குடி குடியைக் கெடுக்கும்

Wednesday, April 17th, 2013 @ 8:54AM

உலகம் முழுவதும் பொருளாதார தாரளமயமாக்கலைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் தமிழக அரசு மதுக்கடையை தாராளமயமாக்கி நல்ல மக்களையும் குடிமக்களாக்கி அதில் வரும் வருமானத்தில் இலவசங்களைக் கொடுத்து ஆட்சி செய்து வருகிறது.

கடந்த மாதம் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன என்ற காரணத்தைக்கூறி நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகளை அகற்றக்கூறி உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளுக்கு மாற்று இடம் தேடியது தமிழக அரசு. இவை பெரும்பாலும் மக்கள் குடியிருக்கும் பகுதிகளாகவே இருந்தன. இதனை எதிர்த்து ஆங்காங்கே பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

ஏப்ரல் 1-ஆம் தேதி ஊரப்பாக்கம் மக்களை முட்டாள்கள் என நினைத்து சத்தம் இல்லாமல் மக்கள் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை ஆரம்பிக்கப் பட்டது. அதற்கு அருகில் அரசினர் ஆதி திராவிடர் மேல் நிலைப்பள்ளி உள்ளது. அருகில் பிள்ளையார் கோவில் மற்றும், சர்ச் ஒன்றும் உள்ளது. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் மதுக்கடை ஆரம்பித்து ஜோராக வியாபாரம் ஆரம்பமானது. அப்போது பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவனிடம் ஒரு குடி மகன் டாஸ்மாக் கடைக்கு செல்லும் வழியைக் கேட்டிருக்கிறார். அந்த மாணவன் அந்நபரை வசை பாடி விட்டு சென்று விட்டான், பின்பு ஒவ்வொரு நிகழ்ச்சியாக அரங்கேறியது. அப்பகுதியில் வசிக்கும் சிறுமியை ஒரு குடி மகன் கேலி செய்ய, அவ்வழியே சென்ற அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை, ஒரு குடிமகன், “எக்ஸ்க்யூஸ் மீ, கொஞ்சம் கம்பெனி கொடுக்கிறீங்களா?” என்று கேட்க அப்பகுதியிலிருந்த பெண்கள் சங்கடத்திற்கு உள்ளாயிருக்கிறார்கள்.

அப்பகுதியில் வசித்த மோகனப்பிரியா என்ற பெண் இதனைத் தட்டிகேட்க, “ஏன் ஒம் புருஷன் குடிக்க மாட்டானா?” என்று ஒரு குடி மகன் கேட்டிருக்கிறார். இதன் பின் ஏதாவது செய்ய வேண்டும் என அவருக்குத் தோன்ற, தற்செயலாக அவர் கண்ணில் பட்டது ஜூ.வி யில் வந்த மது ஒழிப்பு பிரச்சார விளம்பரம். அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்ட போது லோக் சத்தாவின் முன்னாள் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் பேசினார். அப்பெண் அவரிடம் விபரம் கூறிய போது, அவர் உடனே லோக் சத்தாவின் நிகழ்ச்சிகள் செயலாளர் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு விபரம் கூற, அவர் உடனே சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த பெண்களுக்கு ஊக்கம் கொடுத்து, ஒன்றுபடுத்தி, கடையின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனால் ஊரப்பாக்கம் பகுதி காவல் துறையினர் வந்து முதலில் மக்களை மிரட்டினர். பின்னர் மக்களின் உறுதியைப்பார்த்து, தற்காலிகமாக கடையை மூடினர்.

காவல்துறை அதிகாரிகளிடம் இது பற்றி விசாரித்த போது, சட்டம் ஒழுங்கு பிரச்சினையைத் தடுப்பதற்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இது திறக்கக் கூடாது என்றால், மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் மனு கொடுக்க வேண்டும் என்றார். அப்போது அங்கு வந்த டாஸ்மாக் மேலாளர் பள்ளியிலிருந்து 50மீ தொலைவிற்கு மேல் மதுக்கடை வைக்கலாம் என்று ரூல்ஸ் பேசினார். பின் அப்பகுதி பெண்கள் அனைவரும் ஊர்வலமாகச் சென்று அரசு ஆதி திராவிடர் மேல்நிலைப்பள்ளியின் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது செந்தில் ஆறுமுகம், ஹானஸ்ட் பழனிக்குமார், நல்லோர் வட்டம் பாலு ஆகியோர் வந்து இப்பிரச்சினையை சட்ட ரீதியாக அணுகுவதற்கு உதவி செய்தனர்.

தற்போது லோக் சத்தாவின் சென்னை மாவட்ட செயல் வீரர்களும், மாநில தலைவர் ஜெகதீஸ்வரனும் இப்பிரச்சினை தீர தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். பெண் முதல்வராக இருக்கும் மாநிலத்தில், பெண்ணின் தாலியை அறுக்கும் மதுக்கடைகள் மூடப்படுமா?

– களத்திலிருந்து ஆரெஸ்

Categories: Activities, April 2013, Article, Whistle
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: