கூட்டு(உ)றவு சங்கத் தேர்தல் – நடந்தது என்ன?

Friday, May 31st, 2013 @ 11:32PM

electionநடக்கும் என்பார் நடக்காது , நடக்காதென்பார் நடந்துவிடும் என்று கடந்த இதழில் நாம் குறிப்பிட்டிருந்தோம் . எதிர்பார்த்ததுபோல் தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க தேர்தல் நடந்து முடிந்துவிட்டது .அது ஜனநாயக முறைப்படி நடந்ததா அல்லது ஆளும் கட்சி ஆணைப்படி நடந்து முடிந்தஹா என்பதுதான் இன்றைய மிகப்பெரிய கேள்வி. ஆளும்கட்சி மிகத்திறமையாக இம்முறை நீதிமன்றம் நம்பும் விதமாக தேர்தலை நடத்தி முடித்துள்ளது. தனி சுதந்திரமான தேர்தல் ஆணையம் அமைத்து , தனி தேர்தல் அதிகாரிகள்,மற்றும் அலுவலர்கள் மூலம் நியாயமாக நடத்தி முடித்துவிட்டதாக அரசு பெருமைபட்டுக்கொள்கிறது.ஆனால் நடந்தது என்ன?

உறுப்பினர் சேர்க்கையிலேயே முறைகேடுகள் ஆரம்பித்துவிட்டதாக பிரதான எதிர்க்கட்சியான தி மு க தேர்தலை புறக்கணித்து விட்டது. தே மு தி க வும் தங்களுக்கு உறுப்பினர் படிவம் வழங்கப்படவில்லை, ஆளும் கட்சியினரே படிவங்களை பெற்று உறுப்பினர் ஆகிக்கொண்டாரகள் ,எனவே தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க வாய்ப்பில்லை என்று கூறி புறக்கணித்து விட்டது. இவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு அரசு எந்தவித பதிலும் தரவில்லை. இதுகுறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பவும் அனுமதிக்கவில்லை.மாறாக தேர்தலுக்கும் அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை,இது தனி சுதந்திரமான தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்,எனவே தேர்தல் சம்பந்தமாக எந்தவித குற்றசாட்டுக்களும் தேர்தல் ஆணையத்திடம் முறையிடுங்கள் என்று கூறிவிட்டது.

உறுப்பினர் சேர்க்கையில் ஆரம்பித்து , வேட்பு மனு தாக்கல் செய்வது வரை ஆளும் கட்சியினரின் ஆதிக்கம் வெகுவாக இருந்தது அங்கங்கே நடைபெற்ற சம்பவங்கள் மூலம் கண்கூடாகத்தெரிந்தது . உறுப்பினர் படிவங்கள் முறையாக அனைத்து தரப்பினர்களுக்கும் வழங்கப்படவில்லை.கூட்டுறவு சங்க அலுவலகங்களை ஆளும் கட்சியினர் தங்கள் ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டு வேறு எவரும் மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்க விடாமல் பார்த்துக்கொண்டனர். மீறி மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் பயங்கரமாக தாக்கப்பட்டனர்.இதை தேர்தல் அதிகாரிகளும் , காவல் துறையினரும் கண்டுகொள்ளவே இல்லை. அங்கங்கே வழக்குகள் பதிவானாலும்,எந்தவித மேல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தேர்தல் அமைதியாக நடைபெற்றதாக கணக்கு காட்டப்பட்டுவிட்டது.

இத்தனைக்கும் தேர்தலில் போட்டி என்று பார்த்தால் சுமார் பத்து சதவீத இடங்களுக்கு மட்டும்தான் நடந்துள்ளது.நாற்பது சதவீதம் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.அதாவது ஆளும் கட்சியின்அடக்குமுறையையும் மீறி மனு தாக்கல் செய்த கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் , அதிமுக வினருக்கும் இடையே தான் கடும் போட்டியும் மோதலும் ஏற்பட்டது. 12.04.2013 ல் சென்னையில் காசிமேடு , அண்ணாசாலை ,தி நகர் ,பல்லவன் சாலை, தேனாம்பேட்டை , தாம்பரம் பகுதிகளில் நடைபெற்ற கலவரத்தால் போக்குவரத்து பாதிப்பு,சாலைமறியல்,அடிதடி,என சென்னையே ஸ்தம்பித்தது .அதேபோன்று திருச்சி,திண்டுக்கல்,தூத்துக்குடி போன்ற இதர மாவட்டங்களிலும் பரவலாக மோதல்களுடன் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

மொத்தத்தில் கூட்டுறவு சங்கத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்துள்ளதாக ஆளும்கட்சியினர் தெரிவித்தாலும், மக்கள் பார்வையில் ஆளும் கட்சியினரின் எதேச்சை அதிகாரத்துடந்தான் நடந்துள்ளது என்பதுதான் உண்மை.

தினகரன் போஸ்

Categories: Article, May 2013, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: