அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு ஓட்டு வங்கி அரசியலே காரணம்

Monday, July 22nd, 2013 @ 10:31PM

English version: http://news.loksatta.org/2013/07/vote-bank-politics-to-blame-for-rise-in.html

லோக் சத்தா கட்சியின் தேசிய தலைவர் திரு. ஜெயப்ரகாஷ் நாராயண் இன்று பேசுகையில் அத்தியாவசிய பொருட்களான வெங்காயம், பருப்பு வகைகள், தக்காளி மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை திடீரென உயர காரணம் அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கி அரசியலே என்று குற்றம் சாட்டினார்.

எந்த ஒரு பொருளின் விலையும் தேவையையும், வழங்குதலையும் பொறுத்தது. விவசாயம் என்பது இயற்கையையும், விவசாயியின் விருப்பத்தையும் பொறுத்து அமைவது. ஒவ்வொரு முறையும் வெங்காயத்தின் விலை உயரும் போதும், அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் அதை மிகவும் பெரிது படுத்தி வெங்காய ஏற்றுமதியை தடைசெய்தும், அதிக செலவு செய்து இறக்குமதி செய்தும், விற்பனை மற்றும் சேமிப்பதில் தேவையில்லாத பல கட்டுப்பாடுகளை விதித்தும் சந்தையை செயற்கையாக கட்டுப்படுத்துகின்றனர். இதன் விளைவாக விலை குறைகிறது. அதோடு சேர்ந்து பயிரிடுதலும் குறைகிறது. இந்த சுழற்சி முடிவில்லாமல் தொடர்கிறது. கடைகளில் கிலோ ரூ 30 முதல் ரூ 40 வரை விற்கப்படும் தக்காளி,விரைவில் விவசாயிக்கு கிலோ ரூ 2 கூட பெற்றுத்தராது. ஒவ்வொரு வருடமும் போட்ட முதலை கூட எடுக்க முடியாத காரணத்தினால் பல விவசாயிகள் தங்கள் பயிரையே அழிக்கும் கொடுமை நடக்கிறது.

இத்தனை வருட தோல்விகளிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். சீக்கிரம் அழுகாத பண்டங்களை சேமிக்க தேவையான கிடங்குகளை ஏற்படுத்தி, அந்த கிடங்குகளில் விவசாயிகள் சேமிப்பதற்கு ஏற்றாற்போல் அவர்களுக்கு கடன் வழங்க வசதி செய்ய வேண்டும். அழுக்கக்கூடிய பண்டமாக இருப்பின், அதை உடனடியாக பதப்படுத்தும் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் ஒரு பருவத்தில் அறுவடை பொய்த்தால் கூட , அதனால் எந்த பற்றாக்குறையும் ஏற்படாமல் இருக்கும்.

நம்முடைய இறக்குமதியில் சமையல் எண்ணெய் மற்றும் பறுப்பு வகைகள் ஆகியவை பெரும் பங்கு வகிக்கிறது. இந்த அளவு ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அரசாங்கம் நம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, இறக்குமதிக்கு வரிவிதித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை சமையல் எண்ணெய் மற்றும் பறுப்பு வகைகளின் உற்பத்தியை பெருக்க பயன்படுத்தவேண்டும். இப்படி ஒரு கொள்கை உணவு பாதுகாப்பிற்கு உத்திரவாதமளித்து, நமது மொத்த தேவையை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோலும். இப்பொழுது உள்ள நடப்பு கணக்கு பற்றாக்குறை சூழலில்,இதன் மூலம் அரசாங்கம் 60,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்நிய செலாவணியை சேமிக்கலாம்.

ஊடகங்களும் குறுகிய கால விலையேற்றம் பற்றி செய்தியளிக்கும் பொழுது அடிப்படை பொருளாதார விதிகளையும்,நீண்ட கால நாட்டின் வளர்ச்சிக்கும் விவசாயிகளின் நல்வாழ்வுக்கும் தேவையான கொள்கைகளையும் மனதில் வைத்து செயல்படவேண்டும். இவ்வாறு டாக்டர் ஜே.பி கூறினார்.

Categories: Press Releases
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: