காவல்துறை சீர்திருத்தங்கள் – பகுதி 3

Monday, May 13th, 2013 @ 5:17PM

Police reformsநம்முடைய சீர்த்திருத்தங்கள் ஆட்சியாளர்களின் காதுகளில் எட்டுவதாய் தோன்றுகிறது. அறிவிக்கப்பட்ட 2013-14 பட்ஜெட் பற்றி பொதுவான பல கருத்துகள் இருந்தாலும் காவல்துறைக்கு இது நல்ல பட்ஜெட்தான். 2013-14 ஆம் ஆண்டில் 17 ஆயிரத்து 138 காவலர்கள், 1091 சட்ட இன்ஸ்பெக்டர்கள், 292 சிறைக்காவலர்கள் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இது ஒரு மிக முக்கிய சீர்திருத்தம். இதே போன்று நாம் சொன்ன மற்ற காவல்துறை சீர்திருத்தங்களும் நிறைவேறும் என நம்புவோம். அதற்கு தேவை இந்த சீர்த்திருத்தங்களை கொண்டு வர வேண்டிய மிக முக்கியமான அரசியல் சீர்த்திருத்தம்.

அரசியல் காவல் சீர்த்திருத்தங்கள்

மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதி 1951, பிரிவு 8,8ஏ,9 சொல்வது என்ன?

பிரிவு 8-ன்படி ஒரு நபர் இரு பிரிவுகளுக்கு நடுவே மதம், பிறப்பிடம், வாழ்விடம், மொழியை கொண்டு வேற்றுமைகள் வளர்க்க முயற்சி செய்தாலோ, இல்லை லஞ்சம் புகாரில் ஈடுபட்டாலோ, தேர்தலில் ஆள் மாறாட்டம் செய்தாலோ, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டிருந்தாலோ, மனைவியை துன்புறித்தினாலோ, “தீண்டாமை’’ பிரச்சாரத்தில் ஈடுபட்டாலோ, தடை செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்தாலோ, சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபட்டாலோ, ஹவாலா மோசடி, போதை பொருள் குற்றம், தீவிரவாத குற்றம், தேர்தல் நாளில் பகை வளர்த்தல், வாக்குச்சாவடியிலிருந்து வாக்குச் சீட்டுகளை கடத்துதல், தேர்தல் விண்ணப்பங்களை அழித்தல், இந்திய தேசக் கொடிக்கு அவமதிப்பு ஏற்படுத்துதல் அல்லது இந்திய அரசியல் சாசனத்திற்கு அவமதிப்பு ஏற்படுத்துதல், தேசிய கீத்ததை பிறர் பாடாத வண்ணம் செய்தல் ஆகிய குற்றங்களுக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டதிலுருந்து 6 வருட காலம் தேர்தலில் பங்கேற்க தடை விதிக்கலாம்.

மேலும் பதுக்கல், கொள்ளை ஆதாயம் அடைதல், உணவு அல்லது மருந்தில் கலப்படம் செய்தல், வரதட்சணை குற்றங்கள் ஆகிய குற்றங்களுக்காகவும் 6 வருடகாலம் தேர்தலில் பங்கேற்க தடை விதிக்கலம்.
பிரிவு 8ஏ-ன்படி தற்காலத்தில் சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர் மீது ஊழல் குற்றம் நிரூபிக்கபட்டால், மத்திய அரசு குடியரசு தலைவருக்கு அவரை நீக்குவதற்கான பரிந்துரையை கொடுக்கும். பிரிவு 8ஏ-ன் படி குடியரசு தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட அவரிடம் மனு வழங்கலாம். குடியரசு தலைவர் தேர்தல் ஆணையத்தின் கருத்தறிந்து அந்த மனு மீது நடவடிக்கை மேற்கொள்வார்.

விதி 9-இன் படி ஊழல் புகார் அல்லது நம்பிக்கை துரோகம் இழைத்து குற்றம் நிரூபிக்கப்பட்ட அதிகாரி 5 வருடங்களுக்கு தேர்தலில் பங்கேற்க முடியாது.

விதி 8, 8ஏ, 9 மூன்றும் இருந்தும் அவை போதுமானதாக இல்லை என்பதையே நாம் தொடர்ந்து பார்த்து வரும் அரசியலும், தேர்தலும் உணர்த்துகிறது.

கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும் நம் நாட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒருவர் தகுதி இழந்தவர் என்பது எந்த விதத்திலும் குற்றவாளிகளை தேர்தலில் நுழையவிடாமல் தடுக்க போதுமானதாக இல்லை. கடுமையான குற்றம் சுமத்தப்பட்ட எந்த ஒரு நபரும் அவருடைய குற்றம் நிரூபிக்கப்படாதவரை தேர்தலில் பங்கெடுக்க முடியாது என்பது உறுதி செய்யப்பட வேண்டும். இதை தவிர்த்து ஒவ்வொரு அரசிடமும் பல குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் `போக்கிரிகளின்’ பெயர்ப்பட்டியல் உள்ளது. ஆனால் அவர்கள் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாத பல வழக்குகள் இருப்பதால் அவர்களையும் தேர்தலில் போட்டியிடாமல் செய்யும் சட்டம் இல்லை. இது போன்ற ஒரு `பெயர்ப்பட்டியல்’ நாட்டின் பாதுகாப்பிற்கு தேவை என அறிந்த நாம் அவர்களை மக்களை பாதுகாக்கும் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கவைப்பது எவ்வளவு பெரிய முரண்?

காழ்ப்புணர்ச்சி கொண்டு குற்றம் புரியாத யாரேனும் ஒருவரை எந்த காவல்துறை அதிகாரியும் இந்த பட்டியலில் சேர்க்கவில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும். தேர்தலில் போட்டியிடும் முன் ‘போக்கிரி’ பட்டியலில் இருக்கும் எவரும், குற்றவியல் அமர்வு நீதிமன்றம் சென்று தன்னுடைய பெயரை நீக்குவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இந்த வழக்குகளுக்கு 30 நாட்களில் தீர்ப்பு வரவேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட வேண்டும்.

இதே போன்று தேர்தலில் செலவிடப்படும் தொகை பொறுப்பாக செலவழிக்கபடுகிறதா என்பதும் கண்காணிக்கப்பட வேண்டும். ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடித்தளம் தேர்தல் நிதிக்கான வலிமையான சட்டங்கள். அநேகமாக அனைத்து நாடுகளும் இதை பின்பற்றி வருகின்றன. நாமும் இங்கு வலிமையான சட்டங்கள் உருவாக்கி, அந்த சட்டங்கள் மீறப்படும்பொழுது அதற்கு நடவடிக்கை எடுக்கும் பொழுதுதான் இதற்கு ஒரு விடிவு வரும்.

இவையாவும் சரியாக நடக்க நாம் செய்ய வேண்டிய மற்றுமொரு முக்கியமான சீர்த்திருத்தம் – வாக்காளர் பட்டியல் திருத்தம். இந்த மாற்றம் அரசியல் மாற்றத்திற்கான ஒரு சிறந்த அடித்தளமாக அமையும். இதற்கான சட்டம் போதுமானதாக இருந்தாலும், நிறைய நடைமுறை சிக்கல்கள் வாக்காளர் பட்டியலை பதம் பார்க்கிறது. வாக்காளர் முன்னேற்ற பணிகளுக்கு தபால் நிலையத்தை நாம் உபயோகப்படுத்தலாம். எவரும், எந்த நேரமும் வாக்காளர் அடையாள அட்டையை பெற நடைமுறைகள் இயற்றலாம். மேலும் தேர்தலின்போது வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமையாக்கப்பட வேண்டும்.

பொது சேவையில் பங்காற்றும் காவல்துறைக்கு தேவையான காவல்துறை மற்றும் தேர்தல் சீர்த்திருத்தங்களை இதுவரை பார்த்தோம். பழுதடைந்த அரசாட்சியில் பொது அமைதி விபத்திற்குள்ளாக்கப்பட்டு குற்றவாளிகள் ஆணையிடுபவர்களாக இருக்கிறார்கள். அரசியலில் குற்றவாளிகளின் பாதுகாப்பது என்பது, அரசின் நெருக்கடி நிலையின் பிரதிபலிப்பு. மக்கள் மீது அக்கறை கொண்ட எவரும் இந்த சீர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை வலுப்பெற செய்வார்கள்.

சமுதாயத்தின் வெறும் பிரதிநிதியாக இருக்கும் காவல்துறை இந்த சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு சமுதாயத்தில் இருக்கும் அனைத்து மக்களின் உண்மையான பிரதிநிதியாக எதிர்காலத்தில் மாறுவார்கள் என்ற நம்பிக்கையோடு பயணிப்போம்.

காவல்துறை சீர்த்திருத்தங்கள் – நாணயத்தின் ஒரு பக்கம், இன்னொரு பக்கம்? நீதித்துறை சீர்த்திருத்தங்கள் – அடுத்த வாரம்.

Categories: April 2013, Article, Whistle
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: