காவிரி டெல்டா வறட்சி நிவாரணத்தில் மோடி வித்தை காட்டும் அரசாங்கம்

Thursday, May 9th, 2013 @ 8:21AM

சோழ நாடு சோறுடைத்து என்ற சொல்லுக்கு சொந்தகாரர்களான காவிரி டெல்டா விவசாயிகளின் குடும்பங்கள், இன்று அவர்களின் சோற்றிற்கே பிச்சை பாத்திரம் எடுக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வறட்சிக்குள்ளான நிலம்தமிழகத்திற்குரிய காவிரி நீரை கர்நாடகம் தர மறுத்ததாலும், டெல்டா பகுதியில் தேவையான நேரத்தில் போதிய மழை பெய்யாததாலும் நெற்பயிர்கள் காய்ந்து போனது. ஆழ்குழாய் கிணற்று பாசனம் மூலம் வாய்ப்பு உள்ளவர்கள் மட்டும் மின் மோட்டர் கொண்டு பற்றாக்குறை மின்சாரத்தை வைத்து ஓரளவு பயிர்களை காப்பாற்ற முடிந்தது. குளம், குட்டை, ஆறுகளில் தேங்கிய குறைந்த அளவு தண்ணீரை டீசல் பம்ப்செட் மூலம் இறைத்தும் சில விவசாயிகள் பயிர்களை காப்பாற்றினர். இதனால் வழக்கமான மகசூலில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கிடைத்தது. இந்த மகசூலுமே சராசரி செலவான ஏக்கருக்கு 20 ஆயிரம் என்பதிலிருந்து கூடுதலாக செலவு செய்து எடுக்கப்பட்ட மகசூல் ஆகும்.

இவ்வாறு காவிரி பாசனப் பகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு மகசூலை இழந்து 5.45 லட்சம் விவசாயிகள் பயிர் செய்த நெற்பயிர் சுமார் 11 லட்சம் ஏக்கர் பெருமளவில் பாதிக்கப்பட்ட நிலையில், மிக குறைவாக 1.75 லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமே 50% மேல் மகசூல் இழப்பு ஏற்றப்பட்டது, 3.61 லட்சம் ஏக்கர் மட்டுமே என வறட்சி நிவாரணம் அறிவித்து, தமிழக அரசு அரசாணை வழங்கியிருப்பது பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாவட்ட நிர்வகங்கள் தாலுக்கா வாரியாக, ஒன்றியம் வாரியாக, பிர்க்கா வாரியாக, வருவாய் கிராமம் வாரியாக ஆய்வு செய்யாமல் வேளாண்மை துறை அவசர கதியில் மேஜை கணக்கீடு செய்து, நிதி அமைச்சர் தலைமையில் உயர் மட்ட குழு ஜனவரி 10,11,12 தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த போது அவர்களிடம் வேளாண்மை அதிகாரிகள் தவறான புள்ளி விவரங்கள் அளித்ததின் அடிப்படையில் தமிழக அரசு வருவாய்த்துறை சார்பாக அரசாணை எண்.48 வெளியிடப்பட்டது. இதுவே நிர்வாக சிக்கலையும் சட்ட பிரச்சினைகளையும் ஏற்படுத்திகின்ற வகையில் அமைந்துவிட்டது.

நெல் சாகுபடிக்கு குறைந்தபட்ச செலவே ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் என்ற நிலையில் 50% மேல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதி ஏக்கருக்கு ரூ.5000 மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பயிர் காப்பீட்டு முன் பணமாக ரூ.10 ஆயிரம் சேர்த்து ரூ15,000 வழங்கப்படும் என்றும். பின்னர் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்கும் போது ரூ.10 ஆயிரத்தை தமிழக அரசு வாங்கிக் கொள்ளும் என்றும் இதற்கு சம்மதிக்கிறேன் என்று விவசாயிகளிடம் போட்டோ ஒட்டி உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கி கொண்டு நிவாரணம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதுவும் அரசாணைப்படி வழங்காமல் 1.75 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டதாக 3.61 லட்சம் ஏக்கருக்கு மட்டும் நிவாரணம் என கணக்கிட்டு சுமார் 5 லட்சம் விவசாயிகளுகு அத்தொகையை பிரித்து கொடுத்துள்ளனர். இவ்வாறு பிரித்து கொடுத்ததினால் ஏக்கருக்கு ரூ.2000 முதல் ரூ2500 வரையே கிடைத்துள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க தமிழக அரசாங்கமோ வரட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வழங்கியுள்ளதாக தம்பட்டம் அடிக்கிறது.

இது எப்படி இருக்கிறது என்றால் ஒருவன் இயற்கையின் காரணமாக இடிதாக்கி இறந்து விடுகிறான். அவனது குடும்பத்திற்கு நிவாரணமாக அரசாங்கம் 3 லட்சம் என அறிவித்து கொடுக்கிறது. இறந்தவன் ரூ.5 லட்சத்திற்கு ஆயுள் காப்பீடு சொந்தமாக செய்துள்ளான். காப்பீடு நிறுவனம் இறந்தவன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கொடுக்க வரும்போது இயற்கை பேரிடரால் ஒருவன் இறந்தால் 1 லட்சம் தான் கொடுக்க வேண்டும் அரசாங்கமோ உங்களுக்கு ரூ.3 லட்சம் கொடுத்துள்ளது. ஆதலால் காப்பீட்டு பணம் ரூ.5.லட்சத்திலுருந்து ரூ.2 லட்சத்தை கொடுங்கள் என தமிழக அரசே உறுதி மொழி பத்திரம் மூலம் வாங்கி கொண்ட்து என்றால் உண்மையில் தமிழக அரசு இறந்தவருக்கு கொடுத்த நிவாரணம் எவ்வளவு? ஒரு லட்சம் மட்டும்தானே ஆனால் ரூ.3 லட்சம் கொடுத்ததாக தம்பட்டம் அடிக்கிறது என்றால் இது மோடி வித்தை இல்லாமல் வேறு என்ன?

தமிழக அரசு ஏக்கருக்கு 2000-ம் தான் நிவாரணம் கொடுக்க முடியும் என்றால் அதை அறிவித்து கொடுத்து விட்டு போக வேண்டியதுதானே. அதை விடுத்து ரூ.15ஆயிரம் ஒரு ஏக்கருக்கு நிவாரணம் என அறிவித்து அரசாங்கம் விவசாயிகளின் வயிற்றில் அடித்து விளம்பரம் தேடி கொள்கிறது. பயிர் காப்பீடே செய்யாத விவசாயிகள் இன்று நடுரோட்டில் நிற்கவேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசாங்கம் நிவாரணத்தையும் பயிர் காப்பீட்டையும் ஒன்றாக சேர்த்து விவசாயிகளை குழப்பி வருகிறது.

மோடி வித்தைகாரன் பாம்பையும் – கீரியையும் சண்டையிட செய்யப் போவதாக சொல்லி சொல்லியே பார்வையாளரிடம் பணத்தை கறந்துவிட்டு இறுதியில் பாம்பையும் – கீரியையும் சண்டையிட செய்யமாட்டான். அதே போல் தமிழக அரசும் ஏக்கருக்கு நிவாரணம் 15 ஆயிரம் என அறிவித்து கடைசியில் 2 ஆயிரம் கொடுத்து விட்டு, நாட்டிற்கு நெல்லை விளைவித்து கொடுக்கும் விவசாயிகளை அவமதிக்கும் செயல் மோடி வித்தை அல்லாமல் வேறு என்ன என்று சொல்ல??!!

தமிழக அரசுக்கு லோக் சத்தா கட்சியின் வேண்டுகோள்:-

பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டை உடனே கணக்கிட்டு வழங்குமாறும், உண்மையான பாதிப்பை கணக்கிட தவறிய வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறோம்.

– சிவ இளங்கோ

Categories: April 2013, Article, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: