காவல்துறை சீர்திருத்தங்கள் – 1

Friday, March 8th, 2013 @ 8:56AM

இரவு 10 மணி. சென்னை 100 அடி சாலையில் இருக்கும் பிரதான சிக்னல் ஒன்றில் சிவப்பு விளக்கு எரிந்ததால் தான் வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி பச்சைக்காக காத்திருந்தார் அவர். பின்னால் வந்தவர்கள் சிக்னலை மதிக்காததோடு பச்சைகாக காத்திருந்த இவரை ஒரு ஏளனப் பார்வையாலும், இவர் வழியை மறிப்பதாய் திட்டியும் கடந்து சென்றனர். கடந்து சென்ற இரு சக்கர வாகனங்களில் ஒன்று வலது புறத்திலிருந்து வந்த கார் ஒன்றின் மேல் இடித்தது. இறங்கி பார்த்தபோது இடித்த இரு சக்கர வாகன ஓட்டுனர் நிறைய குடித்திருந்தார். தலைகவசமும் அணியவில்லை. அங்கிருந்த எல்லாரும் தவறு செய்யாத அந்த கார் ஓட்டுனரை அடிக்க ஆயத்தமானார்கள். வந்த காவலரும் தவறு செய்தவரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் வாகனத்தின் மீது ஒட்டப்பட்டிருந்த ஒரு கட்சியின் படமும், கொஞ்சம் பணமும் வேலை செய்தது.

Police reformsமேற்சொன்னவை கதையல்ல. நாம் சாலையில் பார்க்கும் சம்பவம். நல்லது செய்ய நினைத்து சிக்னல் மதிப்பவர் ஏளனம் செய்யப்படுகிறார். சிக்னலை மதியாமல், குடித்துவிட்டு ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் எளிதாக தப்பிக்கிறார். இது இதோடு முடிவதில்லை. பெரும்பாலான இடங்களில் நன்மை செய்வது மிகுந்த சிரமமாகவும், தீமை செய்வது மிகுந்த சுலபமாகவும் இருக்கிறது. இந்தியாவை ஆள்வோரின் ஆட்சி முறையால் ஏற்பட்ட அவலம் இது, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அரசியலில் குற்றவாளிகள், அதிகார குவியல், பணபலம், திறமையற்ற நீதித்துறை என இந்த அவலம் எங்கும் தொடர்கிறது. இந்த அவலங்களின் உச்சம் சட்டத்தின் ஆட்சியை அமுல்படுத்தாததாலும் ஒரு நெருக்கடி நிலையை உருவாக்குகிறது. சட்டத்தின் ஆட்சி வலுப்பெற்று உண்மையான ஜனநாயகம் காக்கப்பட நமது உடனடி முக்கிய தேவை காவல்துறை மற்றும் நீதித்துறை சீர்த்திருத்தங்கள்.

காவல் துறை சீர்த்திருத்தம் என்பது ஏதோ ஒரு இடத்தில் மட்டும் செய்வதால் நடவாது. நம் தேவை முதலில் ஒரு விரிவான அணுகுமுறை.

காவல்துறை அன்றும் இன்றும்

சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில் வெள்ளையரின் முகவராக மட்டும் இருந்துவந்தனர் காவலர்கள். வெள்ளையர் இட்ட ஆணையை கண்மூடி செய்யும் ஆட்களாக இருந்தனர். சுதந்திரத்திற்குப் பின் அரசின் முகவராகவும், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவர்களாகவும், இந்த சமுதாயத்தின் பிரதிநிதியாகவும் அவர்கள் இருந்து வருகிறார்கள். சமுதாயத்தின் பிரதிநிதியாக இருப்பவர்கள் மக்களின் சேவகர்களாக இருக்கிறார்களா என்பது மிகப்பெரிய கேள்வி.

புள்ளி விவரங்கள்

1961 ஆம் ஆண்டு 64.8% இருந்த குற்ற தீர்ப்பு எண்ணிக்கை 2005 ஆம் ஆண்டு 42,4% குறைந்துள்ளது. ஒரு புறம் குற்ற எண்ணிக்கைகள் உயர்ந்துகாண்டே செல்ல, குற்றம் புரிந்ததற்கான தீர்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் 2007 ஆம் ஆண்டு மட்டும் 1,72,754 இந்திய தண்டனை சட்ட குற்றங்களும் (ஐ.பி.சி) 4,74,963 சிறப்பு மற்றும் உள்ளுர் குற்றங்களும் (எஸ்.எல்.எல்) நடந்ததாக தமிழக காவல்துறை தெரிவிக்கிறது அனைத்து விதமான குற்றங்களும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணமே உள்ளன.

மக்கள் பார்வை

கூச்சம், பயம், வெறுப்பு இந்த மூன்று காரணங்களில் ஏதாவது ஒன்று காவல் நிலையத்தின் உள்ளே மக்கள் நுழையாத வண்ணம் செய்கிறது. இந்திய ஊழல் படிப்பினை ( இந்திய கரப்ஷன் ஸ்டடி) ஆய்வின்படி 80% மக்கள் தங்கள் தே(சே)வைக்கு லஞ்சம் கொடுத்ததாக தெரிவிக்கின்றனர். 87% மக்கள் காவல் துறையில் ஊழல் மிகுந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். 2005 ஆம் ஆண்டு மட்டும் சிறிய அளவிலான ஊழல் தொகையாக போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவில் 3899 கோடி வசூலிக்கப் பட்டுள்ளது. நாட்டில் 79% மக்கள் காவல்துறை மீது அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

காவல்துறை என்றாலே மக்களுக்கு ஒரு மோசமான பார்வையே உள்ளது. காவல்துறையில் குறைவான ஆற்றல், செயல்திறன், குடிமக்கள் மீது உணர்வின்மை, முரட்டுத்தனம், தெரிந்தவர்களுக்கு சகாயம் இது போன்ற பார்வையே உள்ளது.

சமீபத்திய தொழில்நுட்ப வளர்ச்சியில் அவர்கள் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள். அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். ஒரு பெரிய போராட்டத்தையோ, ஆர்ப்பாட்டத்தையோ கட்டுப்படுத்த முடியாதவர்களாக இருக்கிறார்கள். இதையெல்லாம் விட சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் அவர்கள் பாரபட்சம் காட்டுபவர்களாய் இருக்கிறார்கள் என்பது வேதனை. பணம், பலம் படைத்தவர்களுக்கு ஒரு மாதிரியும் அது இல்லாதவர்களுக்கு வேறு மாதிரியும் சட்டம் பணிகிறது.

காவல் துறை மறுபக்கம்

மேலே சொன்ன காரணங்களுக்கு ஒரு மறுபக்கம் உண்டு. ஒரு உண்மை உண்டு. காவல்துறைக்கு பணிக்கப்படும் சேவைகள். போக்குவரத்து ஒழுங்கு,குற்ற விசாரனை, போராட்டம், சட்ட ஒழுங்கு, சிறியகுற்றம் தடுத்தல், முக்கிய நபர்களுக்கான காவல், கூட்டங்களுக்கான காவல், சொத்துக்களை பாதுகாத்தல் நீதிமன்ற ஆணைகள் சேர்ப்பு, சாட்சிகளை, குற்றவாளிகளை அழைத்து வருதல், திட்டமிட்ட குற்றங்கள் முறியடிப்பு, தீவிரவாதம், கடத்தல், கிளர்ச்சி, இன்னபிற.

இவ்வளவு பணி செய்யும் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மொத்த உள்நாட்டு வருவாயில் (GDP) 0.2% விட குறைவு. கடுமையான மனித வள பற்றாக்குறை. இந்தியா முழுக்க அனுமதிக்கப்பட்டு நிரப்பப்படாத காலியிடங்கள் 1.01,898. கடந்த அக்டோபர் (1.10.2012) நிலவரப்படி தமிழகத்தின் காலியிடங்கள் மட்டும் 21,911 (அனுமதிக்கப்பட்ட இடங்கள் 113718). பணி நியமனத்தில் அதிக தன்னாட்சி, திட்டமிடுதலில் குறைந்த மனிதஆற்றல் உபயோகம்!

காவலர்களில் கான்ஸ்டபிளாக இருக்கும் 88% பேருக்கு விசாரணை நடத்தும் அதிகாரம் கிடையாது. கண்கள் மூடி தங்கள் உயரதிகாரிகள் சொல்வதை கேட்க வேண்டிய மறைமுகமான “ஆர்டர்லி” முறையில்தான் அவர்கள் உள்ளார்கள். மீதமுள்ள 12% உயரதிகாரிகளுக்கு விசாரிக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால் அவர்களுக்கு சுதந்திரம் இல்லை. தொடர் குறுக்கீடு. பல நேரம் தீய அரசியல். மொத்தத்தில் அதிகாரத்திற்கும், பொறுப்பிற்கும் உறவில்லாது இது நம்முடைய பணி என்ற உரிமையும் இல்லாது காவல்துறை தொடர் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

இதற்கு தீர்வுதான் என்ன? அடுத்த இதழில்.

– ஜெகதீஸ்வரன், லோக் சத்தா கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர்

Categories: Article, Feb 2013, Whistle
Tags: ,

1 Comment to "காவல்துறை சீர்திருத்தங்கள் - 1" add comment
LOGANATHAN
September 15, 2013 at 7:19 pm

நண்பர்களே நாளைய இந்தியாவின் தூண்களே, நன்றாய் சிந்தியுங்கள், போக்குவரத்து காவல் துறை பற்றிய சில செய்திகள்.

போக்குவரத்து காவல் துறை யின் அணுகுமுறைகள் மற்ற அனைத்து துறைகளை விட மிகவும் பின்னடைந்துள்ளது.

காரணம்
1. தங்களுக்கென ஒரு அதிகாரத்தை அதிகாரிகளே எடுத்துகொள்கிண்றனர்.
2. தங்கள் மேலதிகாரிகளுக்கு மட்டுமே வேலை செய்பவர்களை அவர்களது அலுவலகத்தில் மட்டுமே இருக்கவேண்டும்.
3. பொதுமக்களுக்கென அதிகாரிகள் செயல்படுவதில்லை.
4. பொதுமக்களுக்கு உதவி செய்வதை விட, பொதுமக்களை எப்படியெல்லாம் மிரட்டுகிண்றனர்.
5. காவல்துறை பொதுமக்களிடம் நம்பிக்கை இழந்துள்ளது.
உதாரணம்.
போக்குவரத்து காவல்துறை பற்றி ஏற்கனவே புகார் பதிவு செய்து இருந்தேன், என் பெயர் லோகநாதன், 7 கஸ்பாபாசூர் வாய்க்கால் வீதி, பாசூர் 638154 என்ற எந்து முகவரியிலிருந்து முதலமைச்சர் அம்மா அவர்களுக்கும், மாவட்ட காவல்துறை ஆணையர் அவர்களுக்கும் அனுப்பியிருந்தேன். இதுவரை எந்த தகவலும் ஈ-மெயிலுக்கு வரவில்லை. ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு துணை ஆய்வாளார் அவர்கள் மட்டும் எனது வீட்டிற்கு வந்து விபரங்களை பெற்று சென்றார். அதன் பிறகு திரு. ராஜ் போக்குவரத்து காவல்துறை டி.எஸ்.பி-ஈரோடு அவர்கள் என்னை தனது அலுவலகத்திற்கு வறுமாறும், வந்து என் புகாரை திரும்ப பெற்றுக்கொள்ளவும் வேண்டுமென மிரட்டினார். இல்லையென்றால் என்மேல் வழக்கு தொடரப்போவதாகவும் மிரட்டினார்.

இதுவரை மாவட்ட காவல்துறை ஆணையர் அவர்கள் போக்குவரத்து துறை டி.எஸ்.பி – ஈரோடு அவர்கள்மேல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அப்பட் எடுத்திருந்தால் எனக்கு ஏன் அது பற்றிய தகவல் தெரிவிக்கவில்லை என்றும் இனும் சில தினங்களுக்குள் தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு நினைவுறுத்தவுள்ளேன்

a.loganathan 7 kaspapasur vaikkal street, pasur post, erode district, tamilnadu.638154
verifyinfoin@gmail.com

Leave a Reply

%d bloggers like this: