எந்தத் தூணும் சரியில்லை !!!

Friday, June 14th, 2013 @ 9:49AM

4 pillars

இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக நீதி, நிர்வாகம், சட்டமன்றம் (தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்) மற்றும் ஊடகம் என நாம் படிக்கிறோம். ஆனால், இதில் எந்தத் தூணும் சரியாக இல்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்பினால் நம் மீதுதான் விழும். ஆனால் அதற்காக வாயிலேயே விஷம் போன்ற எச்சிலை எத்தனை நாள்தான் வைத்துக்கொண்டிருப்பது. எந்தத் தூணும் சரியில்லை என்று சொல்வதற்கு வேதனையாகத்தான் உள்ளது. ஆனால், சொல்ல வேண்டிய கட்டம் உருவாகிவிட்டது. சரிப்படுத்திவிடலாம் என்கிற நம்பிக்கையிலே இந்த கட்டுரை.

குழந்தை பிறந்தபின் அதற்கான அரசு அலுவலகத்தில் பிறப்புச் சான்றிதழ் வாங்க நாம் தருகிற இலஞ்சத்தில் ஆரம்பித்து, நமது இலஞ்சப் பயணம் தொடர்ந்து கடைசியில் இறந்தபின் இறப்புச் சான்றிதழ் வாங்க நமது வாரிசுகள் இலஞ்சம் தந்துதான் பெற இருக்கிறார்கள் என்பதை அறிந்ததில் இருந்து நமது அரசு நிர்வாகத்தின் இலட்சணம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

சரி அப்படி இலஞ்சம் தர விருப்பமில்லை, எப்படியாவது நமக்கு வேண்டிய அரசாங்க விசயத்தை சாதித்துக்கொள்ளலாம் என்று முயற்சித்தால், நம்மிடம் இல்லாத பழியை சுமத்தி காலதாமதம் செய்து நமது பொறுமையை சோதித்து நாம் கோபத்தில் ஏதாவது செய்துவிட்டால் காவல்துறையிடம் செல்ல வேண்டியதாகிவிடும். அங்கு எப்படி இருக்கும் என்று ஓரளவு செய்தித்தாள் மூலமாகவும், சினிமா மூலமாகவும் சிலரின் அனுபவங்கள் மூலமாகவும் அறிந்துள்ளோம்.

காவல் நிலையம் பிரச்சனைகளை உடனடியாக முடித்து விடாமல் இழுத்தடித்து அதன்மூலம் ஆதாயம் (இருதரப்பிலிருந்தும்) பெற முயற்சிக்கிறது. இதைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற மக்கள் பிரதிநிதிகள் தங்கள் விருப்பப்படி காவல்துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மக்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்ற தனக்கான ஒரு பிரதிநிதியை தேர்வு செய்து சட்டமன்றம், நாடாளுமன்றம் என அனுப்பினால் அவர்கள் தங்கள் கடமைகளை மறந்து எப்படி செயல்படுகிறார்கள் என்பதை நாம் கண்கூடான தினம் தினம் செய்திகளில் பார்க்கிறோம். எத்தனை விதமான ஊழல்கள். அப்பப்பா… கடவுள் என்று ஒருவர் இருந்தால் அதிசயித்துப் போயிருப்பார் நமது அரசியல்வாதிகளின் செயல்பாடுகளைப் பார்த்து.

மேற்பட்ட அனுபவங்களுக்கு நீதி வேண்டி நாம் ஒருவேளை நீதிமன்றம் அணுகினால் என்னாகும் என்பதை அனுபவித்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள் தெரியும். சமீபகாலமாக செய்தித்தாள்களில் பிற ஊடகங்களில் பார்க்கிறோம் – நீதிபதிகளே இலஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்குகின்றனர் என்று.

ஜனநாயகத்தின் மேற்கண்ட மூன்று தூண்களும் ஆட்டம்கண்டுவிட்டது என்று மக்களுக்குத் தெரியப்படுத்தி, விழிப்பு ஏற்படுத்தி தேர்தல் மூலம் நல்ல ஆட்சியையும் அதன்மூலம் நல்ல அரசாங்கத்தையும் ஏற்படுத்த மிகமுக்கிய பங்களிப்பை செய்வது செய்தித்தாள்கள் உள்ளடக்கிய ஊடகங்கள்தான். ஆனால், ஊடகங்களும் எப்படி செயல்படுகின்றன என்பதையும் மக்கள் நன்கு அறிவார்கள். விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால் விதிவிலக்குள் நாட்டின் விதியை நிர்ணயிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் நாம் பார்த்த ஜனநாயகத்தில் இந்த செய்தி மற்றும் ஊடகத்துறை சந்தித்த அவலங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சிலநேரம் இந்த பேனா முனைகள், கேமராக்கள் பிரதிபலன்களுக்காக இயங்குகிறது எனும்போதுதான் இந்தத் தூணின் மீது சாமான்ய மக்களுக்கு சந்தேகம் உண்டாகிறது. இதிலும் சிலர் சம்பாதிக்க பயன்படுத்துகின்றனர் என்பதையும் கண்கூடாகக் காண்கிறோம். எந்தத் தொழிலும் சம்பாதிக்கத்தான். ஆனால், ஒரு செய்தியை வெளியிட ஒரு தொகையும், வெளியிடாமல் மறைக்க ஒரு தொகையும் தரவேண்டும் என்று விலை பேசப்படும் துறையாக இந்த செய்தி ஊடகத்துறை இருக்கிறது.

இப்போது தலைப்பிற்கு உண்டான விளக்கம் கிடைத்துவிட்டது. இதற்காக விடிவு எப்போது? எப்படி? இதற்கும் மக்கள் நம்புவது இந்த ஊடகங்களையே. ஏனெனில், கத்திமுனையை விட வலிய ஆயுதம் பேனாமுனை என்பதை வரலாறு அறியும். உண்மையும் அதுவே. இந்த நம்பிக்கையை இந்த மீடியாக்கள் காப்பாற்ற வேண்டும். இதில் சமரசங்கள் இல்லாமல் இருந்தால் நல்லது. எனவே, இந்த நம்பிக்கை காப்பாற்றப்படும் என்பதற்கு உண்டான நம்பிக்கையோடு மக்கள் உள்ளனர். இழந்த ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும். நல்ல ஆட்சியாளர்கள், நிர்வாகம், நீதி ஏற்பட வேண்டும். வரிசைப்படி பார்த்தால் நான்காவதாக இருந்தாலும் ஜனநாயகத்தை காப்பதில் முதலிடத்தில் உள்ளது என்பது மீடியாக்களே. அதற்கு நான்காவது தூணாக உள்ள இந்த செய்தி ஊடகங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

– எஸ்ஏ. முத்துபாரதி

Categories: Uncategorized

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: