தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணத்தை தடுக்க சாதி வெறியர்கள் கொலைவெறி – லோக்சத்தா கட்சி கண்டிக்கிறது

Monday, March 14th, 2016 @ 9:01PM

​​தமிழகத்தில் சாதி வெறியர்கள் சாதி மறுப்பு திருமணம் புரிந்தவர்கள் மீதான கொலைவெறி தாக்குதல்களை லோக்சத்தா கட்சி கண்டிக்கிறது. இந்த வன்முறைகளை தடுக்க அரசும், காவல்துறையும் இந்த சாதி வெறியர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் ​அனைத்து கட்சிகளும் இந்த கொடுமைக்கு எதிராக குறல் கொடுக்க வேண்டும் எனவும் கோருகிறது. இதற்குத் தீர்வு நாட்டின் இளைய தலைமுறையினர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வதே என இளைய தலைமுறையினருக்கு லோக்சத்தா கட்சி அறிவுறுத்துகிறது.

சாதி ரீதியான பாகுபாடுகளை களைய சாதி மறுப்பு திருமணங்கள் பெரும் பங்காற்றுகின்றன. இந்நிலையில் அண்மைக்காலங்களில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்வோரின் மீது குறிப்பாக திருமணம் செய்யும் ஆண் தலித்தாக இருக்கும் பட்சத்தில் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துகின்றனர். இது இளவரசன் தொடங்கி கோகுல்ராஜ், ​ ​செந்தில், சங்கர் என தொடர்கிறது​. இது போன்ற கொலைவெறி தாக்குதல்கள் அந்த காதல் தம்பதியை மட்டுமல்லாமல் சாதி மறுப்பு திருமணம் செய்யும் எண்ணம் உள்ளவர்களின் மனதில் அச்சத்தை ​ஏற்படுத்தி அவர்கள் அவ்வாறு செய்ய விடாமல் தடுக்கும் நோக்கிலேயே நடக்கிறது.

இது போன்ற தாக்குதல் நடத்தும், வன்முறையை தூண்டும் விதமாக பேசும் சாதி அமைப்புகளை, ​ ​கட்சிகளை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும். தன் வாழ்க்கை​த்​ துணையை தேர்வு செய்வது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. அதில் தலையிடுவோரை தண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கும் லோக்சத்தா கட்சி தன் கண்டனத்தை தெரிவிக்கிறது. இது போன்ற சாதி வெறியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் சாதி அடக்குமுறை வெகுவாக குறைந்திருக்கும். சாதி மறுப்பு திருமணம் புரிந்து அதனால் கொலை செய்யப்பட்ட இளவரசன் இறந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னமும் அவரின் மரணத்திற்கு நீதி வழங்கப்படவில்லை.

இந்த நிலைக்கு கோடிக்கணக்கில் வழக்குகளை நிலுவையில் வைத்துள்ள நீதித்துறையும் ஒரு பங்கு வகிக்கிறது. வழக்குகளை, முக்கியமாக இதுபோன்ற மொத்த சமுதாயத்தையும் பாதிக்கவல்ல வழக்குகளை, விரைந்து முடிக்குமாறு நீதித்துறையை லோக்சத்தா வேண்டுகிறது.

இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண சாதி வேறுபாடுகள் ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு இளைய தலைமுறை சாதி, மத, இன வேறுபாடு பார்க்காமல் சாதி மறுப்பு திருமணங்களை புரிந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் சாதி சங்கங்கள் மற்றும் சாதி கட்சிகளை புறக்கணித்து நாட்டின் வளர்சிக்காக உழைக்கும் அமைப்புகள் மற்றும் கட்சிகளை ஆதரிக்க வேண்டும். இந்த விசயத்தில் அரசியல் கட்சிகளும் அவர்களின் சாதி வாக்கு வங்கிகளுக்கு பாதிப்பு வரும் என கள்ள மவுனம் சாதிக்கிறது. ​சமூகநீதி வழங்குவதில் முன்னோடி மாநிலம் என்று பெயரெடுத்த தமிழக வரலாற்றை மனதில் கொண்டு ​அனைத்து கட்சிகளும் இந்த விசயத்தில் சாதி வெறியர்களுக்கு எதிராக குரல் கொடுத்து சாதி மறுப்பு திருமணத்தை ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Categories: Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: