நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் – 2

Wednesday, December 4th, 2013 @ 9:51AM

சென்ற இதழில் நுகர்வோர் என்பவர் யார் தரமற்ற பொருள் என்றால் என்ன? சேவை குறைபாடு என்றால் என்ன? சேவை குறைப்பாட்டிற்கு புகார் எங்கே செய்ய வேண்டும்? வாதாட வழக்கறிஞர் தேவையா? போன்ற விபரங்களை பார்த்தோம். இந்த இதழில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை பற்றி மேலும் பார்போம்.

ஏன் புகார் செய்யவேண்டும்

இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு நுகர்வோர் தங்களுக்கு இழைக்கப்பட்ட எல்லா அநீதிகளையும் பொருத்துக் கொள்ள வேண்டிய அவல நிலையில் இருந்தோம். 1986-ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு நாம் வாங்கிய பொருளில் குறையோ, அல்லது சேவையில் குறைபாடோ இருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம். இவ்வாறு நுகர்வோர் நீதிமன்றங்களில் புகார் செய்வதினால் நாமும் இழந்த நஷ்டத்தை அபாராதத்துடன் பெற முடியும். இது போல் மற்ற நுகர்வோருக்கு நஷ்டம் நேரிடுவதை தவிர்க்கலாம். இதன் மூலம் அனைவருக்கும் தரமான பொருள் – சேவை அனைவருக்கும் கிடைக்க வழி ஏற்படும்.

consumer-protection

யார் புகார் செய்யலாம்:

 

ஒரு பொருளை அல்லது சேவையைத் தன்னுடைய உபயோகத்திற்காக அல்லது பயனுக்காக பணம் கொடுத்து வாங்குபவர்/பெறுபவர் மட்டுமே நுகர்வோர் ஆவர். இவர்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்யலாம்.

எப்போது புகார் செய்யலாம்:

  • ஒரு வியாபாரி கடைப்பிடித்த, முறைகெட்ட வர்த்தகச் செயலால் உங்களுக்கு கஷ்டமோ, நஷ்டமோ ஏற்பட்டிருந்தால்,
  • நீங்கள் பெற்றுக் கொண்ட சேவையில் எந்த விதத்திலாவது குறைபாடு இருந்தால்,
  • நடைமுறையில் உள்ள சட்டத்தின் விதிகளின்படி தீர்மானிக்கப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட விலையைவிட அதிகமான விலை உங்களிடமிருந்து வசூலிக்கப்பட்டிருந்தால்,
  • உபயோகப்படுத்தும் பொதுமக்களின் பாதுகாப்புக்கோ அல்லது உயிருக்கோ ஆபத்து விலைவிக்கக்கூடிய பொருளை நடைமுறையில் இருக்கும் ஒரு சட்டத்தின் விதிகளை மீறி, பொதுமக்களுக்கு விற்கப்படுகிறதென்றால்,

மேற்கண்ட காரணங்களுக்காக நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி புகாரை பதிவு செய்யலாம்.

புகார் செய்வது எப்படி:-

உங்கள் புகாருக்கு உரிய இழப்பீடு – நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் சரியான முறைகளைப் பின்பற்றிப் புகார் செய்வது நல்லது.

  • புகார் செய்யவேண்டிய அளவுக்கு நியாமான குறையோ அல்லது இழப்போ உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் முதலில் எதிர் தரப்பிற்கு (நீங்கள் யாருக்கு எதிராகப் புகார் செய்ய இருக்கிறீர்களோ அவர் அவர் எதிர்த்தரப்பு என்று குறிப்பிடப்படுவர்) எழுத்து மூலம் ஒரு கடிதம் எழுதி, நீங்கள் அவரிடமிருந்து வாங்கிய பொருளில் அல்லது பெற்ற சேவையில் உங்கள் குறையை விவராமகத் தெரிவித்து அதற்கு நீங்கள் விரும்பும் பரிகாரம் என்ன என்பதையும் தெரிவிக்கவேண்டும். அக்கடிதம் அவரை அடைந்ததற்கான  அத்தாட்சி தேவை (பதிவுத்தபாலில் அனுப்பவேண்டும் அல்லது நகலில் அவர் கையெழுத்து பெறவேண்டும்)
  • உங்கள் புகார் சம்மந்தப்பட்ட எல்லாத் தகவல்களையும் மற்றும் ஆதாரங்களையும் ஒன்றாய் திரட்டுங்கள். ஆதாரங்கள் என்று நீங்கள் பொருளை வாங்கியதை உறுதி செய்யும் பில் அல்லது ரசீது பொருளின் தன்மைப் பற்றி விளக்கி வெளியிடப்பட்ட விளம்பரத்தாள் அல்லது புத்தகம். முன் மதிப்பீடு, கொட்டேஷன் போன்றவையாகும்.
  • முடிந்தவரை விரைவாக புகார் செய்யுங்கள். உங்கள் கடிதத்தில்  எதிர்தரப்பு செயல்படுவதற்கு நியாயமான கால அவகாசம் (சுமார் 15 நாட்கள்) கொடுங்கள்
  • எல்லா ஒரிஜினல் ஆவணங்களையும் (Originial Bills, Receipts, Brochures etc.,)  நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் அவற்றை நீதிமன்றம் சொன்னாலொழிய வேறு எவரிடமும் கொடுக்காதீர்கள். தேவைப்படும் போதெல்லாம் ஜெராக்ஸ்(Xerox) எடுத்தே பயன்படுத்துங்கள்.

மேலும் இச்சட்டப்படி புகார் செய்வதற்கான, கால வரையரை, நிவாரணங்கள் புகாரை பதிவு செய்யும் முறைகளை அடுத்த இதழில் பார்ப்போம்.

– சிவ.இளங்கோ

Categories: Article, October 2013, Whistle
Tags:

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: