சகோதரா,

Thursday, June 13th, 2013 @ 9:39AM

Ambedkar

ஒவ்வொரு மடலிலும் ஓர் மாபெரும் ஆளுமைகளை நாம் பகிர்ந்து கொள்வது அவசியமானதும், மகிழ்ச்சியானதும் என்று கருதுகிறேன். இந்த மடலில் நாம் திரு.பீமா ராவ் அம்பேத்கர் பற்றி ஒரு சில தகவல்களையும் அவரின் கனவுகள் தற்கால சமூகத்திற்கு எவ்வளவு தேவை என்பதையும் பார்ப்போம். பூமிப்பந்தில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் அதற்கான வீச்சுடன் வாழ இங்கு உரிமை உண்டு. ஆனால் மானிட குலத்தில் பிறந்து மானிடனாய் அறியப்படாமல் பிறந்த ஜாதி மதம் இவற்றால் இனம் காணப்பட்டு எவ்வளவு உயர்ந்த செயலும் இதன் அளவு கோளில் மட்டுமே அளக்கப்படும் என்பது எவ்வளவு துன்பமான ஒன்று. அதன் முழு பாதிப்பையும் தாங்கியவர் அம்பேத்கர். நாம் உணர்வு உள்ளவர்களாய் பிறந்து விவரம் வளர்ந்து நம்மைப்பற்றிய புரிதல் தொடங்கும் போது சமூகம் காட்டும் புறக்கணிப்பு எவ்வளவு கொடுமை தெரியுமா? அதுவும் ஒருவன் பிறப்பது அவனின் தேர்வு அல்லது தெரிவு இல்லை எனும் போது, எந்த குலம், இனம், ஜாதி, என்பது எவ்வளவு நம்மை பாதிக்கும் யோசித்துப்பார். வளர் இளம் பருவம் வரும் போழ்து நாம் கேள்வி மயமாகிறோம். எதைப்பற்றியும் ஒரு புது சித்தாந்தம் உருவாக்கிக் கொள்ளும் நேரம். எதையுமே ஒரு மாற்றுச் சிந்தனையுடன் அணுகிப்பார்த்து தேடத் தூண்டும் வயது, ஒரு வரம்பிற்குள் நிலைகொள்ள இடம் கொடாத பருவம். இது எல்லார்க்கும் நடக்கும். அப்படி ஒரு வேளையில் உன் முயற்சிகளை தேவைகளை தேடுதல்களை மாற்றுப்பார்வையை எந்தவித முன் வைப்புகளும் இன்றி நீ பிறந்த பிறப்பை பற்றி மட்டுமே அனுமானித்து ஒரே கூறாய் புறந்தள்ளும் போழ்து பிறப்பு ஒரு சுமையாய் மாறி வாழ்வின் தேவை என்ன? அர்த்தம் என்ன? இனி நாம் யார்? எப்படி வாழப்போகிறோம்? இயலாமை நம்மைச்சூழ்ந்து அதன் பிடி இறுகி நாம் பலமின்றி கூனி குறுகி நிற்கும் வேளையை உன்னால் அனுமானிக்க முடிகிறதா சகோதரா? அதன் முழு வீச்சையும் அனுபவித்தவர் அம்பேத்கர். சரி அவர் மட்டும்தானா இந்த மோசமான நாகரீகமற்ற தாக்குதல்களுக்கு உள்ளானவர்? எத்தனையோ லட்சோப லட்சம் மக்கள் பிறவி எனும் தான் எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்த முடியாத ஆயுதம் தாக்கி மடிகிறார்கள். அங்குதான் அண்ணல் அம்பேத்கர் தனித்து காணப்படுகிறார். கடலலை கண்டு மகிழ்பவர் ஒரு வகை, அவர் தொலைவில் நிற்பர். கடலலையில் விளையாடுபவர் ஒருவகை. சற்று அருகில் சிரமம் கொள்ளாமல் நிற்பர். வீழ்ந்து , தவித்து, எதிர்த்து கடல்லையை வெல்பவர் ஒரு வகை. வரலாறு யரை பதிவு செய்து கொள்ளும் சகோதரா? இதை நான் விளக்கிச் சொல்ல வேண்டாம் இதில் அம்பேத்கர் எந்த வகையில் சேர்ந்தவர் என்று ஐயந்திரிபற தெளிவு தானே. சகோதரா இதில் ஒரு மிக முக்கியமான எதிர் நிகழ்வை நாம் பதிவு செய்ய வேண்டும். எதிர் நீச்சல் இட்டு வெளியேறி தம் வாழ்வை வளமாக்கி தனக்கும் நிகழ்வுக்கும் தொடர்பே இல்லை போல் பெருவாரியான முடிவுகளில் மூழ்கிப் போவோர் உண்டு. இங்கு வரலாறு ஒரு மகத்தான மனிதனை வசமாக்கிய விஷயம் இதுதான். அவன் வெளியேரி ஓடவில்லை. கரை சேர்ந்தபின் கரையில் குடி கொண்டு தான் யார் என்று பறை சாற்றி தன்னைப் போல் வீழ்ந்து வருவோரை கரை சேர்க்கும் ஆயுதமாய் மாறினான். எல்லோரும் எப்படி அவன் ஆயுதத்தை மழுங்கச்செய்யலாம் என்று யோசித்தபோது அவன் அதை மிகக்கூர்மைப்படுத்தும் வழியை கண்டு பிடித்தான். கல்வி எனும் ஆயுதம் அது சென்று சேரும் போது எதிர்ப்பு எனும் அலை தோற்கும் என்பதை செயல் படுத்திக் காட்டினான்.

கற்பி, ஒன்று சேர், போராடு, இந்த வார்த்தைகளை உரக்கச்சொல்லிப்பார் சகோதரா, கற்பித்தல் என்றால் என்ன? சமூக விழுமியங்கள் எளியோரை ஏய்க்கும் பணியை செய்யும் போது வலியோர் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் எனும் நிலை தொடர்ந்து மனித மரபனுக்கூறுகளில் தோய்ந்து நிற்கும் போது அதன் “பாலி நியூக்ளியோடைடு” களை உடைக்கும் பணிதான் கற்பித்தல் என்பது. கடினத்திலும் கடினமான காரியம் இல்லையா இது.

ஒன்று சேர் . சொல்ல மிக எளிதானதும் செயலில் மிகக் கடினமானதுமான ஒரு செயல் ஒன்றினைதல் என்பது. அதுவும் அடித்தளத்தில் சமூக பிரக்ஞை இல்லாமல் இருப்பவர்கள் ஒன்றாக சேர முடியுமா? ஆனால் நாம் புகட்டும் கல்வி மூளையில் மாற்றம் கொண்டு வரும் போது ஒன்றாய் சேர்ந்தால்தான் அது சமூக பாதிப்பு சாதனமாய் மாறும். உலகம் முழுதும் இந்த அடிப்படையில் எத்தனையோ நிகழ்வுகள் நிறைவேறி உள்ளது. குழுவாய் முனையும் போது ஒரு அசாதரண விளைவு வரும். அதன் பலம் பல மடங்கு உயர்ந்து நிற்கும். அதனால் ஒண்று சேர்க்கும் பணியில் ஈடுபட்டார் அண்ணல் அவர்கள்.

போராடு : இந்த மந்திரச்சொல்தான் மானுட வளர்ச்சி எப்போதும் எதனூடும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் போராட்டம் இருக்குமேயானால் அதன் விளைவு தெளிவு என்பது. தெளிவே திடம். திட மனது நிலைத்து நிற்கும்.இந்த நிலை பிறந்து, இனி யாரும் பிறப்பால் வேற்றுமை பாராட்டாமல் செயலால் செதுக்கப்பட வேண்டும் என்றுதான் இந்த வலிமையான மூன்று வார்த்தைகளை முழங்கினார்.

“கற்பி, ஒன்றுசேர், போராடு”

சகோதரா, அம்பேத்கரின் வாழ்க்கை குறிப்புகளை பதிவு செய்யவிரும்பவில்லை நான். அது எல்லார்க்கும் எளிதாய் இன்று இணையம் தந்து விடுகிறது. அதை ஏன் மறு பதிவு செய்ய வேண்டும். அம்பேத்கர் எனும் ஆளுமை வந்து, வாழ்ந்து, வரலாறாய் மாறிய பாதையின் படிப்பினைகள் நமை வேறு தளத்திற்கு இட்டுச்செல்லுமானால், அது நாம் அவருக்குச் செய்யும் மரியாதை மட்டுமல்ல மானுட வளர்ச்சிக்கு நாம் கொட்டும் ஒரு குவளை நீர் போல்.

சகோதரா, என்று விடுவோம் இந்த சமூக அவலங்களை, அம்பேத்கர் இன்று விடுதலை வாங்கித்தரும் தலைவர். பல ஆட்டோ ஸ்டேண்டுகளின் நாயகர். பாவம் கையில் புத்தகம், ஊர் விரல் வானை சுட்டி எதயோ காட்டும் சிலை அவ்வளவுதானே. இல்லையேல் ஏன் இன்னும் தருமபுரியும், மரக்கானமும் தமிழகத்தில்.

நெமோ

Categories: Article, May 2013, Whistle, கடிதம்

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: