டெல்லி தேர்தலில் புதிய வெளிச்சம் ஆம் ஆத்மி கட்சி

Thursday, December 26th, 2013 @ 11:22PM

ஆம் ஆத்மி கட்சியின் வரவால் தில்லி தேர்தல் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் வெறும் ஒரு வருடத்திற்கு முன் உருவாக்கப்பட்ட ஒரு கட்சி, நேர்மையான முறையில் மக்களிடமிருந்து நன்கொடை பெற்று, ஓட்டு வங்கி அரசியலை பின்பற்றாமல், ஊழல் ஒழிப்பு, அதிகாரப் பரவலாக்கல், நேர்மையான ஆட்சி ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி தேர்தலைச் சந்தித்து இவ்வளவு வாக்காளர்களின் ஆதரவை பெற்றி ருப்பது தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அரசியல் தரம் வெகு வேகமாக சரிவடைந்து கொண் டிருக்கும் இச்சமயத்தில் நேர்மையான அரசியல் இயக் கங்களுக்கு இது புத்துணர்வை பாய்ச்சியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் இந்த வளர்ச்சியில் பின்னணியில் உள்ள சில முக்கிய காரணிகளை கூர்மையாக அவதானிப்பது அரசியல் ஆய்வாளர்களுக்கு இன்றியமையாததாகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சியின் தொடக்கத்தில் வெளியான ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் நடுத்தட்டு மக்களின் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அண்ணா ஹசாரே தலைமையில் ஊழலை ஒழிப்பதற்காக தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஜன் லோக்பால் அமைப்பை உருவாக்கக் கோரி நடை பெற்ற போராட்டத்திற்கு மிகப்பெரிய ஆதரவு மக்க ளிடையே கிடைத்தது. ஆனால் மத்திய அரசு முற்றிலும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஜன் லோக்பால் அமைப்பை உருவாக்கும் சட்டத்தை இயற்ற முழு மன துடன் உழைக்கவில்லை. மத்திய அரசு கொண்டு வந்த நீர்த்துப் போன லோக்பால் மசோதாவும் மேலவையில் தோற்கடிக்கப்பட்டது. போராட்டத்திற்கான பயன் கிட்டாத தன் பின்னணியில் மக்களிடையேயான ஆர்வம் குறையத் தொடங்கியது. போராட்டக் குழுவில் முக்கிய பங்காற்றிய அரவிந்த் கெஜ்ரிவால், அரசியலில் இறங்கி தேர்தலில் போட்டியிடுவதன் மூலமே ஊழல் ஒழிப்பு இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முடியும் என்ற கருத்துடன் புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவத்தார். ஆனால் அன்னா ஹசாரே, தமக்கு அரசியலில் நுழைவதில் விருப்பம் இல்லையென்றும், கெஜ்ரிவாலின் பாதை வேறு, தமது பாதை வேறு என்றும் அறிவித்தார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி உட்பட பலர் அண்ணா ஹசாரேயின் பின் நின்றனர். மனிஷ் சிசோதியா, பிரஷாந்த் பூஷன், யோகேந்திரா யாதவ் போன்றவர்கள் அரவிந்த் கெஜ்ரி வாலுடன் சேர்ந்து 2012 அக்டோபர் மாதம் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கினார்கள்.

புதிய கட்சிக்கு ஆம் ஆத்மி கட்சி (சாதாரண மனிதனின் கட்சி) என்று பெயரிட்டது. துடைப்பம் சின் னத்தை தேர்வு செய்தது. நான் சாதாரண மனிதன் என எழுதப்பட்ட வெள்ளை நிற காந்தி குல்லாவை எல்லா உறுப்பினர்களும் அணிந்து கொள்ளச் செய்தது என மிக நுணுக்கமான முறையில் கட்சியின் அடையாளத்தை கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் உறுதி செய்தனர்.

Delhi Results

சமூக வலைத்தளங்களை திறன்பட பயன்படுத்திய தன் மூலம் இணையத்தை பயன்படுத்தும் இந்தியர்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சி பரவலாக எடுத்துச் செல் லப்பட்டது. இது பல வகையில் ஆம் ஆத்மி கட்சியின் தொடர்ந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது. கட்சி அறிவிக்கப்பட்ட தொடக்கத்தில் ராபர்ட் வதேரா, நிதின் காட்கரி மற்றும் சல்மான் குர்ஷித் ஆகியோர் மீது ஆதாரப்பூர்வமான ஊழல் குற்றச்சாட்டுக்களை ஆம் ஆத்மி கட்சியினர் முன் வைத்த பொழுது ஊடகத்தில் மிக அதிகமான கவனம் பெற்றனர். அதனைத் தொடர்ந்து அம்பானி சகோதரர்கள் மீது கருப்புப் பண குற்றச்சாட்டுக்களை அவர்கள் வைத்தனர். இதனால் பலமிக்க அம்பானி சகோதரர்கள் கொடுத்த அழுத்தத் தினால் ஊடகத்துறையினர் ஆம் ஆத்மி கட்சிக்கு கவனம் தருவதை நிறுத்தினர். வேறொரு கட்சியாக இருந்திருந்தால் ஊடகங்களின் துணையின்றி மெல்ல மெல்ல வலுவிழந்திருக்கும். ஆனால் ஆம் ஆத்மி கட்சியினர் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்த தால், ஊடகங்களின் துணையின்றியும் பலரிடம் செல்ல முடிந்தது. இது அவர்களது உறுப்பினர்கள், செயல் வீரர் கள் மற்றும் ஆதரவாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த உதவியது. இவர்கள் அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றத் தொடங்கினார்கள். மின்சார கட்டண உயர்வு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களை எதிர்த்து அவர்கள் நடத்திய போராட்டங்கள் ஆம் ஆத்மி கட்சியை எல்லா மக்களிடமும் எடுத்துச் சென்றது.

இணையத்தையும் குறிப்பாக சமூக வலைத்தளங்களையும் சிறப்பாக பயன்படுத்தியதன் மூலம் தேர்தல் நிதியை நேர்மையாக மக்களிடமிருந்து வசூலித்தார்கள். தேர்தல் நிதிக்கான அவர்களின் இலக்கான 20 கோடி ரூபாயை தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே எட்டி விட்டனர். இலக்கை அடைந்தவுடன் இதற்கு மேல் நன் கொடை தேவையில்லை என்ற அறிவிப்பும், வெளிப்படை யாக எல்லா நன்கொடையாளர்களின் பட்டியலை வெளி யிட்டதும் ஆம் ஆத்மி கட்சியினரின் நேர்மை மற்றும் கொள்கை குறித்த பலரது நம்பிக்கையை அதிகப்படுத்தியது.

தொடக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியினரை பெரிய சவாலாக கருதாத காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அவர்களின் அபரிமித வளர்ச்சியை கண்டபின் நேரடி யாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஆம் ஆத்மி கட்சியை தாக்கத் தொடங்கினார்கள். ஆம் ஆத்மி கட்சி யினரின் நிதி ஆதாரத்தின் மீது உள்துறை அமைச்சகம் விசாரணை தொடங்கியது. அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் நிதியை தவறாக பயன்படுத்தினார் என அன்னா ஹசாரே குறை சொல்வதைப் போன்ற பழைய ஒளிப்படம் வெளியிடப்பட்டது. ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் கருப்புப் பணத்தை நன்கொடையாக பெறத் தயாராக இருப்பது போன்ற ஸ்டிங் (stவீஸீரீ) ஒளிப் படங்கள் வெளியிடப்பட்டன. ஆனால் இது போன்ற அழுக்கை வாரி வீசும் செயல்களை எல்லாம் ஆம் ஆத்மி கட்சியினர் தமது வெளிப்படையான செயல்பாட்டால் எதிர்கொண்டனர். நேர்மையான அரசியல் இயக்கங்கள் எப்படிப்பட்ட மூன்றாம் தர தாக்குதல்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதற்கும் அவற்றை எப்படி எதிர் கொள்வது என்பதற்கும் இவை ஒரு முன் மாதிரி.

ஆட்சிக்கு வந்தால் தமது செயல் திட்டம் என்ன என்பதை ஆழமாக ஆராய்ந்து எழுதப்பட்ட தேர்தல் அறிக்கையினை வெளியிட்டனர். தில்லியில் மாநிலத்திற் கான பொதுவான அறிக்கை மட்டுமின்றி ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தேர்தல் அறிக்கையென மொத்தம் 71 தேர்தல் அறிக்கைகளை அவர்கள் வெளியிட்டனர். தொகுதிக்கான தேர்தல் அறிக்கையில் உள்ளூர் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் முன்வைக்கப்பட்டன. பொது அறிக்கையில் வலுவான தில்லி ஜன் லோக்பால் அமைப்பு, மொஹல்லா (வார்டு) அளவிலான மக்கள் சபைக்கு அதிகார பரவலாக்கம், அரசு வழங்கும் பள்ளிக் கல்வி மற்றும் சுகாதாரத்தின் தரம் உயர்த்தப்படுதல், எல்லா வீடுகளுக்கும் குடிநீர், எல்லா வீடுகளுக்கும் கழிவு நீர் வடிகால்வாய் இணைப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு வசதி போன்ற மிக முக்கியமான பிரச்சனைகள் இடம் பெற்றிருந்தன. மின்சாரக் கட்டணத்தை 50% குறைப் போம் போன்ற அறிவிப்புகள் விவாதத்திற்கும், சவா லுக்கும் உரியது என்றாலும் ஆம் ஆத்மி கட்சியின் பெரும்பகுதி தேர்தல் அறிக்கை மக்கள் பிரச்சனைகள் சார்ந்து இருந்தது வரவேற்பைப் பெற்றது.

அரசியல் பின்புலமற்ற ஒரு குழு ஒரு வருடத்திற்குள் ஒரு கட்சியை தொடங்கி, கட்சியின் கட்டமைப்பை நிர் மானித்து, ஒரு மாநில தேர்தலை சந்தித்து இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது இந்திய வரலாறு இது வரை காணாதது. இது ஆம் ஆத்மி கட்சியைப் பற்றி சொல்வதை விட, நேர்மையான மாற்று அரசிய லுக்கு மக்கள் எவ்வளவு ஏங்கி போயிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. இந்த வெற்றியை ஒரு தேசிய இயக்கமாக எல்லா நேர்மையான அரசியல் சக்திகளும் ஒருங்கிணைந்து எடுத்துச் செல்ல வேண்டும்.

– ஜெயக்குமார்

Categories: Article, December 2013, Whistle
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: