சோனியாவின் கனவு உணவு பாதுகாப்பா ? ஆட்சி பாதுகாப்பா? – உணவு பாதுகாப்புத் திட்டம்

Thursday, November 7th, 2013 @ 2:50PM

2013 பாராளுமன்ற குளிர் காலக் கூட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டு நீண்ட விவாதத்திற்குப் பின் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் கழித்து இப்படி ஒரு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய சூழ்நிலை ஏன் ஏற்பட்டது? இச்சட்டத்தினால் இந்திய மக்களுக்கு உண்மையிலேயே உணவு பாதுகாப்பு கிடைத்துவிடுமா? அல்லது இந்த சட்டத்தை இந்த பாராளுமன்ற கடைசி குளிர் கால கூட்டத்தொடரில் அவசரமாக கொண்டுவந்து நிறைவேற்றிய காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி பாதுகாப்பு கிடைக்குமா?

SoniaFoodBill_PTI

சட்டத்தின் சாரம்சம்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் (சோனியா காந்தியின் ) கனவுத்திட்டமாக இது வர்ணிக்கப்படுகிறது.இத்திட்டத்தின்படி வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புறத்தில் உள்ள 75 சதவீதத்தினருக்கும் நகர்ப்புறங்களில் உள்ள 50 சதவீதத்தினருக்கும் குறைந்தபட்சமாக நபர் ஒருவருக்கு மாதம் ஒன்றிற்கு சலுகை விலையில் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் தானியங்கள் கிடைக்க உத்திரவாதம் அளிக்கிறது.அரிசி கிலோ 3 ரூபாய் விலையிலும்,கோதுமை கிலோ 2 ரூபாய் விலையிலும் இதர தானியங்கள் கிலோ ஒரு ரூபாய் விலையிலும் நியாய விலை கடைகள் மூலம் விநியோகம் செய்ய வழிவகை செய்கிறது.மேலும் கருவுற்ற பெண்களுக்கு அவர்கள் குழந்தை பெற்று 6 மாத காலம் வரை அங்கன்வாடியில் இலவசமாக ஊட்டச் சத்து உணவு உட்கொள்ளலாம் . 6 மாதம் முதல் 6 வயது வரை குழந்தைகளுக்கும் அதே போன்று ஊட்டச்சத்து உணவு அங்கன்வாடி மூலம் வழங்கப்படும்.மேற்படி திட்டம் தகுந்த நிர்வாகிகளைக் கொண்டு வெளிப்படையாக நடைமுறை படுத்தப்படும் எனவும் உறுதி செய்கிறது.

சட்டம் கொண்டுவரக் காரணம்

2009 இல் மக்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றுகிறோம் என்று காங்கிரெஸ் அரசு மார் தட்டிக் கொள்கிறது. ஆனால் உண்மையில் 2006 இல் சர்வ தேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின்படி உலகில் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 88 நாடுகளில் இந்தியா 66 வது இடத்தில் உள்ளது எனவும் , முறையான சத்துணவு இன்றி வாழும் குழந்தைகளில் 27 சதவீதம் இந்தியக் குழந்தைகள் என்றும், போதிய சத்துணவு இன்றி மாதத்திற்கு 75 000 குழந்தைகள் வரை இறக்கின்றன என்றும் புள்ளி விவரம் வெளியானதைத் தொடர்ந்து ஐ நா சபை இந்தியாவை உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக இந்த குறைபாட்டை போக்க அறிவுறித்தியது . அதன் விளைவுதான் இந்த சட்டம் வரக்காரணம் என்பதுதான் உண்மை.

தமிழகத்திற்கு என்ன நன்மை?

மேற்படி சட்டத்தால் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுவரும் அரிசியின் அளவு குறைக்கப்படமாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தற்போது தமிழக அரசு அரிசி கொள்முதலுக்காக செலவிடும் தொகை ரூபாய் 183.84 கோடிக்குப் பதில் ரூபாய் 143.56 கோடி மட்டும் செலவு செய்தால் போதும்.

அந்தவகையில் தமிழ் நாட்டைப் பொருத்தவரை ரூபாய் 40.28 கோடி லாபம் தான் .

ஆனால் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் உபரி அரிசிக்கு விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் எனவும் , பயனாளிகளை கண்டரிய மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கால அவகாசம் மூன்று மாதங்கள் போதாது எனவும், அரிசி மற்றும் தானியங்கள் மத்திய தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்போது அதற்கான விலை பணமாக பயனாளிகளுக்கு வழங்கப்படும் போது மாநிலங்களின் ஆலோசனைகள் கேட்கப்பட வேண்டும் எனவும் தமிழக முதல்வர் வைத்த கோரிக்கைகள் ஏற்க்கப்படாதது முதல்வருக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.எனவேதான் அதிமுக அரசு இச்சட்டத்திற்கு எதிராக ஓட்டளித்தது.

யாருக்கு லாபம்?

இது ஒரு பாதுகாப்பற்ற பிரயோஜனமில்லாத ஊழலுக்கு வழிவகுக்கும் ஓட்டைகள் நிறைந்த திட்டம் என நமது கட்சியின் தேசியத்தலைவர் ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்கள் கூறியுள்ளார்கள்.தமிழ்நாடு ஆந்திரா போன்ற மாநிலங்களில் தற்போது வருமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் விலையில்லா மற்றும் மானிய விலை அரிசி 40 சதவீதத்திற்கு மேல் கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது.இதனால் கள்ளச்சந்தை வியாபாரிகளே பெரும் லாபம் அடைந்து வருகிறார்கள்.தற்போதைய திட்டம் கள்ளச்சந்தையை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாகுள்ளது. இந்திய தாணிய கூடத்தில் இருப்பில் இருக்கும் சுமார் 80 மில்லியன் டன் அரிசியில் பெரும் பகுதி போதிய பராமறிப்பின்றி வீணாகிறது.அரசு கூற்றின்படி 67 சதவீத மக்கள் உணவு கிடைக்காமல் வாடவில்லை.கிடைக்கும் உணவை வாங்க வசதியின்றிதான் வாழ்கிறார்கள் அவர்களுக்கும் வாங்கும் சக்தியை ஏற்படுத்த அரசு முன்வரவேண்டுமே அன்றி அவர்களை தொடர்ந்து அதே நிலையில் இருக்க செய்து மாநியங்களையும் இலவசங்களையும் வழங்கி அவர்களின் ஓட்டுக்களை பெற்று விடுவதிலேயே அரசு குறியாக உள்ளது. எனவே இது சோனியாவின் வோட்டு பாதுகாபுத்திட்டமே அல்லாமல் வேறு எவருக்கும் லாபகரமான திட்டம் இல்லை.

என்ன செய்திருக்க வேண்டும்

இந்தியாவில் சுமார் 5 சதவீத மக்கள் உணவின்றி பட்டினி கிடப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது.தேவைக்கு அதிகம் உணவு தானியங்கள் இருப்பில் இருந்தும் அவை சீராக விநியோகம் செயப்படாததே இதற்க்கு காரணம்.தானியக்கூடத்தில் இருப்பில் இருக்கும் சுமார் 20 சதவீத தானியங்கள் போதிய பராமரிப்பின்றி மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் எலிகளுக்கு இரையாகியும் வீணாகிறது.இதை தவிர்த்து பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகளில் தானியங்களை பராமரித்து, உபரி தானியங்களை உடனுக்குடன் ஏற்றுமதி செய்து, உற்பத்தி திறனை அதிகம் செய்து, இறக்குமதி செலவை குறைத்தால் நாட்டின் வறுமை நிலையம் ஒழியும், பொருளாதார சரிவும் சீர்படும்.நாடும் முன்னேற்றப்பாதையில் செல்லும். மேலும் மக்களுக்கு போதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி , மக்களின் வாங்கும் திறனை மேம்படுத்தினால் மட்டுமே மக்களுக்கு பாதுகாப்பு ,மற்றவை எல்லாம் மக்களை ஏமாற்றும் வீராப்புத் திட்டம்தான் என்பதில் ஐயமில்லை.

தினகரன் போஸ்

Categories: Article, September 2013, Whistle
Tags:

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: