ஒரே தீர்வு – அணுகும் தூரத்தில் அரசாங்கம்!!

Thursday, November 7th, 2013 @ 11:59AM

தெலுங்கானா உருவாக்கம் முடிவாகிவிட்டது. மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவா இல்லை மக்கள் ஆதரவை இழந்து வரும் ஒரு கட்சி தன்னை காப்பாற்றிக் கொள்ள இந்த முடிவு ஏதுவாக அமையலாம் என தில்லியில் அமர்ந்து எடுக்கப்பட்ட முடிவா இது என மக்களுக்கு நன்றாக தெரியும்.

சுதந்திரம் பெற்ற ஆண்டுகளிலிருந்தே எந்த மாநிலத்தை எப்படி அமைப்பது என சிறிது சிறிதாக பாடம் கற்றுதான் நம் தேசம் உருவானது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது சரியான முடிவா, அது இன்று இந்திய ஜனநாயகத்தை தழைதோங்க செய்ததா இல்லையா என்பது நம்மை எப்பொழுதும் தொடரும் கேள்வி.

தெலுங்கானா செய்தி வந்த மறு நொடியே போடோலாண்டு, கோர்காலேண்ட் கோரிக்கைகள், உத்தரபிரதேசத்தை நான்காக பிரிக்கும் கோரிக்கை, விதர்பா, ஹரித் பிரதேசம், சௌராஷ்டிரா, கட்ச், லடாக் மற்றும் தமிழகம் உட்பட இன்னும் அதிகம் வெளிவராத இல்லை தூங்கும் பிரிவு கோரிக்கைகள். இதைத் தவிர எல்லையோர ஆந்திர மக்கள் தங்களை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற தனிக் கோரிக்கை.

அதே சமயம் இன்னொரு மிக முக்கிய பார்வை – கடந்த காலங்களில் சிறிதாக பிரிக்கப்பட்ட மாநிலங்களின் இன்றைய நிலை என்ன? உத்தரகாண்டில் நாம் என்ன சாதித்தோம் என்பது.
இவையாவும் சொல்லும் செய்தி என்ன? பல ஆண்டுகளாக இருந்த தெலுங்கானா கோரிக்கையின் அடிநாதம் என்ன? “எனக்கான சேவைகள், தேவைகள் எனக்கு கிடைப்பதில்லை. எனக்கான அரசாங்கள் இங்கு செயல்படவில்லை. நாங்கள் பின் தங்கிய நிலையில் உள்ளோம். நாங்கள் சிறிய பகுதிக்குள் அடைபடும்பொழுது எங்களுக்கான தேவைகள் நிறைவேறும் என நம்புகிறோம்”.

சீனாவிலும் இந்தியா அளவிற்கு ஊழல் இருக்கிறது. ஆனால் அங்கு குப்பைகள் இல்லை; வீதிகளில் கழிவு நீர் வழிந்தோடுவதில்லை. இயற்கை வளங்கள் இந்த அளவிற்கு அழிக்கப்படுவதில்லை. காரணம் – மூன்றாவது அரசாங்கமான ‘உள்ளூர் அரசாங்கம்’ மிக சிறப்பாக செயல்படுகிறது.

நம்முடைய தேவையும் இதுதான். அணுகும் தூரத்தில் அரசாங்கம் – சிறப்பான மூன்றாவது அரசாங்கம். அதை தாண்டி அதிகாரம் முழுவதும் பரவலாக்கப்பட்ட, முழுக்க சாத்தியமான இப்பொழுது மாநிலத்தில் இருப்பது போன்ற ‘மாவட்ட அரசாங்கங்கள்’. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாநில முதல்வரை போன்ற மாவட்ட பிரதிநிதி, இதே அதிகாரத்துடன் மாவட்ட ஆட்சியர்.

அதை விடுத்து அதிகாரத்தை பரவலாக்க செய்யாமல் அனைத்தையும் ஒரே இடத்தில் குவித்து வைத்திருக்கும் மத்திய, மாநில அரசுகள் இருக்கும் வரை இது போன்ற கோரிக்கைகள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கும்.

Categories: Article, August 2013, Whistle, தலையங்கம்
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: