மந்திரி சபை சர்க்கஸ்

Tuesday, March 26th, 2013 @ 11:13AM

20 வருடங்களுக்கு முன் அப்போதைய எதிர்க்கட்சி ஆளுங்கட்சியை விமர்சித்து ஒரு பாடல் வெளியிட்டார்கள். அந்தப்பாடல் “ஓட்டலொடசல் ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம், இப்ப நாட்ட ஆளும் மந்திரிகளுக்கு தண்டச்சம்பளம், ஊருக்கு ஒரு மந்திரி பேருக்கு ஒரு மந்திரி ஆளும் கட்சியை சேர்ந்தவங்க எல்லாரும் ஒரு மந்திரி” என்பது. அந்தப்பாடல் ஆளுங்கட்சியை கேலி செய்யும் விதத்தில் இருந்தாலும், இன்றைய நிலை அந்த பாடலை உண்மையாக்கி விடும் போல் தெரிகின்றது. ஆம். அதிமுக அரசு பதவியேற்று 2 வருடங்கள் கூட ஆகவில்லை, ஆனால் அதற்குள் 9 முறை மந்திரி சபை மாற்றி அமைக்கப்பட்டு விட்டது. பல மந்திரிகளுக்கு துறைகள் மாற்றப்பட்டன. பல மந்திரிகளுக்கு துறைகள் பறிக்கப்பட்டன. பல மந்திரிகளுக்கு பதவியே பறிக்கப்பட்டது. இவ்வளவு ஏன்? சபாநாயகரையே மாற்றி விட்டார்கள். இப்படி அடிக்கடி மந்திரி சபையை மாற்றினால் எவ்வாறு அவர்கள் மக்களுக்கு திட்டங்கள் ஏதும் தீட்ட முடியும்? ஒரு மந்திரி தனது துறையைப்பற்றி தெரிந்து கொள்வதற்குள் பதவி பறிப்போ பதவி மாற்றமோ செய்தால் எப்படி? ஒருவரை மந்திரியாக நியமிப்பதற்கு முதல்வர் என்ன தகுதியைத் தீர்மானித்துள்ளார்? எதன் அடிப்படையில் மந்திரி பதவி வழங்கப்படுகிறது? எதற்காக பதவியை பறிக்கிறார்? அவர் திறனற்றவரா? அப்படியானால் அவரை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? Prostration at Jayalalitha's feetஎதற்குமே விடை இல்லை. ஒருவேளை இப்படி இருக்குமோ? முதல்வர் எப்பொழுதும் “எனது ஆட்சி, எனது ஆட்சி” என்றுதான் பேசுகிறார். மக்களாட்சியாக நினைக்கவிலை போலும்! தன்னை மகாராணியாக நினைத்துக்கொண்டு “துக்ளக்” போல மந்திரி என்ற காய்களை நகர்த்துகிறாரோ? இல்லை, இந்த மந்திரிகளால் பெரியதாக பயன் ஏதும் இல்லை, யார் நிறைய புகழ்கிறார்களோ அவர்களுக்குப் பதவி என்று நினைத்திருக்கிறாரோ? சட்டசபை நிகழ்ச்சிகளைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. சட்டசபையில் மக்கள் திட்டங்களைப்பற்றி பேசுவதை விட “அம்மா புராணம்” பாடுவதில்தான் மந்திரிகள் கவனமாக இருக்கிறார்கள். அம்மா புகழ் பாட கவிதை எழுதித்தர தமிழாசிரியர்களை நியமித்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அம்மாவைப் பார்த்ததும் எம்.எல்.ஏக்கள் எல்லோருக்கும் முதுகெலும்பு வளைந்து விடுகிறது. அம்மாவைப் பார்த்ததும் அம்மாவின் அருளை வேண்டி காலில் விழுந்து வணங்குகிறார்கள். எப்படியாவது ஒவ்வொருவரும் மந்திரியாகி விட வேண்டும் என்பது அவர்களின் இலட்சியமாக இருக்குமோ? எனக்கு எதுவுமே புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் – இப்படியே போனால் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மந்திரிகளாகவோ, முன்னாள் மந்திரிகளாகவோ மாறிவிடுவார்கள் என்பது நிச்சயம். இந்த ஆசையில்தான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களும் அம்மாவை பார்த்து மனு கொடுக்கிறார்களோ? – ஆரெஸ்

Categories: Uncategorized

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: