100 நாள் வேலை வாய்ப்பு சொல்லும் பாடம்

Thursday, December 12th, 2013 @ 4:07PM

100 நாள் வேலைவாய்ப்பு குறித்த ‘சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் அது’. சட்டமன்றத்தில் இந்த திட்டம் குறித்து உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்ப வழக்கம்போல் அந்த துறைக்கான அமைச்சர் ‘ஆக்கப்பூர்வமான’ பதில் வழங்கியுள்ளார். மத்திய அரசாங்கம் சொல்வது பொய் என்றும், தமிழகத்தில்தான் இத்திட்டம் மிகச் சிறப்பாக செயல்பட்டு மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாக வழங்குவதாக சொன்னார்.

இது குறித்து மத்திய அமைச்சர் சில தினங்கள் முன்பு எழுதிய கடிதத்தில் கேட்ட கேள்விகளான, ‘நீடித்து உழைக்கும் தன்மையில்லாத சொத்துகளை தமிழகம் உருவாக்கியிருப்பது குறித்து சரியான பதிலோ, தமிழகத்தில் 24 மாவட்டங்களில் பயனாளர்களுக்கு வங்கி கணக்கு துவங்காமல் ஊதியத்தை ரொக்கமாகவே வழங்கி வருவது குறித்தோ, 100 நாள் வேலை வாய்ப்பில் ஒரு நாளுக்கான கூலி 148 என் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் 1645 கிராம ஊராட்சிகளில் சராசரி 70 ரூபாய்க்கு மேல் வழங்கப்படாதது குறித்தோ எந்த பதிலையும் அவர் சொல்லவில்லை’.

மத்திய மாநில ‘அரசியல்’ விடுத்து பார்த்தாலும், சில மாதங்களுக்கு முன் வந்த மத்திய தணிக்கை துறை அறிக்கை, தமிழகத்தில் துவக்கப்பட்ட வேலைகளில் 43% மட்டுமே முடிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறது. மேலும் பதிவு செய்யப்பட்ட கிராமப்புற இல்லங்களில், 24% இல்லங்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கிறது. பணியாளர் வருகைப் பட்டியலில் முறைகேடு, போலி வருகைப் பதிவேடுகள், சில இடங்களில் எந்த ஒரு பணியும் நடவாது கூலி வழங்கியது, 6 மாவட்டங்களில் தனித்தன்மை வாய்ந்த அடையாள எண் வழங்காதது, வேலையின் அளவை அளக்காது ஊதியம் வழங்கியது ஆகியவையும் இதில் அடங்கும்.

100 நாள் வேலை வாய்ப்பு என்பது திட்டம் அல்ல; அது சட்டமாக நிறைவேற்றப்பட்டுவிட்டது. அந்த சட்டத்தின்படி, பதிவு செய்த அனைவருக்கும் 15 நாட்களில் பணி வழங்கியாக வேண்டும். உண்மையை சொன்னால் பணி வழங்க வேண்டும் என்பதை காட்டிலும் அவர்களுக்கு கூலி வழங்கியாக வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பின் மிகப் பெரிய பிரச்சனை அல்லது ஓட்டு வங்கி அரசியல் இதில்தான் உள்ளது. எந்த ஒரு பணியாக இருந்தாலும், முதலில் பணி , அடுத்து திட்டம், அதற்கான செலவீனம், அதற்கான மனித வளம், அவர்களுக்கான ஊதியம் என இப்படி இருக்கும். ஆனால் 100 வேலை வாய்ப்பில் இது அப்படியே தலைகீழ்.

அடுத்து விவசாயத்தை இந்த திட்டம் பாதிப்பதாக பல குரல்கள் கேட்கிறது. வாத, விவாதங்களை விடுத்து இந்த திட்டத்தில் விவசாய வேலைகளையும் இணைத்து அரசு ஒரு பங்கு ஊதியமும், விவசாய முதலாளிகள் மற்றொரு பங்கு ஊதியமும் வழங்குவது இதற்கான மாற்றாக இருக்கும்.

அரசின் பல திட்டங்களில் இருப்பது போல் இதற்கும் கண்காணிப்பு சரியாக இல்லை என்பதே உண்மை. ஆள் பற்றாக்குறை என்பது இதற்கான பதிலாக உள்ளது. இதற்கான பதில் 1.அதிகார பரவலாக்கம் – உள்ளூர் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து அவர்கள் ஒரு குழு அமைத்து அவற்றை கண்காணிக்க வேண்டும். மேலும் கூலி க்கான வேலை என்றில்லாமல், வேலைக்கான கூலியாக இது மாற வேண்டும். 2. அரசாங்கம் ஊழல் புரிந்தால் தண்டிக்கப்பட லோக் ஆயுக்தா போன்ற கடுமையான சட்டங்கள் வேண்டும்.

இவையாவும் இந்த சட்டம் சரியாக செயல்பட நாம் முன்வைக்கும் சில யோசனைகள். எந்த ஒரு வேலைவாய்ப்பு திட்டமும் வறுமை ஒழிப்பதாய் அமைய வேண்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதின் நோக்கம் அதுவே. இந்த திட்டத்தால்  வறுமை ஒழிந்துள்ளதா என்பது குறித்த ஒரு ஆழமான சிந்தனை வேண்டும். கடந்த 15 ஆண்டுகளில் சீனா 20 கோடி வேலைவாய்ப்பு உருவாக்க, இந்தியா அதில் 1% மட்டுமே உருவாக்கியுள்ளது என்ற நிதர்சனத்தை நாம் மறத்தல் கூடாது.

Categories: Article, November 2013, Whistle, தலையங்கம்
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: