அரசு கேபிள் சேவை – மக்களுக்கானதா? இல்லை மந்திரிகளுக்கானதா?

Friday, April 12th, 2013 @ 11:54PM

arasu-cableஇந்த கட்டுரையை எழுதுவதற்கு முன் நாம் இது குறித்து ஏற்கனவே அரசு கேபிள் அலுவலகத்திற்கு ஒரு முறை சென்று வந்தது உங்களுக்கு கடந்த மாத விசில் கட்டுரை மூலம் தெரிந்திருக்கும்.

இதுவரை மொத்தம் ஏழு முறை அரசு கேபிள் அலுவலகத்திற்கு சென்று வந்த பின் இக்கட்டுரையை எழுதுகிறோம். அப்படி என்ன சுவாரஸ்யம் அரசு கேபிள் அலுவலகத்தில் என நீங்கள் கேட்கலாம்? ஒரு பக்கம் அரசு அறிவித்த, மக்களிடம் வசூலிக்க வேண்டிய தொகையை விட அதிகமாக வசூல் செய்வது, இன்னொரு புறம் ‘அரசுடைமையாக்கப்பட்ட’ கேபிள் தொழில் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் வேதனையான சுவாரஸ்யம்!!. கொஞ்சம் விரிவாகவே பார்க்கலாம்.

அதற்கு முன் 2 விசயங்கள்…

  1. அரசு கேபிளுக்கும், சென்னை பெருநகரத்தில் டிஜிட்டல் தொழில் நுட்பம் கொண்டு வர வேண்டும் என்ற ‘ட்ராய்’ மற்றும் மத்திய அரசின் போராட்டத்தை குறித்த கட்டுரை அல்ல இது. ஆனால் ட்ராய் சொல்வது போல அரசாங்கங்கள் கண்டிப்பாக கேபிள் தொழில் செய்யக்கூடாது என்பதில் நாம் முழுவதும் உடன்படுகிறோம். இது ஏதோ மத்திய அரசிற்கு எதிரான யுத்தம் என்பது போல தமிழக அரசு காட்டுவது பூச்சாண்டி வேலை. ‘ட்ராய்’ நிராகரித்தது மொத்தம் 4 மாநிலங்களை. அதில் தமிழகமும் ஒன்று.
  2. அரசு கேபிளுக்கும், SCV போன்ற தனியாருக்கும் நடக்கும் தொழில் போட்டி பற்றிய கட்டுரையும் அல்ல இது. நம் சாபக்கேடான இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் போல தான் இதுவும். எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி?

பின்பு இது எதைப் பற்றிய கட்டுரை?

மக்களுக்காக கொண்டு வரப்பட்ட, சட்டசபையில் மிகப்பெரும் சாதனையாக அறிவிக்கப்பட்ட அரசு கேபிள் உண்மையிலேயே மக்களுக்கு பயன் தந்ததா? தமிழக அரசு அறிவித்த அரசு கேபிள் சேவை ரூ.70 மட்டும் சரியாக வசூலிக்கப்படுகிறதா என்பதை பற்றியது.

அரசு கேபிள் அலுவலகத்தில் 31 மாவாட்டங்களுக்கு ஒரு தனி அலுவலரும், சென்னை மாவட்டத்திற்கு தனி அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அரசு கேபிள் சேவை பற்றிய புகார்களை தெரிவிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தனி தாசில்தார் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு ஆப்பரேட்டரும் இப்பொழுது அரசு கேபிள் மூலமாகத்தான் “அனலாக் சிக்னல்கள்’” ஒதுக்கப்பட்டு அவை மக்களுக்கு சென்றடைகிறது. இதற்கு அரசு கேபிள் நிறுவனம் வாடிக்கையாளர்களாகிய நம்மிடம் வசூலிக்க சொன்ன தொகை ரூ.70 மட்டும். இதில் ஆப்பரேட்டர்களுக்கு ரூ.50-ம் அரசு கேபிள் நிறுவனத்திற்கு ரூ.20-ம் பகிரப்படுகிறது. ஆனால் உண்மையில் ஆப்பரேட்டர்கள் வசூலிக்கும் தொகை ரூ.100-லிருந்து ரூ.150 வரை. இது பிரச்சனை ஒன்று; பாதிக்கபடுவது – பொதுமக்கள்.

அடுத்ததாக உள்ளூர் சேனல்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த பகுதியை சேர்ந்த உள்ளூர் சேனல்கள் ஒளிப்பரப்படும். இதற்கு இதன் உரிமையாளர்கள் அரசு கேபிளுக்கென்று ஒரு கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் அந்த கட்டணங்கள் சரியாக வசூலிக்கப்படுகிறதா என்பது மிகப்பெரிய கேள்வி.

அந்த உள்ளூர் சேனல்களை நடத்துவதே அந்த பகுதி அரசியல்வாதிகள், அமைச்சர்கள் எனும்பொழுது எங்கிருந்து வரும் கட்டணம்?. ஒவ்வொரு மாதமும் அரசுக்கு பல இலட்சங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தி தரும் பிரச்சினை இது. பாதிக்கபடுவது – அரசு.

மூன்றாவதாக வாடிக்கையாளர்களின் கணக்கு. ஒவ்வொரு ஆப்பரேட்டரும் எத்தனை வாடிக்கையாளர்கள் வைத்துள்ளார்கள் என்ற கணக்கு அரசு கேபிள் நிறுவனத்திடம் இல்லை. 30,000 வாடிக்கையாளர்கள் கொண்ட ஒரு ஆப்பரேட்டர் தன்னிடம் வெறும் 3,000 வாடிக்கையாளர் மட்டுமே என பொய் கணக்கு காட்டும் செயல்கள் நடைபெறுகின்றன. அரசுக்கு ஒரு வாடிக்கையாளரை மறைப்பதால் ஏற்படும் ரூ.20 நஷ்டம் பல ஆயிரம் வாடிக்கையாளர்களை மறைப்பதால் பல இலட்சங்களாக உருவெடுத்துள்ளது. பாதிக்கபடுவது – அரசு.

இது போன்ற பல பிரச்சினைகளை கலைந்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படக்கூடாது என லோக் சத்தா கட்சி பல முயற்சிகளை – மனு, போராட்டம் ஆர்ப்பாட்டம் என மேற்கொண்டது நமக்கு நினைவிருக்கலாம். அதைத் தொடர்ந்து இணையம் மூலம் பொதுமக்கள் தங்கள் மாத சந்தாவை கட்டும் வெளிப்படைத்தன்மை உருவானது. ஆனால் இது முதல் படி மட்டுமே இணையம் பற்றி தெரியாத லட்சக்கணக்கான மக்கள் இன்னும் நம் நாட்டில் உள்ளனர். நாம் முன்னர் சொன்னது போல வரைவோலை (DD), காசோலை(Cheque), வங்கிக் கணக்கில் செலுத்துதல் ஆகிய நல்ல திட்டங்கள் கொண்டு வர பெரிய வாய்ப்பு இன்னும் உள்ளது.

மேற்கூரிய அனைத்துமே மாவட்டங்களில் (சென்னையைத் தவிர்த்து) நாம் பார்த்த பிரச்சனைகள். சென்னையில் எப்படி? சென்னையில் அரசு கேபிள் அலுவலக வாசலில் இருக்கும் பேனர் வாசகங்கள் இவை, ‘அரசு கேபிள் டி.வி.யை சென்னையிலும் செயல்படுத்தி எண்ணியதை முடித்து செல்லும் முடித்து வெல்லும் புண்ணியத்தாயே உங்கள் பொன்னடி வணங்கி மகிழ்கிறோம்’. இந்த பேனரை நீங்கள் வேறு எங்கும் காண முடியாது. (சென்னையில் செப்.2012 முதல் அரசு கேபிள் சேவை இயங்கி வருகிறது).

உள்ளே சென்று இது குறித்து விசாரித்தோம். சென்னையில் அரசு கேபிள் சேவை பெற்ற ஆப்பரேட்டர்களின் பட்டியல் கேட்டோம். ஆர்வமாக தர வந்த ஒரு அலுவலரை ஒருவர் வேகமாக தடுத்தார் – “அதெல்லாம் நாங்க தர முடியாது”. “இணையத்திலும் சென்னை ஆப்பரேட்டர் பட்டியல் இல்லை” என நாம் கூற, கூடிய சீக்கிரம் வரும் என்பதோடு நிறுத்திக் கொண்டார்கள். (மற்ற மாவட்டங்களுக்கான ஆப்பரேட்டர் பட்டியல் இணையத்தில் உள்ளது) அடுத்தமுறை நம் தலைமை அலுவலகத்திற்கு அரசு கேபிள் சேவை வேண்டி நாம் தொலைபேசியில் அழைக்க நமக்கு கொடுக்கப்பட்ட ஆப்பரேட்டர் முதலில் தான் அரசு கேபிள் தருவதாக சொல்லி பின்னர் மறுத்தார். ஒரு மனு எழுதி சென்றோம். சென்னையில் ஒரு இடத்திலாவது அரசு கேபிள் சேவையை பெற வேண்டும் என உறுதி பூண்டோம். இந்த முறை இதற்கு தலைவரான பொது மேலாளரை (செயல்பாடுகள்) சந்திக்க முற்பட்டோம். 2 மணி நேர காத்திருப்பிற்கு அவர் அழைக்காததால் திரும்பினோம்.

அடுத்த நாள் நிர்வாக இயக்குனரை சந்தித்தோம் அவரிடம் நாம் கேட்ட முதல் கேள்வி “சென்னையில் அரசு கேபிள் இயங்குகிறதா?’”.

“ஆம், சுமார் 1 லட்சம் இணைப்புகள் அரசு கேபிள் சேவை பெறுகிறார்கள்’”.

“இது எத்தனை பெயருக்கு தெரியும்” என்ற நம் கேள்விக்கு புன்னகையே பதிலாக வந்தது. நம் குறைகளையும், அரசு கேபிள் வேண்டி நாம் போராடுவதையும் அவரிடம் தெரிவித்து விடைபெற்றோம். அனைத்து குறைகளையும் ஒத்துக்கொண்ட அவர், நம் மனு மீது நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். ஒரு வாரம் கழிந்ததும் நம் அலுவலகத்திற்கு அரசு கேபிள் சேவை வரவில்லை. மீண்டும் சென்றோம், பேசினோம், திரும்பினோம். அடுத்த 3 நாட்களில் வந்த ஆப்பரேட்டர் ஒருவர் தனக்கு எந்த முன் தொகையோ, மாத சந்தாவோ வேண்டாம் என்றும், நாம் நிச்சயம் கேபிள் சேவையை எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி இணைப்பு கொடுத்துள்ளார்.

கேள்வி கேட்டவர்களை எப்படியாவது சமாளித்தால் மட்டும் போதும் என்ற அரசின் எண்ணம் கண்டிக்கத்தக்கது. ஆனால் இப்பொழுது வந்ததும் உண்மையில் அரசு கேபிள் இல்லை. இதன் பெயர் – “சமாளிப்பு கேபிள்”. அரசு கேபிள் சேவை இயங்கும்வரை ஒன்று எல்லோருக்கும் சென்று சேர வேண்டும் அல்லது அரசு அனாவசிய வேலைகளில் ஈடுபடுவது தடுக்கப்படவேண்டும். நம் கண்காணிப்பு தொடரும்.

Categories: April 2013, Article, Whistle, அரசு அலுவலகங்கள் பார்வையிடல்

1 Comment to "அரசு கேபிள் சேவை - மக்களுக்கானதா? இல்லை மந்திரிகளுக்கானதா?" add comment
துரைராஜ்
September 4, 2013 at 5:40 pm

நான் அரசு கேபிள் கட்டணத்தை நேரடியாக இணைய வழி செலுத்தி விட்டு, அதன் நகலை எங்கள் கேபிள் ஆப்பரேட்டரிடம் அளித்து விட்டேன். 3 மாதங்கள் நன்றாக தெரிந்த கேபிள் 4 -வது மாதத்திலிருந்து சரியாக தெரியவில்லை. கேபிள் காரர்களிடம் இது பற்றி கேட்டப்போது வருகிறேம், வருகிறேம் என்று கூறி 1 மாத காலமாக காலந்தாழ்த்தி வருகிறார்கள். இவர்களை என்ன செய்யலாம்?

Leave a Reply

%d bloggers like this: