அண்ணாமலை பல்கலை அரசுடைமை – மக்கள் தலையில் பெரும் நிதிச் சுமை?

Wednesday, June 12th, 2013 @ 2:58PM

Annamalai_University

1)       எந்த பல்கலையும் என்றும் கண்டிராத மாபெரும் ஊழல்

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் சமீபத்தில் கலகம் ஏற்பட்டதன் பின்னணியில் அங்கு நடந்த மெகா ஊழல்கள் இருந்தன. 1980-கள் முதலே அப்பல்கலைக் கழகம் மாணவர் சேர்க்கைக்குப் பணம் பெற்று வந்தது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் ஊழல் எல்லா எல்லைகளையம் கடந்து சம்பளம் போட முடியாமல் பல்கலையே திவால் ஆகும் அளவுக்குப் பெருகியது அனைவருக்கும் தெரியாத ஒன்று.

 1. a.       பணி நியமனம் , மாணவர் சேர்க்கை எல்லாவற்றிலும் ஊழல் :

மாணவர் சேர்க்கைக்குப் படிப்பைப் பொருத்து சில லட்சங்கள் முதல் 25 லட்சம் வரைப் பெறுவது என்பது அங்கு சர்வ சாதரணமாகியது. இந்தப் பணத்தில் இடைத்தரகர்கள் , முக்கிய அதிகாரிகள் முதல் இணை வேந்தர் வரை பலருக்கும் பங்கு உண்டு.  மேலும் பணம் பெற்றுக் கொண்டு விரிவுரையாளர்கள் நியமனம் தேவையையும் , அனுமதிக்கப்பட்ட அளவையும் விட பன்மடங்கு அதிகமாகச் செய்யப்பட்டது. தகுதியற்ற பலர் விரிவுரையாளர்கள் ஆனார்கள்.

ஊழியர்கள் நீதிமன்றம் சென்று அளவுக்கதிகமான விரிவுரையாளர்கள் நியமனத்திற்கு தடையாணை பெற, அதற்கு மேலும் நியமனம் செய்து பணம் பார்க்க முடியாமல் போனது. அப்போதும், எந்த பல்கலைக் கழகங்களிலும் இல்லாத எதற்கு என்றே தெரியாத எஸ்.ஒ, எல்.ஒ போன்ற புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு அதிலும் எண்ணற்ற நபர்கள் பணத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.  இதில் எந்த லஞ்சப் பணமும் பல்கலை நிதிக்கு மட்டும் செல்லவில்லை, உள்ளூர் ஊடக ஊழியர்கள் உட்பட எல்லோராலும் பகிர்ந்து எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் அந்தப் புதிய ஊழியர்களின் சம்பளம் மட்டும் பல்கலையின் பொறுப்பாகியது. அதோடு இல்லாமல் பல்கலை நிதியில் இருந்து பணத்தை மேலும் சுரண்ட செட்டியார் குடும்பத்து நிறுவங்களின் மூலம் தேவையற்ற கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. இப்படி பலதரப்பட்ட முறைகேடுகளால் பல்லாயிரம் கோடி சுருட்டப்பட்டு ஒரு கட்டத்தில் பல்கலை கழகம் ஆசிரியர்களின் சம்பளத்தைக் கூட கொடுக்க முடியாத நிலைக்கு வந்தது. அப்போது தான் ஆசிரியர்கள் கலகம் செய்ய, பிரச்சனை பூதாகரமானது.

 

 1. b.       வேடிக்கை பார்த்த அரசாங்கங்களும்பல்கலைக் கழக நிதிக் குழுவும்?

இது எல்லாம் தங்கு தடையின்றி நடந்து கொண்டு இருக்க, பல்கலை உருவில்லாமல் அழிந்து கொண்டு இருக்க, அதைத் தடுக்க வேண்டிய பல்கலை நிதிக் குழுவும், உயர் கல்வித் துறையும், ஒட்டுமொத்த அரசாங்கமும் 30 வருட காலம் வேடிக்கை மட்டும் பார்த்தனவா என்பது நம் அனைவருக்கும் எழும் முக்கிய கேள்வி. அப்படி இருந்திருக்க சாத்தியங்கள் மிகக் குறைவே. இதில் அவர்களுக்கும் பங்கு இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கே நாம் வர வேண்டியுள்ளது..

 1. c.        மக்கள் மீது நிதிச்சுமை  ஏற்றப்படக் கூடாது :

இப்படி மொத்த தவறும் ஆட்சியாளர்கள், மற்றும் பல்கலைக் கழக நிர்வாகிகள் கைகளில் இருக்க, மொத்த நிதிச்சுமை மட்டும் மக்கள் தலையில் ஏற்றப்படுவது எப்படி நியாயம் ஆகும்? அரசுடைமை முடிவு கல்லூரி ஊழியர்களுக்கும், தற்போதைய மாணவர்களுக்கும் வேண்டுமானால் சாதகமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு இது பாதகாமான ஒன்றாக அமைய அதிக வாய்ப்புகள் உள்ளன.

கல்லூரியில் பணத்தின் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ள திறனற்ற மாணவர்கள் எண்ணற்றோருக்கான படிப்புச் செலவுகளும், பண பலம் மட்டுமே கொண்டு ஆசிரியரான எண்ணற்ற ஆசிரியருக்கான சம்பளம் மற்றும் இதர செலவுகளையும் மக்கள் வரிப் பணத்தில் கறந்து கொடுப்பதை விட, வறுமையால் படிப்பை இழந்து நிற்கும் எண்ணற்ற ஏழை மாணவர்களுக்கு அரசு இழைக்கும் பெருந்துரோகம் வேறேதும் இல்லை. எனவே அரசால் அமைக்கப்பட்டுள்ள நிதிப் பரிசோதனைக் குழு நேர்மையாக, தயவு தாட்சண்யம் இன்றி செயல்பட்டு, மக்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும். குற்றம் இழைத்தவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெறச் செய்யபட வேண்டும். சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்ட லஞ்சத் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் அவர்களின் மொத்த சொத்துக்களும் உடன் முடக்கப்பட வேண்டும்.

2)       ஜனநாயக விரோதச் சட்டம் :

 1. முதற்கோணல் – ஒரு குடும்பத்திற்கு முழு அதிகாரம்
 2. அண்ணாமலை பல்கலைக் கழக சட்டம் 2013-இன் அம்சங்கள்:

புதிய சட்டத்தின் படி இணைவேந்தர் பதவி குடும்ப ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு உயர்கல்வி துறை அமைச்சருக்கு வழங்கப்படுகிறது. மேலும், சட்டம் முற்றிலும் மாற்றப்பட்டு மற்ற பல்கலைக் கழகங்களுக்கு இணையாக அண்ணாமலை பல்கலையும் உருவாக வழி செய்யப்படுகிறது. இணை வேந்தருக்கு இருந்த அதீத சிறப்பு அதிகாரங்களான, சக்தி வாய்ந்த ஆட்சிக் குழுவில் 2 பேரை நியமித்தல், மாணவர் மற்றும் விரிவுரையாளர் நியமனத்தில் இருந்த அதிக அதிகாரம், நிதி நிர்வாக அதிகாரம்  போன்றவை நீக்கப்பட்டுள்ளன. துணைவேந்தர் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்று வகுக்கப்பட்டு ஒரே ஒரு முறை மட்டும் நீட்டிக்கத்தக்கதாக மாற்றப்படுகிறது. ஆக இந்த சாட்டும் செயலுக்கு வரும் போது பல்கலை முற்றிலும் குடும்ப கட்டுப்பாட்டில் இருந்து மீண்டிருக்கும்.

 

3)       நிரந்தர தீர்வுக்கான சீர்திருத்தங்கள் :

 1. a.       இது முற்றிலும் தனிப்பட்ட பிரச்சனை அல்ல :

அண்ணாமலைப் பல்கலை கழக சட்டத்தில் இருந்த அடிப்படைக் குறைபாடு முதற்காரணமாக போதிலும் இது முற்றிலும் தனிப்பட்ட பிரச்சனையாகக் கருத முடியாது. மற்ற பல அரசு பல்கலைக் கழகங்களில் கூட இது போன்ற பிரச்சனைகள் சிறிய அளவில் பல மட்டங்களில் நடந்தேறிக் கொண்டுதான் உள்ளன. நம் பார்வைக்கும் துணை வேந்தர்கள் ஊழல் புகாரால் நீக்கப்படுவதும், அப்பதவி பேரம் பேசப்படுவதும் நாள்தோறும் வந்து கொண்டே தான் உள்ளன. இதற்கு நாம் முன்வைக்கும் முக்கிய உயர் கல்வி சீர்திருத்த ஆலோசனைகளைக் இங்கே பார்ப்போம்.

 1. b.       உடனடி தேவை உயர் கல்வி சீர்திருத்தங்கள் :
  1. திறன்பாட்டுடன் இணைக்கப்பட்ட நிதி உதவி:

பல்கலை நிதிக் குழு (யு.ஜி.சி) அளிக்கும் நிதி பல்கலைக் கழகங்களின் திறன்பாட்டுடன் இணைக்கப்பட வேண்டும். திறனையும் தரத்தையும் உயர்த்தினால் மட்டுமே நிதி உதவி என்ற நிலை பல்கலைக் கழகங்களுக்கு ஏற்பட வேண்டும். இன்று நிதி குழு நடத்தம் ஆய்வும், அறிக்கையும் வெறும் பெயரளவில் மட்டுமே உள்ளன. முறைகேடுகள் ஆய்வில் தெரிய வந்தாலும், அதைப் பொறுத்து எந்த ஒரு நடவடிக்கையோ நிதிக் கட்டுப்பாடோ செய்யப்படுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும்.

 1. கல்வியின் தரத்திற்கு பொறுப்புடைமை:

இப்போது இருக்கும் தேர்வு முறைகள் முற்றிலும் சீரமைக்கப்பட வேண்டும். மாணவர்களின் திறன் வருடத்திற்கு ஒரு முறை இரு முறை என்று அன்றி, தொடர்ச்சியாகக் கணிக்கப்பட வேண்டும். வெறும் மனப்பாடத் திறனை சோதிக்கும் தேர்வு முறைகள் மாற்றப்பட்டு கற்றலை, புரிதலை உண்மையாகச் சோதிக்கும் தேர்வு முறைகள் வர வேண்டும். ஒரு பல்கலை உருவாக்கும் மாணவர்களின் தரத்தை, தேசிய அளவிலான தரப்படுத்தப்பட்ட தேர்வுகள் நடத்தப்படுவதன் மூலம் மதிப்பிடலாம்.

மேலும் எல்லா மேற்கத்திய பல்கலைகளில் உள்ளது போன்று மாணவர்கள் விரிவுரையாளர்களை மதிப்பிடும் திட்டம் செயல் படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் அங்கே கற்பித்தலில் பொறுப்புடைமை உருவாக்கப்படும். இவ்வாறு  மாணவர்களின் தரத்திற்கும், கல்வியின் தரத்திற்கும் பல்கலை பொறுப்பாக்கப்பட வேண்டும். இத்தகைய கட்டுப்பாடுகள் இருக்கும் பச்சத்தில் திறனற்றோரின் லஞ்ச நியமனங்களுக்கு வேலை இல்லாமல் போகும்.

 1. தன்னாட்சி வழங்குதல்:

இன்று பல்கலைகளுக்கு நிதி  மேலாண்மை, பாடத் திட்டங்கள், கல்விக் கட்டணம்  என்று எதையும் நிர்ணயிக்கும் அதிகாரம் இல்லை. இவை அனைத்தும்  யு.ஜி.சி மற்றும் அரசால் கட்டுப்படுத்தபடுவது பல்கலைகள் புதிய முயற்சிகள் மேற்கொள்ள பெரும் தடையாக உள்ளது. மேலும் அனைத்து பல்கலைகளும் ஒன்று போல் பின் தங்கியே செயல்படும் நிலை உள்ளது. உதாரணத்திற்கு மேற்கத்திய பல்கலைகளில் தாராண்மைக் கல்வி மற்றும் மானுடவியல் போன்ற அத்தியாவசியப் பாடங்கள், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவக் கல்வியிலும் கட்டாயமாகக் கற்பிக்கப்படுகிறது. இவை நம் தொழிற்கல்வி பாடத் திட்டங்களில் அறவே இல்லை. மேலே குறிப்பிட்ட பொறுப்புடைமையுடன் சேர்த்து இந்த தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும் போது பற்பல புதிய முயற்சிகளால் பல்கலைகள் செழிக்கும் அவற்றின் திறன் ஓங்கும்.

 1. மேற்பார்வையே அரசின் முக்கிய பணி:

இன்று அரசுத் துறைகள் கல்வியை தாமே வழங்கும் வேலையை முக்கியமாக மேற்கொண்டு  வருகின்றன. அந்த நிலை மாற்றப்பட்டு அவை நிதி அளிப்பதையும், கல்வி நிலையங்களை மேற்பார்வை செய்வதையும் முக்கிய பணிகளாக மேற்கொள்ள வேண்டும். அரசு மற்றும் தனியார் பல்கலைகள் உண்மையான தன்னாட்சி அந்தஸ்து பெற்று, கல்வி வழங்குவதில் உள்ள அரசின் தேவையற்ற கட்டுப்பாடுகள்  நீங்கினால், அவை ஒன்றுக்கொன்று தரத்தில் போட்டி போடும், உயர் கல்வி மேம்படுவது உறுதி செய்யப்படும்.

 

Categories: Article, May 2013, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: