நீதித்துறை சீர்திருத்தங்கள் – 2

Saturday, July 6th, 2013 @ 3:57PM

CourtGavelநீதித்துறையின் இன்றைய நிலையை சென்ற விசில் இதழில் விரிவாக பார்த்தோம். அதற்கான காரணங்கள், மாற்றம், தீர்வுகள் நோக்கி செல்லும்முன் நீதித்துறை குறித்து நடந்து வரும் நிகழ்வை பற்றி பேசுவது முக்கியமாகிறது.

உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் குழு சிபாரிசு செய்து குடியரசு தலைவர் நியமிக்கும் முறை தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த முறையை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், “உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் நீதிபதிகளை நியமனம் செய்யும் தற்போதைய முறை எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் இல்லை என கருதிகிறோம். ஏன், நீதிமன்ற எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி கூட இல்லை என்று சொல்லலாம். நீதிபதிகள் வெளிப்படையாக, பாரபட்சமற்ற வகையில் தேர்வு செய்யபடுகிறவர்களாக இருக்க வேண்டும்.” இன்னும் செய்தி விரிவடைகிறது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான இரண்டு. 1) தற்பொழுதைய நீதிபதிகள் நியமனம் நம் தேவையை பூர்த்தி செய்யவில்லை. 2) இது ஒரு முக்கியமான சீர்த்திருத்தமாக அரசு மேற்கொள்ளும் முயற்சி. (இது குறித்து விவரமாக நாம் பார்ப்போம்)

இந்த செய்தியோடு கால தாமதமான நீதி, கட்டப்பஞ்சாயத்து, வாய்தா வழக்கு, ஏழைக்கு எட்டாத நீதி ஆகிய நிலைகளுக்கான காரணங்களை பார்போம்.

நெருக்கடியும், காரணங்களும்

நீதிபதிகளின் எண்ணிக்கை

1987 ஆம் ஆண்டு வெளிவந்த 120வது சட்ட ஆணையத்தின் அறிக்கை (Law Commission Report) நீதிபதிகளின் எண்ணிக்கை குறித்து இவ்வாறு விவரிக்கிறது.

இந்தியாவில் 10 லட்சம் மக்களுக்கு 10.5 நீதிபதிகள் இருக்கிறார்கள். 1975 ஆம் ஆண்டின்படி 1 கோடி மக்கள் தொகை கொண்ட ஆஸ்திரேலியாவில் 10 லட்சம் மக்களுக்கு 41.6 நீதிபதிகள் இருக்கிறார்கள். 1973ஆம் ஆண்டின்படி இரண்டரை கோடி மக்கள் தொகை கொண்ட கனடாவில் 10 லட்சம் மக்களுக்கு 75.2 நீதிபதிகள் இருக்கிறார்கள். 1973 ஆம் ஆண்டின்படி 5 கோடி மக்கள் தொகை கொண்ட இங்கிலாந்தில் 10 லட்சம் மக்களுக்கு 50.9 நீதிபதிகள் இருக்கிறார்கள். கடைசியாக 1981 ஆம் ஆண்டின்படி இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு கொண்ட அமெரிக்காவில் 10 லட்சம் மக்களுக்கு 107 நீதிபதிகள் இருக்கிறார்கள்.’

2002ஆம் ஆண்டு லோக் சத்தா நீதித்துறை சீர்திருத்தங்கள் குறித்து ஒரு விரிவான ஆய்வறிக்கையை சமர்ப்பித்த போதும் நீதிபதிகளின் எண்ணிக்கை சற்றும் மாறவில்லை. நீதிபதிகளின் தேவை 75000 என இருக்க அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை வெறும் 13,000 மட்டுமே. இதிலும் 1874 பணியிடங்கள் காலியாக இருந்தன. 2002 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் நீதிபதிகளின் எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 5 மடங்கு உயர வேண்டும் என அறிவுறுத்தியது.

2004, 2005 ஆம் ஆண்டுகளில் நீதித்துறை தொடர்பாக நடந்த பல்வேறு கருத்தரங்குகளில் பேசிய சட்ட வல்லுனர்களும், நீதிபதிகளும் 10 லட்சம் மக்களுக்கு 10.5 நீதிபதிகள் இருப்பதாகவே மேற்கோள் காட்டுகிறார்கள். ஆகஸ்ட் 2009 வெளிவந்த 230வது சட்ட ஆணையத்தின் அறிக்கையின்படி நீதிபதிகளின் எண்ணிக்கை 10 லட்சம் மக்களுக்கு 10 முதல் 11 நீதிபதிகள் இருப்பதாக தெரிவிக்கிறது.

மார்ச் 2013ல் ஆந்திராவில் நடந்த ஒரு விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி அல்டமாஸ் கபீர், இந்தியாவில் 10 லட்சம் மக்களுக்கு 15 நீதிபதிகள் மட்டுமே இருப்பதாக வருத்தம் தெரிவித்தார்.

ஏப்ரல் 2013-ல் பேசிய மன்மோகன் சிங் இந்தியாவில் 10 லட்சம் மக்களுக்கு 15.5 நீதிபதிகள் இருப்பதாக கவலை தெரிவித்தார்.

மகளிரை அதிகாரப்படுத்தும் குழு தன் அறிக்கையில் 10 லட்சம் மக்களுக்கு 13 நீதிபதிகள் மட்டுமே இருப்பதாக இந்த மே மாதம் கூறியுள்ளது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 18000 இருக்க 15,000 பணியிடங்கள் மட்டுமே நிரப்பட்டுள்ளன.

நிலுவையிலுள்ள வழக்குகள்

1993 ஆம் ஆண்டின்படி உயர் நீதிமன்றங்களில் நிலுவையிலுந்த வழக்குகள் மொத்தம் 26 ½ லட்சம். 2002 ஆம் ஆண்டு இது 36 லட்சமாக உயர்ந்தது. சில வழக்குகள் 15 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்து வருகிறது. கீழமை நீதிமன்றங்களில் சுமார் 2 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

மார்ச் 2012 ஆந்திராவில் நடந்த அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு உச்ச நீதிமன்ற நீதிபதி சுரிந்தர் சிங் அடுத்த ஆண்டு மொத்தம் 15 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கும் என அதிர்ச்சி தெரிவித்தார்.

பிரதமர் தெரிவிக்கையில் தற்பொழுது 3 கோடி வழக்குகளுக்கு மேல் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றில் 26%, 5 வருடங்களுக்கு மேல் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு புள்ளி விவரங்கள்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 2010-ம் ஆண்டு தொடக்கத்தில் நிலுவையில் இருந்த உரிமையில் வழக்குகள் – 11,09,762. அந்த ஆண்டில் மட்டும் மேலும் 11,58,969 வழக்குகள் தொடரப்பட்டு, 2010 ஆம் ஆண்டு முடிவில் நிலுவையில் இருந்த வழக்குகள் 11,51,623 (11,17,108 மொத்தம் தீர்க்கப்பட்டுள்ளன).

இதே போல் 2010ஆம் ஆண்டு முடிவில் நிலுவையில் இருக்கும் குற்றவியல் வழக்குகள் 5,37,915.

தமிழ்நாட்டில் அதிகப்படியான வழக்குகள் தீர்க்கப்பட்டாலும் 2011ஆம் ஆண்டின் படி தமிழ்நாட்டின் மொத்த வழக்குகள் 16.5 லட்சம். இவற்றில் கீழமை நீதிமன்றங்களில் மட்டும் 11.83 லட்சம் வழக்குகளும், சென்னை உயர்நீதிமன்றத்தில் 3.65 லட்சம் வழக்குகளும், மதுரை அமர்வில் 1.07 லட்சமும் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

அணுகும் தூரத்தில் நீதி?

ஏழ்மை, கல்லாமை, அறியாமை அதிகம் உள்ள நாட்டில் நீதி என்பது ஒருவருக்கு எட்டும் தூரத்தில் இருக்க வேண்டும். நம் நாட்டில் வாழும் ஏழைகள் அதிகம் பிரயாணம் மேற்கொள்ளாதவர்கள். உச்சபட்சமாக ஏதேனும் யாத்திரைக்கு தங்கள் வாழ் நாளில் ஒரு முறை சென்று வந்தவர்களாக இருப்பார்கள். அந்த மக்களுக்கு தங்களின் தாலுக்காவிலோ, அருகிலிருக்கும் பெரிய நகரத்திலோ இருக்கும் நீதிமன்றங்கள் அவ்வளவு எளிதாக எட்டுவதில்லை. இந்த ஒரு காரணத்தினாலேயே பெரும்பாலான வழக்குகள் சட்டப் படிகளை எட்டுவதில்லை.

நடைமுறை சிக்கல்கள்

சமூக ஆர்வலர் ஒருவர் தொடர்ந்த ஒரு பொது நல வழக்கில் நண்பர் ஒருவர் தன்னை இணைத்துக்கொள்ள முற்பட்டார். அவரே வாதிடுவதாகவும் முடிவு செய்தார். அவருக்கான ஆவணங்களை அவருக்கு தெரிந்த ஒரு வழக்குரைஞர் தயார் செய்துகொடுத்தார். மே இறுதி நீதிமன்றத்தின் விடுமுறை காலம் என்பதால், `விடுமுறை அதிகாரியிடம்’ கையொப்பம் வாங்கி `பொது நல வழக்கு’ பகுதியில் சேர்க்க வேண்டியது அவரின் வேலையானது (அவரே அவர் வழக்கிற்கு வாதிடுவதால்). `விடுமுறை அதிகாரியிடம்’ கையொப்பம் வாங்கினார். அந்த வழக்கு ஆவணங்களை அங்கிருந்து “பொது நல வழக்கு’’ பிரிவதற்கு எடுத்து செல்பவர் அவரிடம் கையை நீட்டியதாய் சொன்னார். அங்கு வந்த எல்லா வழக்கறிஞரும் அவருக்கு 10, 20 தர வேண்டியது எழுதப்படாத விதி.

பொது நல வழக்கு பிரிவிற்கு ஆவணம் வந்தும் காத்திருக்கவைக்கப்பட்டார். ஒவ்வொரு மேஜையாக மாறி கடைசியில் 3வது மேஜையில் இருந்த அலுவலர் பல காரணங்கள் சொல்லி அவர் ஆவணத்தில் சில மாற்றங்கள் சொன்னாராம். அன்று நிராகரிக்கப்பட்ட ஆவணத்தை திருப்பி வாங்க, அந்த ஆவணங்கள் இன்னும் 3 மேஜை பயணித்தது. அன்று தாக்கல் செய்ய முடியாத வழக்கிற்கு அவர் செலவழித்தது 6 மணி நேரம். அடுத்த நாள் “நீதிமன்ற எழுத்தர்’ ஒருவரின் துணையோடு தாக்கல் செய்ய, அந்த ஆவணம் மொத்தம் 7 மேஜைகள் நகர்ந்து ஒரு வழியாக தாக்கல் ஆனது. ஆனால் வழக்கு அடுத்த தினம் வரவில்லை. படிப்பறிவில்லாத யாரேனும் வழக்கு தாக்கல் செய்வது முடியும் காரியமா?

மொழி

கீழமை நீதிமன்றங்களில் தாய் மொழியில் வாதாடும் உரிமை வந்தாலும், பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் வழக்குகள் நடத்தப்படுகின்றன. இதோடு நீதிமன்ற மொழி என்பது எவருக்கும் புரியாத வண்ணமே உள்ளன. தேவையற்ற பல நடைமுறைகள் இருப்பதும் ஒரு பெருங்காரணம்.

நீதிமன்றத்தில் வழக்குரைஞரும், நீதிபதியும் என்ன பேசுகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய காது இருந்தாலும் யாருக்கும் கேட்காத, புரியாத ஒன்று.

வேகம்

சில நாடுகளில் ஒரு வர்த்தக தகராறு என்பது சில வாரங்களில் நீதிமன்றத்தில் தீர்த்துவைக்கப்படும். உதாரணத்திற்கு, சிங்கபூரில் 35 நாட்களும், நார்வேயில் 90 நாட்களும் ஜப்பானில் 60 நாட்கள் மட்டுமே ஆகும். ஆனால் இந்திய நீதிமன்றத்தில்?

செலவு

எந்த ஒரு வழக்கானாலும் அதற்கென்ற பல பக்க ஆவணங்கள், புரியாத மொழி, நடைமுறை சிக்கல் ஆகியவை வழக்கிற்கான செலவை பல மடங்கு உயர்த்துகிறது.

பொய்சாட்சி

குற்றம் நடந்த ஒரு இடத்தை கற்பனை மட்டுமே செய்து சாட்சிகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் `பொய்சாட்சி’ சொல்ல பலர் தயங்குவதில்லை. பொய்சாட்சிக்கான ஒரு விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலை இன்னும் உண்டு.

நியாயம்

இவ்வளவு சிக்கல்களுக்கு பிறகு “நியாயம்’ தேடி ஒரு ஏழையோ, படிப்பறிவில்லாதவரோ வருவதே சிரமமான காரியம். அதையும் தாண்டி வரும்பொழுது இது மக்களுக்கான நீதிமன்றமாக அவர்களுக்கு காட்சியளிக்காதது பெருந்துயரம்.

எப்படி சரிசெய்யப் போகிறோம் இதனை? இதற்கான வழிகள் ஏதேனும் உண்டா? நீதிமன்ற படிகள் நாம் ஏறாமல், நீதிமன்றம் நம்மை நோக்கி வரும் அதிசயம் உண்டா?

நிச்சயம் உண்டு! சீர்திருத்தங்கள் தொடரும்…

ஜெகதீஸ்வரன்

Categories: Article, June 2013, Whistle
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: