மே 1 தொழிலாளர் தினம்

Monday, June 3rd, 2013 @ 6:11PM

uzhaipalar-silaiபார் முழுக்க பறந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு மருந்து போட்ட நன்னாள். உழைக்கும் வர்க்கத்திற்கான உயரிய நாள். காலவரையற்ற உழைப்பு, மிருகத்தனமான, கொத்தடிமைத்தனமான இன்னல்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள தொழிலாளர் அமைப்புகள் மேற்கொண்ட தொடர் போராட்டங்கள், பட்ட கஷ்டங்கள் கணக்கற்றவை.

தொழிலாளர் கூட்டத்தின் முதல் உரிமைக்குரல் 1806ஆம் ஆண்டு அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் ஒலித்தது. அதுவரை நடைமுறையில் இருந்த 12 முதல்20 மணி நேர வரையிலான அசுரத்தனமான உடல் உழைப்பை எதிர்த்து 10மணி வேலை நேரம் கேட்டு ஒலித்தக் குரல்கள் முதலாளி வர்க்கத்தால் ஒழித்துக் கட்டப்பட்டன. 30 வருடங்கள் உறங்குவதாய்த் தெரிந்த உணர்வுகள் 1837-ல் மீண்டும் புது எழுச்சி கண்டது. இம்முறை சீற்றம் கொண்டது. சீறி எழுந்தது. முதலாளி வர்க்கத்தின் செவிட்டு செவிப்பறைகளை அடித்து கிழித்தது, ஆட வைத்தது விளைவு.

பாகுபாட்டோடு ஓர் சட்டம் அமெரிக்காவில் நடைமுறைபடுத்தப்பட்டது. அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு மட்டும் 10 மணிநேரம் வகுக்கப்பட்டது. மற்ற தொழிலாளர்கள் கைவிடப்பட்டவர்கள் ஆயினர். இதனால் புரட்சியின் வேகம் மீண்டும் புதுப்பொலிவு கண்டது. வேகம் கொண்டது. 1856-ல் தொழிலாளர் வர்க்கத்தின் தொடர் போராட்டம் மே 1 அன்று விடியல் கண்டது.

8 மணி நேர வேலை 8 மணி நேர மன மகிழ்வு… 8 மணி நேர உறக்கம்.. மே 1 தொழிலாளர்களின் வெற்றி நாளாய் விடியல் நாளாய் விடுமுறை நாளாய் ஆஸ்திரேலியாவில் அவதாரம் கண்டது. அந்த விடியல் உலகம் முழுக்க வியாபிக்க 33 ஆண்டுகள் பிடித்தது. 1889ஆம் ஆண்டு உலகம் முழுக்க ஒட்டுமொத்த தொழிலார்களின் புரட்சி விழா கொண்டாடப்பட்டது.

தொழிலாளர்களின் உணர்வுகளும்,தேவைகளும் முழுமையாய் உலகம் முழுக்க ஏற்றுக்கொள்ளப் பட்ட பின்பும் இந்திய தேசத்தில் 1923 ஆம் ஆண்டுதான் இந்தியாவில் சென்னை மாநகரில் தான் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம.சிங்காரவேலர் தான் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாக் கொண்டாடினார்.

‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்பதே மே தினம் அளித்த உரிமை முழக்கமாகும்.

1889 மே 1 இலிருந்து இன்று வரை ஒவ்வொராண்டும் மே 1ம் தேதி சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தொழிலாளரின் அவர்களது ஆற்றலின் தேவையை உணர்த்த வேண்டிய, போற்ற வேண்டிய இந்நாள் உண்மையான நோக்கத்திலிருந்து தலைகுப்புறப் புரண்டுவிட்டது. தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுப்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கம் பெற்ற இந்நாளானது இன்று உருவாக்கத்தின் நோக்கத்தையே மறந்து விட்டு ஒரு கேளிக்கை தினமாக மாறி வருவது சிந்திக்க வேண்டியதொரு விடயமாகும்.. தொழிலாளரின் ஒற்றுமையை உறுதிப்படுத்த சபதமேற்கும் இந்நாள் தொழிலாளரின் உரிமைகள் வெற்றிகொள்ள ஒன்றுபட்டுக் குரல் எழுப்ப வேண்டிய இந்நாள் பல்வேறு பிரிவினைகளுக்கு உரமூட்டும் நாளாக அமைந்துவிட்ட அவலத்தை நாம் காணக்கூடியதாக உள்ளது.

உழைப்பாளரின் சக்தியை, ஒற்றுமையை ஓங்கியொலிக்க வேண்டிய இந்நாள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்ட அவல நிலையையே வெளிப்படுத்துகின்றது. இத்தினத்தின் நோக்கம் இன்று புறந்தள்ளப்பட்டு இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளதும் ஆள்பலத்தை வெளிப்படுத்தும் தேசிய நாளாக அமைந்துவிட்டது என்றால் அதுவே யதார்த்தம். அதுவே உண்மை.

உழவர் திருநாள் தைப்பொங்கலன்று இந்த அரசியல்வாதிகள் கூட்டம் போடுவதில்லை. ஆசிரியர் தினமன்று இந்த அரசியல்வாதிகள் கூட்டம் போடுவதில்லை. ஆனால் தொழிலாளர் தினம் அனைத்து தொழிலாளர்களையும் சாதி மத இன பேதமின்றி ஒன்றுபடுத்துவதால் தங்களுக்கேயுரிய நயவஞ்சகபுத்தியை அரசியல்வாதிகள் அரங்கேற்றுகின்றனர். நாட்டில் எத்தனையோ குழந்தைத்தொழிலாளர்கள் துன்பப்படுகிறார்கள். அவர்களைப்பற்றிய கவலை இந்த அரசியல்வாதிகளுக்கு இல்லை அதற்குரிய ஒரே காரணம் குழந்தைத்தொழிலாளர்களுக்கு ஓட்டுப்போடும் வயது இன்னமும் வரவில்லை. ஆகவே அவர்களின் நலனோ முன்னேற்றமோ எங்களுக்கு தேவையில்லை. ஓட்டுப்போடும் வயசு வந்தாச்சா வாங்க மே தினக்கூட்டத்துக்கு என்று அறை கூவல் விடுகின்றனர்.

பிள்ளையார் பிடிக்க குரங்கானது என்பது போல் தொழிலாளரின் உரிமை பற்றி குரல் கொடுக்க வேண்டிய மேதின ஊர்வலங்களும், கூட்டங்களும் இன்று அரசியல் ஊர்வலங்களாகவும் அரசியல் மேடைகளாகவும் மாறிவிட்டன.. ஜனநாயக நாடான நமது நாடுகளில் மேதினம் நடத்த, ஊர்வலம் செல்ல, கூட்டத்திற்கு ஆள்திரட்ட பண நாயகமும், மதுநாயகமும் உதவும் பரிதாப நிலையும் காணப்படுகின்றது.

மேதினத்தின் நோக்கத்தையே, அதன் உண்மைத் தாற்பரியத்தையே குழிதோண்டிப் புதைத்துவிட்டு அதன் மேல் நின்று ஒப்பாரி வைப்பது போன்றே இன்றைய காலத்தில் மேதினம் கொண்டாடப்படுகின்றது. “தொழிலாளர் வர்க்கமே ஒன்றுபடு! உரிமைகளை வென்றெடு! நிலைநாட்டு!” என்று குரல் எழுப்ப வேண்டிய பெருமதிமிக்க இத்தினத்தில் மூன்றாம் உலக நாடுகளின் நவீன சுரண்டல்கள் பற்றியும், நமது நாடுகளின் தொழிலாளர் நிலைபற்றி சிந்திப்பது காலத்தின் தேவையாகும்.

தொழிலாளர்களே ஆடு நனைகிறது என்று அழும் ஓநாய்களான அரசியல்வாதிகளிடமிருந்து மீண்டுவர மீண்டுமொரு புரட்சி தேவைப்படுகிறது. மே தினம் தொழிலாளர்களால் அனுஷ்டிக்கப்பட வேண்டுமே தவிர அரசியல்வாதிகளால் அல்ல அப்போதுதான் மே தினத்திற்கும் புத்துயிர் கிடைக்கும்.

Categories: Article, May 2013, Whistle
Tags:

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: