அரசே! வெள்ள நிவாரணத் தொகையை முறையாக வழங்கிடு – ஓட்டு வங்கி அரசியலை செய்யாதே!!!

Friday, December 18th, 2015 @ 5:34PM

அரசின் அலட்சியத்தாலும், மெத்தனப்போக்காலும் சென்னையில் ஏற்பட்ட பேரிழப்புகளுக்கு ‘இயற்கை பேரிடர்’ என பெயர் சூட்டி, தமிழக அரசு மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்க கணக்கீட்டாளர்கள் கொண்டு கணக்கெடுத்து வருவதை எல்லோரும் அறிவார்கள்.

அந்த வெள்ள நிவாரண கணக்கெடுப்பில் ஒரு குடும்பத்தின் அடிப்படை விவரங்களோடு, வங்கி கணக்கு விவரமும், பாதிக்கப்பட்ட வீடு குறித்து முக்கியமான 4 கேள்விகளும் கொடுக்கப்பட்டுள்ளது –

  1. பாதிக்கப்பட்ட வீட்டின் வகை – குடிசை / நிரந்தர வீடு
  2. பாதிக்கப்பட்டது குடிசை எனில் – பகுதியாக பாதிக்கப்பட்டதா / முழுவதுமாக பாதிக்கப்பட்டதா?
  3. பாதிக்கப்பட்டது நிரந்தர வீடு எனில் – பகுதியாக பாதிக்கப்பட்டதா / முழுவதுமாக பாதிக்கப்பட்டதா?
  4. வீடு பாதிக்கப்படாமல் இருந்து இரண்டு நாட்களுக்கு மேல் தண்ணீர் புகுந்து துணிமணிகள் மற்றும் பாத்திரங்கள் இழக்கப்பட்டதா?

ஆனால் கணக்கெடுக்கும் கணக்கீட்டாளர்கள் பாதிக்கப்பட்ட வீடு தனி வீடாக இருந்து பாதிக்கப்பட்டிருந்தாலும், அடுக்கு மாடி குடியிருப்பாக இருந்து பாதிக்கப்பட்ட கீழ் தளத்தில் இருந்தாலும், பாதிக்கப்படாத 3வது தளத்தில் இருந்தாலும் இந்த 4 கேள்விகள் குறித்து எந்த விபரமும் கேட்காமல் குடும்பத்தின் அடிப்படை விவரங்களோடு, வங்கி கணக்கு விவரம் மட்டும் எல்லோரிடத்திலும் பெற்று செல்வதாக அறிகிறோம். இது போன்று எல்லா குடும்பங்களின் விவரமும் எடுப்பதற்கு பெயர் ‘மக்கள் தொகை’ கணக்கீடே தவிர ‘வெள்ள நிவாரண கணக்கெடுப்பு’ அல்ல. வங்கி கணக்கு விவரங்கள் வாங்குவது நிவாரண தொகையில் நடக்கும் ஊழலை தடுப்பதற்கான வழி என்று நம்பினால் கூட, இது முழுக்க முழுக்க ஓட்டு வங்கியை குறிவைத்து தமிழக அரசாங்கம் செய்யும் ‘அசிங்கமான அரசியல்’ என்றே லோக்சத்தா கட்சி கருதுகிறது..

பாதிக்கப்பட்டவர்கள் லட்சகணக்கான மதிப்புள்ள பொருட்களை இழந்து ஒரு புறம் தவித்திருக்க, முழுவதும் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படாத என எல்லா தரப்பினருக்கும் 5000 ரூ நிவாரணம் வழங்கப்படும் என்கிற செய்தி – இந்த வெள்ளத்தில் அரசாங்கம் ஒரு பாடமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதை அப்பட்டமாக உணர்த்துகிறது.

இந்த வெள்ளம் இவ்வளவு பாதிப்புகளை உண்டாக்கியதற்கு இந்த ‘ஓட்டு வங்கி’ அரசியலே ஒரு முக்கிய காரணம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

இது வரை எடுத்த கணக்கெடுப்பை மறு ஆய்வு செய்து – பாதிக்கப்பட்டவரின் உண்மையான பாதிப்பு – என்ன என்ன பொருட்களை அவர் இழந்துள்ளார் என்று ஒரு தெளிவான கணக்கெடுக்க வேண்டும் என லோக்சத்தா கட்சி வலியுறுத்துகிறது.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நகரவாழ் நடுத்தர குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் 50,000 ரூ நிவாரணமாகவும், இன்னுமொரு 50,000 ரூ வட்டியில்லா கடனாக வழங்க அரசு ஆவணம் செய்ய வேண்டும் என்றும் லோக்சத்தா கட்சி வலியுறுத்துகிறது. அதேபோல் நகர ஏழைகளுக்கு ரூ 20,000-ம் நிவாரணம் வழங்க வேண்டுமென லோக்சத்தா கோருகிறது. இவை கருணை அடிப்படையிலான இழப்பீட்டுக்கான கோரிக்கை அல்ல, கடமையைச் செய்யத்தவறிய அரசின் தோல்விக்கான இழப்பீடாகக் கருதவேண்டும்.

சென்னை மாநகராட்சியின் கடந்த 4 ஆண்டு நிதிநிலை அறிக்கையை ஆய்வு செய்ததில் சுமார் ரூ 5000 கோடி மழை நீர் வடிகாலுக்காக மட்டும் செலவழிக்கப்பட்டது தெரிகிறது. சுமார் 93% பணிகளும் முடிந்துவிட்டதாக மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தெரிவித்திருந்தார்.

மழை ஏற்படுத்திய பாதிப்புகளை நாம் நேரடியாகவும், ஊடகத்தின் வாயிலாகவும் கண்டபோது, நம் வரிப்பணம் மட்டுமே மழை நீரில் வடிந்துள்ளது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

தமிழக முதல்வரால் மீண்டும் தோல்வியடைந்த முன்னெச்சரிக்கை

கடுமையான மழை பெய்யும் என்ற எச்சரிக்கையை மாநகராட்சியும், தமிழக அரசும் தீவிரமாக பார்க்கத் தவறிவிட்டது. செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை கூட மக்களுக்கு, குறிப்பாக அடையாறு, கூவம் நதிக் கரையில் வசிக்கும் மக்களுக்கு தகவல் சொல்ல வேண்டிய பணியை கூட அரசு சரியாக கையாளவில்லை. இன்று அடையாறில் உயிர்கள் மாண்டதற்கு அரசே பொறுப்பு.

ஒரு பக்கம் ‘டிஜிட்டல் இந்தியா’ போன்ற விசயங்களை பேசிக்கொண்டு, அரசாங்கம் ஒரு தகவலை கூட பொதுமக்களிடம் பகிராதது வேதனையளிப்பதோடு இந்த அரசின் செயலற்றதன்மையை காட்டுகிறது.

முதல் மழையின் முடிவில் நாம் நடத்திய பத்திரிக்கையாளார் சந்திப்பிலேயே கன மழை தொடர்ந்து பெய்வது அறிந்தும் செம்பரம்பாக்கம் ஏரியை முன்னரே திறக்காமல், கடைசி நிமிடத்தில் 18,000 கன அடி நீரை வெளியேற்றியது பேரிழப்புகளை உருவாக்கியது என்று சுட்டிக்காட்டியிருந்தோம். அதிலிருந்து அரசு ஒரு பாடமும் கற்கவில்லை என்பது வெளிப்படை. 18,000 கன அடி தண்ணீருக்கு ஏற்பட்ட ஆபத்தை சிறிதளவாவது உணர்ந்திருந்தால், 29,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. நவம்பர் 26 முதல் 29 வரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தலைமைச் செயலாளரின் ஒப்புதலுக்காக காத்திருந்ததையும், அவர் தமிழக முதல்வரின் ஒப்புதலுக்காகவே காத்திருந்ததும் வெளிப்படை.

இதற்கு மிக சிறந்த உதாரணமாக, 14.12.15 தமிழக அரசிடம் வெளியான அறிக்கையில் கூட, ‘நான் ஆணையிட்டுள்ளேன்’ என்ற தன் அதிகார குவியலையே ஜெயலலிதா பறைசாற்றுகிறார்.

ஆக செம்பரம்பாக்கம் ஏரித் திறப்பில் குளறுபடி செய்து பல உயிரிழப்புகளுக்கு காரணமான, மக்கள் ஒவ்வொருவரின் வாழ்வாதாரம், வாழ்நாள் சேமிப்பு அழிய காரணமான ஜெயலலிதா உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் லோக்சத்தா கோருகிறது.

Image Credits: bbc.com

Image Credits: bbc.com

முறைசாரா தொழில்களுக்கான இழப்பீடு

எப்படி பல குடும்பங்கள் எல்லா பொருட்களையும் இழந்து நிற்கிறதோ, அதே போல் முறைசாரா தொழில்களும் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறது. சிறு பெட்டிகடைகள், துணி சலவை கடைகள் – சிறு உதாரணங்கள். இவர்களின் இழப்பையும் அரசாங்கம் தனியாக கணக்கெடுத்து அவர்களுக்கும் இழப்பீடும், வட்டியில்லா கடனும் வழங்கவேண்டும் என்று வற்புறுத்துகிறது. கடையின் வரி கணக்கு எண் கொண்டுள்ள (TIN) கடைகளுக்கு, அவர்களின் ஆண்டு வருவாயை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு இழப்பீடு மற்றும் கடன் தொகையை நிர்ணயம் செய்யலாம். வரி கணக்கு எண் இல்லாதவர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.20,000 வழங்க வேண்டும் என்று லோக்சத்தா கோருகிறது.

தொழில்துறையினருக்கான இழப்பீடு

இந்த வெள்ளத்தால் தொழில்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இயந்திரங்களுக்குள் தண்ணீர் புகுந்து அவர்களின் வாழ்வாதாரமும், தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது. பெரும்பாலான தொழில்துறையினர் வங்கிகளில் கடன் பெற்று தொழில் நடத்துபவர்கள். அவர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய கடமை – ஒரு 6 மாதத்திற்கு அவர்களின் வங்கி தவணையிலிருந்து விடுப்பு. அவர்களின் தொழில் சரியான பின் அந்த தொகையை பெற்றுக்கொள்ள வங்கிகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்த வேண்டும். மேலும் இவர்களில் பலர் காப்பீடு எடுத்திருந்தாலும், அவற்றை காப்பீட்டு நிறுவனங்கள் விரைவாக ஆய்வு செய்யவும், இதற்கு வசதியாக அரசு ‘வெள்ள பாதிப்பு’ சான்றிதழ் கொடுத்து இதனை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் லோக்சத்தா கேட்டுக்கொள்கிறது.

காப்பீடு இல்லாத தொழில் நிறுவனங்களுக்கும் அரசு வட்டியில்லா மற்றும் குறைந்த வட்டி கடன்கள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். அதோடு வங்கியின் பாதி வட்டியை ஏற்றுக்கொள்ள அரசு முன் வர வேண்டும்.

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள்

ஏரிகள் மற்றும் பிற நீர்நிலைகள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதை அதிகாரிகள் கட்டுப்படுத்தத் தவறுவதோடு இல்லாமல் அரசியல் தலையீட்டினால் இதற்கு துணை போகின்றனர். இதனால் மழை காலத்தில் வெள்ளமும் வெயில் காலத்தில் குடிநீர் பஞ்சமும் ஏற்படுகிறது. ஏரிகளில் புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுப்பதோடு ஏற்கனவே உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வழி செய்ய வேண்டும். ஏரிகளில் வசிப்போருக்கு வேறு பகுதிகளில் வீடு கொடுத்தாலும் அங்கு தரமான பள்ளிக்கூடம், மருத்துவமனை மற்றும் அவர்களுக்கான வாழ்வாதாரம் குறித்து அரசு சிந்திக்க மறுக்கிறது.

இந்த பிரச்சனையை கூர்ந்து கவனிக்கும்போது – ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ள பெரும்பாலான வீட்டுப் பெண்கள் வீட்டு வேலைகள் செய்பவர்களாகவே உள்ளனர். அவர்கள் அந்த இடத்தை விட்டு காலி செய்ய அவர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை – வீட்டு வேலையோ அல்லது மற்ற வேலையோ கிடைக்குமா என்பது. இதற்கு லோக்சத்தா முன்வைக்கும் தீர்வு – நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே இவர்களுக்கும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கான வீடு. இது மட்டுமே இவர்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து அகற்றி, இவர்களின் வாழ்வை முன்னேற்றும்.

நகர ஏழையை குறிவைக்கும் டாஸ்மாக்

லோக்சத்தா தொடர்ந்து இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்கையில் அப்பட்டமாக தெரிந்த விசயம் – எல்லா குடிசைப் பகுதிகளையும் நான்கு திசையிலும் சூழ்ந்துள்ள டாஸ்மாக் கடை. லோக்சத்தாவின் கொள்கையான தீவிர மதுக்கட்டுப்பாடு சொல்லும் முக்கியமான ஒன்று – ‘ஏழைகளுக்கு எட்டாத வகையில் மது அமைய வேண்டும் என்பதே’. ஆனால் தமிழக அரசாங்கம் குறிவைத்து அந்த ஏழை மக்களின் பணத்தை பிடுங்குவதில் குறியாய் இருப்பது தெரிகிறது. இந்த பகுதிகளில் இருக்கும் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் லோக்சத்தா கோருகிறது.

அதே சமயம் இந்த வெள்ளத்தில் அரசு எடுத்த ஒரே முன்னெச்சரிக்கை நடவடிக்கை – டாஸ்மாக் கடைகளில் போதுமான சரக்கு இருப்பதுபோல் பார்த்துக்கொண்டது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

சொத்து வரி திரும்பத் தர வேண்டும்

சென்னை மாநகராட்சியிலிருக்கும் 200 வார்டுகளில் 75% வார்டுகள் மாநகராட்சி மற்றும் தமிழக அரசின் அலட்சியத்தால் ஏதோ ஒரு பாதிப்புக்கு உள்ளானது. சென்னை மாநகராட்சிக்கு நாம் செலுத்திய சொத்து வரியும் இவர்கள் செலவழித்துள்ள தொகையில் ஒரு பங்கு வகிக்கிறது. மாநகராட்சியின் அலட்சியத்திற்கு இழப்பீடாக கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் கட்டிய ‘சொத்து
வரியை’ மக்களிடமே திருப்பி தர வேண்டும் என்ற கோரிக்கையை லோக்சத்தா கட்சி வைக்கிறது.

தேசிய துறைகளை அலைக்கழித்த தமிழக அரசாங்கம்

தமிழகத்தை வெள்ளத்தில் இருந்து மீட்டெடுக்க வந்த பல துறைகளுக்கும் சரியான தகவல்கள் தராது அவர்களை அலைக்கழித்த சோகமெல்லாம் தமிழகத்தில் மட்டும்தான் நடக்கும். டிச 5, 100 படை வீரர்கள் எந்த இடத்தில் உதவி தேவை என்று செய்வதறியாது 10 மணி நேரம் காக்கவைக்கப்பட்டார்கள்.

அதே போல் நிவாரண உதவிகள் எங்கு தேவை, எங்கிருந்து என்ன வருகிறது என்பதை கண்காணித்து உதவிகள் செய்திருக்க வேண்டிய அரசாங்கமும், ஆளுங்கட்சியும் அதனை தடுப்பதிலும், அதிலும் விளம்பரம் தேடுவதிலுமே குறியாக இருந்தார்கள். நாம் பணி செய்த பாடிக்குப்பம், மணிமங்களம், வியாசர்பாடி போன்ற பகுதிகளில் தன்னார்வலர்களின் பணி தடுக்கப்பட்டது.

இளைஞர் படையும், தன்னார்வ தொண்டும்

சமூக ஊடகங்களின் துணைகொண்டு ஒரு இராணுவம் போல உண்மையில் செயல்பட்டது இளைஞர் படையும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும்தான். யாருக்கு என்ன தேவையோ அது சில நிமிடங்களில் சென்று சேரும் ஆச்சர்யம் தொடர்ந்து நிகழ்ந்தது. முதலில் உணவில் துவங்கி, பின் தண்ணீர், மருத்துவ தேவை, போர்வை, மருந்து, குழந்தைகளுக்கான டயபர், பெண்களுக்கான நாப்கின், உள்ளாடைகள் என ஒவ்வொரு விசயமாக பார்த்து பார்த்து செய்தது இந்த படை. அதோடு நில்லாமல் இன்று வரை அவர்களுக்கான மறு வாழ்விற்கு தேவையான அத்தனை பொருட்களையும் தொடர்ந்து செய்து வருகிறது. இந்த எல்லா பணிகளிலும் லோக்சத்தா ஒரு பங்காற்றியது பெருமைகொள்ள செய்கிறது.

ஆனால் இதோடு இவர்கள் பணி முடிவடையவில்லை என்றும் லோக்சத்தா கட்சி கருதுகிறது. அரசியலை நல்லவர்கள் புறக்கணித்ததன் விளைவையே நாம் இன்று சந்தித்து வருகிறோம். தீயவர்கள், முட்டாள்கள், குற்றவாளிகளிடம் நம்மை ஆட்சி செய்யும் அதிகாரம் வழங்கிய காரணத்தில்தான் இவ்வளவு பேரிழப்பு நமக்கு ஏற்பட்டது. இன்னொரு முறை இது நடக்கக்கூடாது என நாம் நினைத்தால் நாம் செய்ய வேண்டிய முதல் பணி – அரசியலில் இறங்குவது மட்டுமே. அரசியல் என்பது சேவை என்பதை மறுபடியும் மீட்டெடுக்க லோக்சத்தா கட்சி அனைவரையும் அரசியல் களத்திற்கு அழைக்கிறது.

Categories: Press Releases
Tags: , , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: