ஊழல் விசாரணையை நீர்த்துப்போகச் செய்யும் தமிழக அரசாணையை லோக் சத்தா கட்சி எதிர்க்கிறது – சார்பற்ற லோக் ஆயுக்தா வேண்டுமென வற்புறுத்துகிறது

Friday, February 5th, 2016 @ 5:12PM

அண்மையில் தமிழக அரசு அரசாணையொன்றில், ஊழல் செய்த தமிழக அரசதிகாரிகளை விசாரிக்கும் முன், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையானது கண்டிப்பாக அரசிடம் அனுமதி பெற வேண்டுமென ஆணையிட்டிருந்தது. இவ்வரசாணையை லோக் சத்தா கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இது விசாரணைத் துறையின் அதிகாரத்தையும் வீச்சையும் நீர்த்துப்போகச் செய்யும் குறுக்குவழியே ஆகும். அனைவரையும் சீராக நடத்துகிறோம் என்ற போர்வையில், ஊழலுக்கெதிரான அரசதிகாரங்களை மையப்படுத்தும் முயற்சி மட்டுமே.

மக்கள் நலனில் அரசு சீரிய கவனம் செலுத்துவதாக இருந்தால், அனைவருக்கும் சீரான விசாரணையை நடத்துவதாக இருந்தால், உயரதிகாரிகளுக்கு சட்டத்திலிருந்து பாதுகாப்பு அளித்திருக்காது. ஆனால் அனைத்து அதிகாரிகளுக்குமே விசாரணையிலிருந்து பாதுகாப்பு அளிப்பதென்பது, அறிவுக்கு முரண்பாடாகவும் கேலிக்கூத்தாகவும் இருக்கிறது. இது சற்றும் ஏற்புடையது அல்ல.

ஊழலுக்கெதிரான களப்பணியாளர்கள், ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்குக் கடுமையான சட்டங்களையும், விரைவான நடவடிக்கைகளையும் கொண்டுவர வலியுறுத்திக் கொண்டிருக்கையில், ஊழலதிகாரிகளைப் பாதுகாக்கும் நோக்கில் அரசு இத்தகைய ஆணையைப் பிறப்பித்திருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது விசாரணையையும், நீதி வழங்கலையும் நீட்டிப்பதற்கும் தடை செய்வதற்குமான உத்தியே ஆகும். இந்த அரசாணை, ஆட்சியமைப்பில் மேலும் பக்கச்சார்பையும், சிவப்பு நாடாத்தனத்தையும் அதிகரிக்கச் செய்து, ஊழலதிகாரிகளுக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்குமான இணக்கத்தைப் பெருக்கமட்டுமே செய்யும்.

தமிழகத்திற்கென்று மாநில அளவில் தனிப்பட்ட விசாரணைத் துறை(லோக் ஆயுக்தா) ஓன்றை அமைப்பதும் மாவட்ட அளவில் ஒரு குறைதீர்ப்பாயம் அமைப்பதும் மிக அவசியமானது. ஊழலைத் தடுக்கும் துறைகளும் குழுக்களும் ஆட்சிக்குச் சார்பற்றதாகவும், அரசிடம் அனுமதியும் இசைவும் கோர நேராத வண்ணமும் அமைக்கபெற வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுக்களில் விரைவான செயல்பாடு மூலமே நீதி கொண்டுவரமுடியும். அரசனுமதிக்குக் காத்திருக்கவேண்டுமேயானால், குற்றவாளிகள் தப்பிப்பதற்கே அது வழிகோலும்.

இதே போன்று மத்திய அரசு ஊழல் தடுப்புச் சட்டத்தில், தற்போது தமிழக அரசு ஆணையிட்டது போன்ற ஒரு பிரிவைச் (17A)சேர்க்க முற்பட்ட போது லோக்சத்தா கட்சி கடுமையாக விமர்சித்து எதிர்ப்புகளைத் தெரிவித்து இருந்ததை நினைவு படுத்த விரும்புகிறோம். லோக்சத்தா அனைத்து மக்களவை உறுப்பினர்களையும் அந்த சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டது.

Categories: Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: