ஆட்டோ கட்டணம் – முதல் வெற்றி, அடுத்தது என்ன?

Monday, November 11th, 2013 @ 9:36AM

முதலில் இந்த வெற்றிக்கு காரணமானவர்களை பட்டியல் இட வேண்டியது முதல் கடமை. ஆட்டோ கட்டண முறைபடுத்துதலில் தொடர்ந்து உழைத்தவர்கள் நாம் என்ற அடிப்படையிலும் இது அவசியமாகிறது.

2007ஆம் ஆண்டு இதற்கு முன்னர் ஆட்டோ கட்டண நிர்ணயம் செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. அந்த கட்டணமும் ஒரு வழக்கின் தீர்ப்பு மூலமே நிர்ணயம் செய்யப்பட்டது. ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என உழைத்து, ஆவணப்படுத்தியவர்கள் `சிட்டி கனெக்ட்’ என்னும் அமைப்பினர். ஆட்டோ ஓட்டுனர் ஒருவருக்கும், ஒரு பெண்மணிக்கும் நடந்த சண்டையை பார்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 2010ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தவர் திரு. ராமமூர்த்தி. அந்த வழக்கு தொடர்ந்து தாமதமானதால் 2012ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த இதே வழக்கிற்கான இடைக்காலத் தீர்ப்புதான் தற்பொழுது வந்துள்ளது.

அட்டோ ஓட்டுனர்கள், பொதுமக்கள் இரு தரப்பும் நன்மை பெற வேண்டும் என இருவரிடத்திலும் ஆய்வு செய்து, பல நிறுவனங்கள், பல தொகுதிகள் என கையெழுத்து வேட்டை, தொடர் பிரச்சாரம் செய்தது லோக் சத்தா கட்சி. அரசாங்கத்திடம் மனு கொடுத்து அதற்கு தக்க பதிலையும் பெற்றது. இதற்கான இணைய மனுவை துவக்கியவர் திரு. பிரகலாதன். இந்த பிரச்சினையை அரசின் கவத்திற்கு கொண்டு செய்ய முயற்சித்ததில் முக்கிய பங்கு “டைம்ஸ் ஆஃப் இந்தியா’, “சத்தியம் தொலைக்காட்சி,’’ `தினத்தந்தி’ ஆகிய ஊடகங்களை சேரும். ஆட்டோ சங்கங்கள் சில குரல் கொடுத்தாலும் அவர்களின் பங்கு கணிசமானதே. “நம்ம ஆட்டோ’ வின் நெருக்கடி எல்லோரையும் சிந்திக்க வைத்தது. ஊர் கூடி தேர் இழுத்தால் எந்த தேரும் நகரும் என்பதற்கு இதைவிட சிறப்பான உதாரணம் இருக்க முடியாது. மற்ற ஊர்களை விட இது அதிக கட்டணம் என்பதும், இதனை ஆட்டோ தொழிற் சங்கங்கள் வரவேற்றுள்ளதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

அடுத்தது – ?

மேற்சொன்னவர்களின் உழைப்பில் 1% கூட உழைக்காது, உச்சநீதிமன்றத்திடம் குட்டும், 10,000 ரூபாய் அபராதமும் பெற்றது தமிழக அரசு. தமிழகத்தை ஆண்ட இரு கட்சிகளும் ஓட்டு வங்கி அரசியலுக்காக இந்த பிரச்சனையை இது வரை தீர்க்காதது அவர்களின் அரசியல் மனோதிடத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஆனால் இந்த வெற்றி நிலைக்க வேண்டுமானால், அது தமிழக அரசின் கைகளில் மட்டுமே உள்ளது. ஆட்டோ ஓட்டுனர்கள் இதுவரை மீட்டர் போடாததற்கு முக்கிய காரணமாக அவர்கள் கூறுவது – மாதா மாதம் உயரும் பெட்ரோல் விலை. ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட பிறகு இதுவரை 2 முறை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. தற்பொழுது வழங்கப்பட்டிருக்கும் `ரேட் கார்டு’ பெட்ரோல் விலைக்கேற்ப வரையறுக்கப்பட்டிருந்தால் இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி கிடைத்திருக்கும். களத்தில் இருந்து வரும் செய்திகளும் இதை வலியுறுத்துவதாகவே உள்ளது.

இந்த ஆட்டோ இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம். இன்னும் நிறைய எல்.பி.ஜி வாயு மையங்கள் உருவாக்குதல், வட்ட போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழித்தல், எந்த ஆட்டோ எந்த ஆட்டோ நிறுத்தத்திலும் நின்று பயணிகளை ஏற்றும் வண்ணம் தற்பொழுது இருக்கும் ஏகாத்திபத்தியத்தை ஒழித்தல் அவற்றுள் சில.

அதே சமயம், மீட்டர் போட மறுப்பவர்களை குறித்து மக்கள் கொடுக்கும் புகாரின் மீது அரசு தட்டிக்கேட்காமல் போகும்பட்சத்திலும், தொடர் கண்காணிப்பு இல்லாத பட்சத்திலும் எல்லோரின் உழைப்பும் மீண்டெழும் வாய்ப்பும், தமிழக அரசு மற்றோரு முறை குட்டு வாங்கும் நிலையும் வரும். அதை தவிர்ப்பது தமிழக அரசின் கைகளில் மட்டுமே.

Categories: Article, September 2013, Whistle, தலையங்கம்
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: