல்பட்டது.

வாக்குறுதிகளை காப்பாற்றுகிறேன் என்று காரணம் சொல்லி இது போல் அவசரமாக எந்த திட்ட செயல்பாடுமின்றி அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குரியாகுகிறது இந்த அரசு. 

இம்மாதிரியான தான்தோன்றித்தனமான முடிவுகளால் தமிழக மக்களை வஞ்சித்து வரும் முதல்வர் ஜெயலலிதாவின் செயல் கண்டிக்கத்தக்கது. இக்கல்லூரிக்கான கட்டுமானத்திற்காக ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகளை முடித்து சரியான கல்வி சூழலோடு கல்லூரியை திறப்பதே சரியானதாகும் என லோக்சத்தா கட்சி கருதுகிறது.

Categories: Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: