ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் லோக்சத்தா கட்சியின் நிறுவனர் டாக்டர். ஜெயபிரகாஷ் நாராயண் உரை

Thursday, February 11th, 2016 @ 11:44PM

பிப்ரவரி மாதம் 6 மற்றும் 7-ம் தேதிகளில், ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், லோக்சத்தா கட்சியின் நிறுவனர் டாக்டர் ஜெயபிரகாஷ் நாராயண் பங்கேற்றார். பல முக்கியமான கட்சி தலைவர்கள் , தொழிலதிபர்கள், ஹிந்தி பட பிரமுகர்கள், கலைஞர்கள் மற்றும் அமெரிக்காவின் தலை சிறந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் இதில் பங்கேற்று, இந்தியாவின் வளர்ச்சி குறித்து பேசினர். 750-க்கும் மேலான மாணவர்கள் மற்றும் இதர மக்கள் இதில் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்தின் முக்கியமான பிரமுகர்களில் ஒருவரான, டாக்டர் ஜெபியுடன் , மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் மற்றும் ஒரிசாவின் பிஜு ஜனதா தள கட்சியை சேர்ந்த நான்கு முறை எம்.பியான பைஜயன்ட் ‘ஜெய்’ பாண்டா ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் “இந்திய அரசியல் – தீர்வுப்பாதையின் சந்திப்புகளில்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

JP speaking at Harvard photo_1

டாக்டர் ஜே. பி யின் உரை அவையினரால் பெருமதிப்புடனும் எழுச்சியுடனும் கேட்கப்பட்டது. அவர் தம் உரையில், “இந்தியா மாபெரும் நாடாக இருப்பதால், அதைப்பற்றி முன்வைக்கப்படும் கருத்துகள் ஒரே நேரம் உண்மையாகவும் பொய்யாகவும் தோற்றமளிக்கின்றன. பற்பல துறைகளில் பெரும் முன்னேற்றங்களையும் பாய்ச்சல்களையும் அடைந்திருக்கும் போதிலும், பொதுமக்களின் பல அடிப்படைத் தேவைகளை கண்காணா வண்ணம் உள்ளோம். சீனா பெற்றுவரும் அதீத பலத்தால் கவலையுற்றே, இந்தியா முன்னேறி வெற்றி காண வேண்டும் என உலகமே விழைகிறது. இருபத்தோராம் நூற்றாண்டின் பொருளாதாரத்தில் திளைக்க விழையும்போது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரசியலில் சிக்கித் தவிக்கலாகாது. நம்முடைய இலட்சியங்களுக்கும், அவற்றிற்கான திட்டங்கள் மற்றும் அதன் பயன்களுக்கும் இடையே பிளவு பெருகியபடி உள்ளது. எடுத்துக்காட்டாக, கல்வித்துறையில் நமது கவனம் முழுவதும் மாணவர் சேர்க்கை அளவீட்டில் உள்ளதே ஒழிய, கல்வித்தரத்தில் சற்றும் இல்லை. ஒ.இ.சி.டி நிறுவனம் மேற்கொண்ட PISA மதிப்பாய்வில் நம் நாட்டின் கல்வித்தரம் உலகிலேயே அடிமட்டத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.” என்று அறிவுறுத்தினார்.

மேலும், “சுகாதாரத் துறையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் செலவினங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தி விழுக்காட்டில், வெறும் 4% மட்டுமே என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இது அமெரிக்காவில் நிலவும் பங்கை விட 4 மடங்கு குறைவானது, ஏனைய முன்னேறிய நாடுகளின் பங்குகளை விட 2 மடங்கு குறைவானது.”

“அமெரிக்கத் தேர்தலில் கல்வி, சுகாதாரம் போன்ற திட்டங்களில் வேட்பாளர்கள் பொது விவாதம் நடத்துகையில், இந்திய அரசியல்வாதிகள் இடையே அத்தகைய பொது மேடைக்கான வாய்ப்பே இல்லாமல் உள்ளது” என்று எடுத்துரைத்து, அவையினரின் பலத்த கரவோசையையும் ஆதரவையும் பெற்றார்.

“சென்ற காலங்களில் உறுதியான மாநில அரசுகள் இருந்த நிலை மாறி, தற்போது மெல்ல மெல்ல அவற்றின் அதிகாரங்கள் மத்திய அரசில் மையப்படுத்தப் படுகின்றன. நமது ஜனநாயகம், வெறுமே வாக்களிக்கவும் கூச்சலிடவும் பயன்படும் ஆடுகளமாகவே உள்ளது.”

இறுதியாக, மூன்று இன்றியமையாத கடமைகளை அறிவுறுத்தித் தன் உரையை முடித்தார். “ஒன்று, டெல்லியின் அதிகாரம் மைய அரசு மற்றும் வெளிநாடு சார்ந்ததாக மட்டும் இருக்கச் செய்ய வேண்டும். இரண்டு, மாநில அரசுகள் தத்தம் அரசமைப்பையும், ஆட்சிமுறைகளையும் மாற்றியமைத்துக்கொள்ள கூடுதல் இடம் அளிக்கப்பட வேண்டும். பதிலுக்கு, அவை வட்டார அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கச் செய்ய வேண்டும். ஆட்சியமைப்பில் தமக்கான பங்கு குன்றும் போது, மக்கள் தொழில்முறை போராளிகளாகவும், இரந்து பெறுபவர்களாகவும் மாறுகிறார்கள். மூன்று, ஆட்சிப்பணியாளர்களை திறன்மேம்பாடு செய்து, மக்கள் நலனே குறியாக உழைக்கச் செய்ய வேண்டும். அவர்களிடையே தனித்திறனை வளர்க்கவும், பொறுப்புணர்வை உறைக்கச்செய்யவும், நேர்மையான அமைப்பு முறையை நிலைக்கச் செய்யவும் வேண்டும்.”

Link to video: https://www.youtube.com/watch?v=k8XASEekNj0

Categories: Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: