நிற்கட்டும் மொழி அரசியல்

Thursday, June 27th, 2013 @ 3:12PM

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த நேரமது. மாநில வாரியாக, மாவட்ட வாரியாக முதல் மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியரை தொலைக்காட்சி ஊடகங்களும், அரசு ஊடகங்களும் புகழ் மாலை சூட்டி வந்தன. மாவட்ட ஆட்சியர், மந்திரிகள் என அனைவரும் அவர்களை பாராட்டினார்கள். அரசு பள்ளிகளில் படித்து சிறப்பான மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியர்களும் பெருவாரியானவர்களின் லட்சியம், ‘மெடிக்கல் படித்து மக்களுக்கு சேவை செய்யணும்’, என்பதாகவும் ‘தங்கள் கிராமத்தில் ஒரு மருத்துவமனை கட்டி மக்களுக்கு இலவச வைத்தியம்’ என்பதாகவும்தான் இருந்தது.

முதல் மதிப்பெண் எடுத்து, இதுவரை கல்வியை மட்டுமே சுவாசித்து வந்த மாணவ, மாணவியர் மருத்துவ கல்லூரியில் ஒன்று கூடினார்கள். தமிழ்நாட்டின் தலை சிறந்த மாணவர்களின் சங்கமம் அது. இன்னும் 5 வருடத்தில் நான் “டாக்டர்” என்ற கனவோடு, வகுப்பறையுள் புகுந்த ஆசிரியருக்கு அவர்கள் வணக்கம் செலுத்தினார்கள்.

வணக்கத்தை ஏற்றுக்கொண்ட ஆசிரியர்கள், அரசுப் பள்ளிகளில் படித்தவர்களை மட்டும் எழ சொன்னார்கள். அமர்ந்திருந்த 150 மாணவரிகளில் 80 பேர் எழுந்தனர். `நீங்க எல்லோரும் முதல் வருடம் பெயில் ஆயிடுவீங்க. இப்போ உட்காருங்க’ என்றனர். வந்தவர் சொன்ன விதம் கடுமையானதாக இருக்காலாம். ஆனால் அவர் சொன்னது அப்படியே பலித்தது. சுமார் 75 மாணவர்கள் தோல்வியுற்றார்கள். சென்னையின் புகழ்பெற்ற ஒரு அரசு மருத்துவ கல்லூரியில் நடந்த உண்மை இது. அவர்கள் செய்த தவறு தமிழ் வழியில் படித்தது. அந்த தோல்வியின் தொடக்கம் எத்தனை மாணவர்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது என்று நமக்கு தெரியுமா? தோல்வி என்ற வார்த்தையே தெரியாத பலர், 5 வருடம் முடிக்க வேண்டிய படிப்பை 8 வருடங்கள் கூட முடித்த கதை நமக்கு தெரியுமா?

100 நாள் வேலை செய்யும் பெண்கள் சிலரை ஊராட்சி ஒன்றில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. கேள்வி, அவர்கள் குழைந்தையின் கல்வி பக்கம் திரும்பியது. அவர்களின் ஊதியம் எல்லாம் தங்கள் குழந்தை படிக்கும் தனியார் பள்ளிக்கு செலவிடப்படுவதாக அவர்கள் சொன்னார்கள். அங்கு அருகிலிருக்கும் அரசு பள்ளியில் “செயல் வழிக் கற்றல்’’ (Activity based learning) மூலம் பாடம் நடத்தப்படும் விதம் தனியார் பள்ளிகளில் கூட கற்றுத்தரப்படுகிறதா என்பது சந்தேகமே. நல்ல முறையில் பள்ளி பராமரிக்கப்பட்டும் வந்தது. அங்கிருந்த ஆசிரியைகள் சிறந்த முறையில் பாடம் நடத்துவதும் நம்மால் உணர முடிந்தது. பின் ஏன் தனியார் பள்ளி என அவர்களை கேட்டோம். ஒரே காரணம் – “ஆங்கில வழிக் கல்வி’’. (ஆசிரியைகளின் பிள்ளைகள் படிப்பதும் அங்குதான். தங்கள் பள்ளி போல் சிறப்பானதொரு கல்வி அங்கு இல்லையென்றாலும், அங்கு ஆங்கில வழிக் கல்வி)

இந்த நிதர்சனங்களை கொண்டு பார்க்கும்பொழுது, தமிழக அரசு ஆங்கில வழிக் கல்வியை இன்னும் பல அரசு பள்ளிகளில் விரிவுப்படுத்துவது நிச்சயம் வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால் அதே சமயம் அதற்கான ஆசிரியர்களை நியமிப்பதில் ஏதேனும் தயக்கமோ, சுணக்கமோ ஏற்பட்டால் இந்த திட்டம் வீணாய்போகும்.

ஒரு பக்கம் இதை சிலர் ஆங்கில மோகம் என்று சொல்லலாம். இல்லை இதுவே நடைமுறை சாத்தியம் என்ற உண்மையை ஒத்துக்கொள்ளலாம். ஒரு மொழி மட்டும் பேசும் நாட்டில் வேண்டுமானால் தாய் மொழி கல்வி குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளலாம். பல மொழிகள் பேசி, பல நாடுகளுக்கு செல்லும் தமிழர்களுக்கு ஆங்கிலம் அவசியமான ஒன்று.

இது குறித்து செய்யப்படும் ‘மொழி அரசியல்’ அலட்சியப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. அவர்களின் வாதம் கொண்டே, தமிழ் மொழியில் படித்த பலர் இன்று வெகு இயல்பாக ஆங்கிலம் பேசுவதும், வெளிநாடுகளில் சாதிப்பதும் சாத்தியம் என்றால், ஆங்கில வழியில் படித்தவர்கள் தமிழ் ஆர்வலராகவும், பண்டிதர்களாகவும், தமிழ் மொழியின் தலை சிறந்த பிள்ளைகளாவதும் நிச்சயம் சாத்தியமே. இனிமேல் எல்லா அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி மட்டுமே என்ற நிலை எப்பொதுதேனும் வந்தால் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகளில் இப்பொழுதே இறங்க வேண்டிய அவசியம் இல்லை. நடைமுறை அறிவு நம்மை செலுத்த வேண்டிய திசைக்கு நிச்சயம் செலுத்தும். தற்பொழுது அரசு கொண்டுவந்துள்ளது மாணவர்களுக்கான ஒரு ‘விருப்பம்’ மற்றும் ‘வாய்ப்பு’. இது வரை தமிழ் வழியில் மட்டும் பாடம் பயின்றவர்களுக்கு, இனி ஆங்கில வழியிலும் படிக்கலாம் என்ற வாய்ப்பு.

முன்பு தாய் மொழி கல்வி மட்டுமே என்று இருந்த நிலையில் இன்று தமிழ், ஆங்கிலம் என்ற ‘விருப்பம்’ நமக்கு கிடைத்துள்ளது. இந்த ‘விருப்பம்’ அவசியமான ஒன்று. மொழியை கொண்டு செய்யும் அறிவற்ற அரசியல் நிற்கட்டும்.

Categories: Article, Whistle, தலையங்கம்
Tags: , , , ,

3 Comments to "நிற்கட்டும் மொழி அரசியல்" add comment
Bhimrocky
June 29, 2013 at 5:13 am

நான் இதை ஆதரிக்கிறேன்.

jagadhees
July 1, 2013 at 4:15 pm

நன்றி

நாராயணன்
June 29, 2013 at 1:59 pm

”தமிழ் மொழியில் படித்த பலர் இன்று வெகு இயல்பாக ஆங்கிலம் பேசுவதும், வெளிநாடுகளில் சாதிப்பதும் சாத்தியம் என்றால், ஆங்கில வழியில் படித்தவர்கள் தமிழ் ஆர்வலராகவும், பண்டிதர்களாகவும், தமிழ் மொழியின் தலை சிறந்த பிள்ளைகளாவதும் நிச்சயம் சாத்தியமே. ”

தாய்மொழிவழியில் மட்டுமே ஒருவனது சிந்தனை முழுமை கொண்டதாக இருக்கும். மற்றவைகள் மொழிகளாக மட்டுமே பார்க்கப்படவேண்டும். தாய்மொழிவழியில் படித்து ஆங்கில மொழியறிவும் கொடுக்கப்பட்டால் மேற்படிப்புகளில் நன்கு செயல்படலாம் என்பதுதான் சரியான வாதமாக இருக்க முடியும். இதைத்தான் உங்களது வரிகள் சுட்டிக்காட்டும் உண்மை. தமிழ் வழியில் படித்தவர்கள் வெகு இயல்பாக ஆங்கிலத்தில் பேசுவது என்பது அவர்களுக்கு அம்மொழியறிவு சரியாக அளிக்கப்பட்டது, மேலும் அதன் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது என்பதுதான் சரியானதாக இருக்கும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தாய்ப்பால் இயற்கையானது, உண்மையான சத்தை அளிக்கக் கூடியது. லேக்டோஜன் அதுபோல அல்ல. தாய்மொழி தாய்ப்பால் போன்றது.

நீங்கள் மொழி அரசியல் என்ற ஒன்றைக் குறிப்பிட்டுள்ளீர்கள், அது உண்மையிலேயே வெற்று அரசியல். அவர்கள் தமிழ் மட்டுமே போதும் என்கிறார்கள். நீங்கள் ஆங்கிலம்தான் வேண்டுமென்கிறீர்கள். தமிழ் தெரிந்தவன் ஆங்கிலம் கற்றுக் கொள்வது ஒன்றும் தவறில்லை, மேலும் அது நல்ல மொழியறிவைக் கொடுக்கும்.

ஆனால் ஆங்கில வழி பயிலும் மாணவர்கள் தமிழ்பண்டிதர்களாக சாத்தியக்கூறே இல்லை. இன்றைய மெட்ரிக், சிபிஎஸ்ஸி மாணவர்களின் தமிழறிவை சோதித்துப்பாருங்கள். உண்மையை விளங்கிக் கொள்வீர்கள்.

தனியார்பள்ளிகள் பிராய்லர் கோழிகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அதை நோக்கி அரசுப்பள்ளிகளை செலுத்துவது தவறு. நீங்கள் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்று கூறியிருக்கிறீர்கள். எத்தனை பிராய்லர் கோழிகள் தேர்ச்சி பெறவில்லை என்பதைக் கூறவில்லையே? +1 படிக்காததனால் ஏற்படும் விளைவு அது.

மேலும் அரசுப்பள்ளிகளில் ஏற்கனவே விருப்பபடி கல்வியை ஆங்கில வழியில் தேர்வு செய்யும் வசதி இருக்கிறது. ஆனால் அது ஆரம்பக் கல்வியில் இல்லை. இப்பொழுதோ முழுவதும் ஆங்கில மொழிவழியாய் மாற்றுவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அதிகப்படியான கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் தாய்மொழிவழிக் கல்வியையே ஆதரிக்கிறார்கள்.

பெற்றோர்களுக்கு ஓர் வேண்டுகோள், நீங்கள் ஒரு மனிதனை உருவாக்க நினைத்தால் தாய்மொழிவழிக்கல்வியில் படிக்கச் செய்யுங்கள், ஒரு கார்பரேட் பணத்திற்கான அடிமையை உருவாக்க நினைத்தால் ஆங்கில வழிக் கல்வியில் படிக்க செய்யுங்கள்.

Leave a Reply

%d bloggers like this: