சென்னை குடிநீர் வாரிய குறைதீர்ப்பு கூட்டம் – ஒரு பார்வை

Saturday, March 16th, 2013 @ 9:06AM

சென்னை குடிநீர் வாரியத்தின் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 முதல் மதியம் 1 மணி வரை 15 மண்டல அலுவலகங்களிலும் நடைபெறும். பொது மக்கள், தன்னார்வ நிறுவனங்கள், குடியிருப்பு சங்கங்கள் மற்றும் அந்தந்த பகுதியை சேர்ந்த பிரதிநிதிகள் ஆகியோர் பத்திரிக்கை செய்தி மூலம் அழைக்கப்படுவார்கள். இதில் பொது மக்கள் தங்களுடைய குடிநீர், கழிவு நீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள் சம்பந்தப்பட்ட சந்தேகங்களையும் இக்கூட்டத்தில் தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம். இந்த திறந்தவெளி கூட்டங்கள் பொது மக்களுக்கு பயன்தரும் வகையில் அமைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதி அலுவலக கூட்டமும் ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் என்றது சென்னை குடிநீர் வாரியத்தின் இணையதளம்.

இந்த செய்தியை கண்ட நாம் கள ஆய்வு செய்ய தேர்ந்தெடுத்த இடம் அம்பத்தூர் மண்டலம் – குடிநீர் வாரியம், டி.எஸ். கிருஷ்ணா நகர்.

அலுவலக மாடியில் நிறைய இருக்கைகள் இருக்க அனைத்து இருக்கைகளுமே காலியாக இருந்தன. ஒரு அறையிலிருந்து வெளியே வந்த ஒரு அதிகாரி குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்த நம்மை உள்ளே அழைத்து சென்றார். நாம் அம்பத்தூர், முகப்பேர் தொடர்பான சில கேள்விகளை முன்வைத்தோம்.

நம் முதல் கேள்வி அம்பத்தூர், முகப்பேர் வாசிகள் நீண்ட நாட்களாக சந்தித்து வரும் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பானது. சென்ற வருடமே முடிய வேண்டிய கழிவு நீரகற்று தொட்டி கட்டும் பணி மேலும் 1 ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கான பணிகள் இந்த பிப்ரவரிதான் தொடங்கும் என்றும் அதிர்ச்சி கொடுத்தார்கள். அம்பத்தூர், முகப்பேர் பகுதிகளுக்குகழிவு நீர் தொட்டி என்பது கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து பேசப்பட்டு 2011-ஆம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. ஆனால் அதிலிலும் தற்பொழுது தொய்வு.

அதுவரை குடியிருப்புகளுக்கு மாநகராட்சியிலிருந்து கழிவு நீர் அகற்றும் லாரிகள் ஏதேனும் பணிக்கப்படுள்ளதா என்ற நம் கேள்விக்கு 2 லாரிகள் உள்ளது எனவும் அவற்றில் 1 எப்பொழுதும் பழுதாக இருப்பதா கவும், மற்றொரு லாரி பள்ளிகள், பெரிய அலுவலகங்களுக்கு மட்டும்தான் பயன்படுத்தபடுவதாகவும் கூறப்பட்டது. அந்த லாரிகளுக்கு ஒரு லோடு 600 ரூ வசூலிக்கப்படுவதாகவும் தெரிந்தது. குடியிருப்பு வாசிகளிடம் வினவும்பொழுது தங்கள் வீட்டுக்கு வரும் தனியார் லாரிகள் ரூ.1000 முதல் ரூ.1500 வரை வசூலிப்ப தாக தெரிவித்தனர். தனியார் லாரிகளின் இந்த வசூல் பற்றி நாம் விசாரிக்கையில் தங்களுக்கு அது குறித்து ஏதும் தெரியாது எனவும் குடிநீர் வாரியத்தில் எந்த தனியார் லாரிக்கும் தாங்கள் அனுமதி வழங்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

கழிவு நீர் அகற்றுதல் ஒரு கனவாகிப் போனதை விட்டு குடிநீர் குறித்த நம் கேள்விகளுக்கு வானம் நோக்கி விரல் நீட்டப்பட்டது. மழை பொழிந்து ஒரு 8 டி.எம்.சி தண்ணீர் இருந்தால் ஒழிய இந்த பகுதி வாசிகளுக்கு குடி தண்ணீர் தருவது நடக்காத காரியம் என தெரிவித்தவர்கள் சென்னை முழுக்க மீட்டரிங் முறையை அமுல்படுத்தினால் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.

இறுதியாக கழிவு நீர் அகற்ற குடிநீர் வாரியம் ஏன் கூடுதல் லாரிகள் வாங்கக்கூடாது என்ற நம் கேள்விக்கு அம்பத்தூர் சென்னை பெருநகராட்சிக்குள் வந்துவிட்டாலும், அம்பத்தூர் நகராட்சியாக என்ன பணிகள் செய்யப்பட்டதோ அதனையே தொடருமாறு தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதுதான் மையப் பிரச்சனை – அதிகார குவியல்.

அன்று 155 வார்டுகள் சென்னையில் இருந்தது. ஒவ்வொரு வார்டிலும் 3000 முதல் 4000 மக்கள் இருந்தனர். சென்னையை பெருநகரமாக மாற்றுகிறோம் என்ற பெயரில், சென்னையில் 200 வார்டுகள் உருவாக்கி, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு உட்பட்ட பகுதிகளை தேவையில்லாமல் இணைத்து, அதிகார பரவலாக்கத்தை நசுக்கி, சரியான திட்டமிடல் செய்ய முடியாமல் ஒவ்வொரு அரசு துறையும் திண்டாடுகிறது.

நாம் வேலை செய்யும் நிறுவனங்களில் முதலில் திட்டமிட்டு, அந்த திட்டம் சரியானதா என பல முறை ஆலோசித்து பிறகு செயலாற்றுவோம். ஆனால் நம் தமிழகத்தின் சாபக்கேடு நம்மை ஆளும் அரசுகள் முதலில் செயலை முடித்து கடைசிவரை அதற்கான திட்டமிடுதலே செய்வதில்லை. நம் பார்வை தொடரும்….

– காவல் கழுகு

Categories: Article, Feb 2013, Whistle, அரசு அலுவலகங்கள் பார்வையிடல்

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: