புதியதோர் அரசியல் அத்தியாயத்தின் துவக்கம்

Monday, December 9th, 2013 @ 9:38PM

தில்லி தேர்தலில் புதிய அரசியலின் அத்தியாயத்தை வெற்றிகரமாக துவக்கிய ஆம் ஆத்மி கட்சியை வாழ்த்துவதில் லோக் சத்தா கட்சி பெருமை கொள்கிறது.

நல்ல அரசியலுக்கான இந்த ஆரம்பம் லோக் சத்தாவால் 2009 ஆந்திர சட்டசபை தேர்தலில் துவக்கி வைக்கப்பட்டது. அதன் இரண்டாவது படியை ஆம் ஆத்மி கட்சி தில்லி தேர்தலில் வைத்துள்ளது. அதன் பலன் வாக்கெடுப்பு துவங்கும் முன்னரே தெரிந்தது. பழமை அரசியல் செய்யும் கட்சியான பா.ஜ.க-வை வழக்கத்திற்கு மாறாக ஹர்ஷ் வர்தனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த உந்தியது.

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் அரசியல் எப்படி இருக்க வேண்டும் என லோக் சத்தா எதையெல்லாம் முன்னிறுத்தி செயல்படுத்தி வருகிறதோ அதையெல்லாம் ஆம் ஆத்மி கட்சி தில்லி தேர்தலில் செயல்படுத்தியுள்ளது. அவர்களின் தேர்தல் பிரச்சாரம், வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் நிதி திரட்டுதல் ஆகியவை லோக் சத்தா பரிந்துரைத்த தேர்தல் சீர்திருத்தங்களை பின்பற்றி செல்வதை காண முடிகிறது. இது லோக் சத்தா போராடிக் கொண்டு வந்த வேட்பாளர் சொத்து மதிப்பு அறிவித்தல், அரசியல் கட்சி நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கு, வாக்காளர் பட்டியல் முறைப்படுத்தல் ஆகியவற்றால் சாத்தியமானது.

ஆம் ஆத்மியின் இந்த வெற்றி மக்களின் வெற்றி. ஊழலை ஒழிப்பதற்கு பெருமளவில் வந்து வாக்களித்த தில்லி மக்களுக்கு லோக் சத்தா கட்சி தனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தேர்தலில் போட்டியிடுவது மட்டுமன்றி தில்லியில் நல்லாட்சியும் அமைவதற்கு இயக்க சக்தியாய் இருக்க ஆம் ஆத்மிக்கு லோக் சத்தா தன் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது. ஆந்திராவில் ஒரு சட்டமன்ற உறுப்பினரை மட்டுமே கொண்டு லோக் சத்தா பல பொதுக் கொள்கை மாற்றங்கள், அரசியல் சாசன மாற்றங்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் ஆகிவற்றை சாதித்துள்ளது. இதற்கு லோக் சத்தாவின் அரசியல் தெளிவு, பிரச்சனைகளை முதிர்ச்சியுடன் எதிர்கொள்ளும் விதம், அனுபவ அறிவு, உடன்படிக்கை ஏற்படுத்தும் திறமை இவற்றுடன் மற்ற அனைவரையும் பொத்தாம் பொதுவாக தீயவர் என முத்திரை குத்த தீர்க்கமாக மறுத்து வருவதுமே காரணங்கள் ஆகும்.

நாம் ஒருபோதும் குறுகிய கண்ணோட்டத்தோடு, கவர்ச்சிகரமான திட்டங்கள் கொண்டு, நீண்ட நாளைய பொதுமக்களின் நலனுக்கெதிராக பிரிவினைவாத, சந்தர்ப்பவாத அரசியலை எப்போதும் செய்யக் கூடாது.

உண்மையான ஜனநாயகத்தை நாட்டில் கொண்டுவருவது நீண்ட நெடியதொரு பணியாகும். இதற்கு பலரின் பங்கு மிக அவசியம். ஆம் ஆத்மி போன்றதொரு புதிய கட்சி இதில் பங்கு கொள்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மேலும் பல கட்சிகள் இந்த பாதையில் வரவேண்டுமென்று விரும்புகிறோம்.

நல்ல அரசியல் இந்திய நகர்ப்புறங்களில் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதை நாம் கண்கூடாக ஹைதராபாத் மற்றும் தில்லி தேர்தல்கள் மூலம் பார்க்கிறோம்.

இதனால் மெதுவாக ஆனால் சீராக அரசியலின் தரம் உயரும். பிற மரபு சார் கட்சிகளும் பரம்பரை ஆட்சி முறையை விடுத்து இந்தியாவின் பன்முகத்தம்மையை பிரதிபலிக்கும் விதமாக இந்தியர்களின் ஆற்றலை வெளிக்கொணரும் விதமாக மாறும். மேலும் இந்த மாற்றங்கள் நகர்ப்புறங்களில் இருந்து கிராமப்புறங்களுக்கும் அடுத்த பத்தாண்டுகளில் பரவி இந்தியாவையே முன்னேற்றும்.

அந்த நாளைத்தான் நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம்.

Categories: Elections, Press Releases
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: