கல்வியை பாழ்படுத்தும் “ஆல் பாஸ்” திட்டம்

Thursday, July 11th, 2013 @ 10:56AM

school-childrenதமிழகத்தில் பல ஆண்டுகளாக non-detention எனப்படும் அனைவருக்கும் தேர்ச்சி திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. 2009 மத்திய அரசால் இயற்றப்பட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ள கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம், இந்த ஆல் பாஸ் திட்டத்தை நாடு முழுவதும் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கும் நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

இந்த Non-Detention திட்டத்தின் சாராம்சம் என்னவென்றால், ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் எல்லா மாணவர்களும் ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். “மாணவர்கள் அந்தக் கல்வியாண்டிற்கான பாடங்களையும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களையும் கற்று கொண்டார்களா? அடுத்த மேல் வகுப்பினை படிப்பதற்கு தகுதியடைந்து விட்டார்களா?” என்பன போன்ற அடிப்படைக் கேள்விகள் கூட இங்கே பதிலில்லாமல் நிற்கின்றன.

இந்தத் திட்டத்தை கொண்டு வந்ததற்காக அரசு சொல்லும் காரணம் தேர்வு பயத்தினால் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கின்றது. தேர்வு முடிவுகளால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்பதெல்லாம் தான். ஆனால் இது மாணவர்களை காரணம் காட்டி நமது கல்வித்துறையிலும், கல்வி முறைகளிலும் உள்ள பெரிய ஓட்டைகளை அடைக்க முயலும் சாக்கு போக்காகவே பார்க்க முடிகிறது.

ஏனெனில் “தேர்ச்சி” என்பதின் முழு பொறுப்பையும் மாணவர்கள் தலையில் மட்டும் சுமத்த முடியுமா? வருடத்திற்கு 15,000 கோடி ரூபாய் செலவழைத்தும் அடிப்படை தேவைகளான, சுகாதாரமான பள்ளிக் கட்டமைப்புகளையோ, போதுமான ஆசிரியர்களையோ, தேவையான கற்றல், கற்பித்தல் உபகாரங்களையோ கூட அரசால் இன்னும் எல்லா பள்ளிகளுக்கும் கொண்டு போய் சேர்க்க முடியவில்லை.

தரமான கற்பித்தலை உறுதி செய்ய தகுதியான ஆசிரியர்களை பணியமர்த்த முடியவில்லை.

ஆசிரியரும், பள்ளி நிர்வாகமும் தம் பணியை சரிவர செய்கின்றனவா என உறுதி செய்யவேண்டிய கல்வித் துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

மேற்கண்ட எதையுமே திறம்பட செயல்படுத்த முடியாத அரசின் கை கழுவும் தந்திரமாகத்தான் இந்த அனைவரும் தேர்ச்சி திட்டத்தை பார்க்க வேண்டியதாக இருக்கின்றது.

ஒவ்வொரு வகுப்பிலும் மதிப்பீடுகள் இன்றி தேர்ச்சி பெறும் மாணவர் பொதுத் தேர்வில் தோல்வியுறும்போது இழந்த கல்வித் திறனை பெற எத்தனை ஆண்டுகளாகும். தேர்ச்சி உறுதி என தெரிந்த பிறகு மாணவர்களுக்கு கற்றலின் மீதும் முன்னேற்றத்தின் மீதும் எவ்வாறு ஆர்வம் ஏற்படும்.

எந்த வகையில் பார்த்தாலும் இந்த அனைவரும் தேர்ச்சி திட்டம் வரவேற்கதல்ல. மாநில அரசும், மத்திய அரசும் இதனை உடனே திரும்பப் பெற வேண்டும்.

தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள முப்பருவ தேர்வு முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை போன்றவை மாணவர்களின் கல்வித்த் திறனை மதிப்பிடுவதில் நல்ல முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளன.

இவற்றின் துணை கொண்டு மாணவர்களின் திறனை தொடக்கத்திலேயே கண்டறிந்து குறைபாடுகள் இருந்தால் உடனே சரிசெய்யும் வாய்ப்பையும் நமக்குக் கொடுத்துள்ளது. இதன் மூலமாகவும் வேறு பல புதிய உத்திகள் மூலமாகவும் மாணவர்களை துல்லியமாக மதிப்பிட்டு தேவையான முன்னேற்ற நடவடிக்கைகளை அரசு எடுப்பதோடு, அனைவரும் தேர்ச்சி என்ற “ஆல் பாஸ்” திட்டத்தை மூட்டை கட்டி பரண் மேல் ஏற்றுவதுதான் உடனடி தேவை.

Categories: Article, June 2013, Whistle
Tags:

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: