ஆட்டோ கட்டணம் – பல ஆண்டு கனவு நிறைவேறும் தறுவாயா?

Friday, July 5th, 2013 @ 10:57AM

auto-fare-regulationபல பல ஆண்டுகளாக சென்னையில் ஆட்டோவில் மீட்டர் படி கட்டணம் என்பது எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பெட்ரோல் விலைக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை உடன் மாற்றாத அரசுகளே. கட்டண உயர்வு ஒரு அரசியல் முடிவாகும், மக்களிடம் அதிருப்தியை பெறக் கூடியதுமாகப் பார்க்கப்படுவதுதான் இதற்கு முக்கிய காரணம். கடைசியாக 2007-ம் ஆண்டு தான் பல ஆண்டுகளுக்குப் பிறகு விலை உயர்த்தப்பட்டது. விலையை காலம் தாழ்த்தி மாற்றினாலும் ஆட்டோ ஓட்டுனர்களுக்குக் கட்டுப்படி ஆகும் நியாயமான கட்டணமாக அது இருப்பதில்லை, மேலும் பெட்ரோல் விலையும் உடன் கடுமையாக உயர்ந்து விடுகிறது. அதனால் மீட்டர் போடும் வழக்கம் சிறிது காலத்திலேயே கைவிடப்படுகிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு

இந்நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு உச்ச நீதி மன்றத்தில் வழக்கறிஞர் ஒருவரால் வழக்கு தொடரப்பட்டது. அதில் டிசம்பர் 3-ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் கட்டணத்தை மாற்றி அமைக்கும்படி மாநில அரசுக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவு மே வரையிலும் பின்பற்றப்படாததை அறிந்த நீதிமன்றம் கடைசி வாய்ப்பாக ஜூலை 6-ம் தேதிக்குள் கட்டணத்தை மாற்ற உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லோக் சத்தாவின் பணி

ஆட்டோ கட்டண சீர்திருத்தத்திற்காக லோக் சத்தா தமிழ்நாடு பல்வேறு கட்டங்களில் தீவிரமாக போராடியுள்ளது. கடந்த ஆண்டு இதன் பொருட்டு சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் பல வாரங்கள் தொடர் கையெழுத்து இயக்கங்கள் நடத்தி போது மக்களிடம் பல்லாயிரக்கணக்கான கையெழுத்துக்கள் வாங்கி போக்குவரத்து துறை அமைச்சர், செயலர் ஆகியோருக்கு அனுப்பி வைத்து அரசின் கவனத்தை ஈர்த்தோம். இது போன்ற முயற்சிகளின் பலனாக அரசு உயர் அதிகாரிகள் ஆட்டோ கட்டண முறை சிறப்பாக இருப்பதாக நாம் குறிப்பிட்ட கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கே உள்ள முறைகளை அறிந்து வந்தனர். அதன் பின்னர் கட்டண மாற்றத்திற்குப் புதிய முறை உடன் செயல்படுத்தப்படும் என்று நாம் எதிர்பார்த்து இருந்தபோது மீண்டும் அது அரசியல் காரணங்களுக்காக கிடப்பில் போடப்பட்டது.

தீர்வு

அரசுக்கு அளித்த மனுவில் முக்கிய தீர்வாக பெட்ரோல் விலை மாற்றத்ததிற்கு ஏற்ப உடன் கட்டணத்தை மாற்றி அமைக்க வழி செய்யும் ரேட் கார்டு திட்டத்தை பரிந்துரைத்து இருந்தோம். பெட்ரோல் மற்றும் இதர விலை மாற்றத்தின் போது குறிப்பிட்ட சூத்திரத்தின் அடிப்படையில் தனிச்சையாக செயல்படும் குழு ஒன்று ஆட்டோ கட்டணத்தை மாற்றும். அதன் அடிப்படையில் புதிய அட்டவணை(ரேட் கார்டு) வெளியிடப்பட்டு அனைத்து ஆட்டோக்களுக்கும் போது மக்களுக்கும் விநியோகிக்கப்படும். இது போன்றதொரு தீர்வே அரசு அமுல்படுத்தும் என்று நம்புகிறோம்.

சுதந்திரக் கொள்கை அடிப்படையிலான முன்னோக்கிய தீர்வு

லோக் சத்தா சுதந்திர கொள்கை அடிப்படையில் இயங்கும் கட்சி. அதன் படி பார்த்தோமேயானால் அரசின் தேவை அற்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவே பொதுவாக நம் ஆதரவு. ஆட்டோ கட்டணத்தில் இது சாத்தியமா என்பது சிந்திக்கப்பட வேண்டியது தான். ஆட்டோ ஒட்டுநர்களுக்கே கட்டண நிர்ணய சுதந்திரம் அளிக்கப்பட்டு, சந்தையில் போட்டியிட அனுமதிப்பது நல்ல பலனைத் தரவும் வாய்ப்பு உள்ளது. இணைக்கப்பட்ட படத்தில் உள்ளது போல ஆட்டோவின் முன்னால் தங்களுக்கு கட்டுப்படியாகும் கட்டணம் எழுதிக்கொள்ள அவர்களுக்கு அனுமதி அளிப்பது சேவை சிறக்க வழி ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. மீட்டர் மட்டுமே கட்டாயம், கட்டணம் சேவை வழங்குபவரின் முடிவின் படி அமையும். தங்கள் சொந்த இடத்துக்கு திரும்ப செல்ல ஆட்டோக்கள் தள்ளுபடி கட்டணம் குறிப்பிடலாம். இதனால் காலி சவாரி குறைந்து திறன் மேம்படும். சென்னையில் பிரபலாமான ஆட்டோ ஒன்றில் இணைய இணைப்பு, பல்வேறு வார மாத இதழ்கள் போன்ற சேவைகள் இருப்பது நாம் அறிந்ததே. இது போன்ற முயற்சிகளுக்கு சுதந்திரம் தான் வழி அமைக்குமே அன்றி கட்டுப்பாடு அல்ல.

தொடர் கண்காணிப்பு

கட்டணத்தை மாற்றினாலும் முந்தைய அனுபவத்தின் படி பார்த்தால் பெரும்பாலும் அவை ஒட்டுனர்களால் கடைப்பிடிக்கப்படுவதில்லை. எனவே காவல்துறை மூலம் தொடர் கண்காணிப்பும், எளிதாக மக்கள் புகார் தெரிவிக்கவும் அதன் மேல் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அறியவும் வழி செய்தல் தேவை. போது மக்கள். பிரதிநிகள் அடங்கிய குழு மூலம் கண்காணிப்பும் அதிக கட்டண வசூல் பற்றிய புகார் கொடுக்கப்படுமாயின், கட்டணம் திருப்பி வழங்கப்படுதலும் கேரளாவில் நடைமுறையில் இருந்தாக அறிகிறோம். இது போன்ற முறை அமல்படுத்தப்படுதல் நலம்.

அஷோக்

Categories: Article, June 2013, Whistle
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: