கருகிய பயிருக்கும் உயிருக்கும் நீதி கேட்டு…

Tuesday, February 26th, 2013 @ 2:37PM

இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனது. காவிரியில் கர்நாடகத்திடமிருந்து கிடைக்க வேண்டிய நமது பங்கு தண்ணீரும் கிடைக்கவில்லை. விளைவு? உழுது, நாற்றுவிட்டு, நீர்பாய்ச்சி, மருந்தடித்து, களையெடுத்து அறுவடைக்கு வேலை செய்ய வேண்டிய விவசாயிகள் ஆர்ப்பாட்டம் போராட்டம், ரயில் மறியல் என வயலுக்கு வெளியே வியர்வை சிந்தி வேலை செய்ய வேண்டிய அவலநிலை ஒரு பக்கம், போட்ட முதல் காய்ந்து போன கவலையில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் மறுபக்கம்.

இந்த சூழலில் சென்னை, சேப்பாக்கத்தில் கடந்த ஜனவரி 8-ம் தேதியன்று கருகிய பயிருக்கும், உயிருக்கும் இழப்பீடு, நீதி கேட்டு மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் கூட்டமைப்பு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது. இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் தொடங்கி வைக்க, இந்திய மக்கள்இயக்க தலைவர் நல்லுசாமி அவர்கள் உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார். கூட்டத்தில் பயிர் கருகியதால், தன்னுயிரை மாய்த்துக் கொண்ட விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

cauvery-protest

தண்ணீர் தரவேண்டிய நிலையில் உள்ள கர்நாடகாவில் அரசியல் கட்சிகளிடையேயும், பொதுமக்கள், அமைப்புகளிடம் ஒற்றுமை இருக்கிறது. ஆனால், தண்ணீர் பெற வேண்டிய நிலையில் உள்ள தமிழகத்தில் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் பிரிந்து கிடக்கின்றனர். “காவிரி நீருக்கான போராட்டம் என்பது ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும்.” என்பது பேராட்டத்தில் பேசிய பல தலைவர்கள் வலியுறுத்திய கருத்தாக இருந்தது.

500 பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிகழ்விற்கு 1000 பேருக்கு மேல்கலந்து கொண்டது பாதிப்பின் தீவிரத்தை உணர்த்துவதாக இருந்தது. தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்டபல மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள், விவசாய சங்கத்தலைவர்கள் கலந்து கொண்டனர். காலையில் 8 மணிக்குத் துவங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு மிகுந்த எழுச்சியோடுநிறைவடைந்தது. கூட்டநிறைவின் போது உண்ணாவிரத ஒருகிணைப்பிற்காக பணியாற்றிய லோக் சத்தா கட்சித் தோழர்கள், மே17 இயக்கத்தோழர்களுக்கு விவசாயிகள் எழுந்து நின்றுகையலி எழுப்பி நன்றி தெரிவித்தது நம்மைநெகிழச்சி அடைய வைப்பதாக இருந்தது.

மாலையில் உண்ணாவிரதம் முடிந்ததும்விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வலிவலம் சேரன், பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க குழுமத்தின் பொதுச் செயலாளர் சத்திய நாராயணன், பொருளாளர் பாலகிருஷணன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன் ஆகியோர் தமிழக ஆளுநரைச் சந்தித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கைள் அடங்கிய மனுவை அளித்தனர். மத்திய அரசிற்கு விவசாயிகளின் துயரை எடுத்துரைக்குமாறு ஆளுநரிடம் வேண்டிக் கொள்ளப்பட்டது. ஆவண செய்வதாக ஆளுநர் உறுதியளித்தார். மக்கள் தொகையில் பாதி பேருக்கு மேல் சார்ந்திருக்கும் விவசாயத்தின் பிரச்னைகள் குறித்து அரசாங்கத்தின் அலட்சியம் இனியும் தொடருவது நியாயமல்ல. “ஒன்றுபட்டால்உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே” என்பதை மனதில் வைத்துவிவசாய சங்கங்கள் செயல்பட்டால் தான் விவசாயத்திற்கு விடிவு பிறக்கும், விவசாயிகளின் வாழ்வு செழிக்கும்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  1. காவிரியில் தமிழகத்தின் தொன்மை உரிமைகள் மீட்கப்பட வேண்டும். மீட்டெடுக்க தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் சக்தியும் திரள வேண்டும்.
  2. காவிரி அணைகளின் நிர்வாகம் தன்னாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
  3. மாண்புமிகு தமிழக முதல்வரின் சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு ஆதரவு மற்றும் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டுகோள்.
  4. விவசாயிகளின் பயிரிழப்பிற்கும் உயிரிழப்பிற்கும் உரிய நீதியும், நஷ்டஈடும் வழங்க வேண்டும்.
  5. வாழ்வா சாவா எனப் போராடும் விவசாயிகளின்கடன்களைஅரசுகள் ஈடுசெய்தல்.

காவிரி நீருக்கான போராட்டம் என்பது ஒரு மக்கள் இயக்கமாக
மாற வேண்டும்.

– (களத்திலிருந்து) செந்தில் ஆறுமுகம்

Categories: Article, Feb 2013, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: