உறங்கிக் கொண்டிருக்கும் வழங்கல்துறை அலுவலகங்கள்!

Tuesday, December 31st, 2013 @ 4:47AM

ஒரு குடும்ப அட்டை அல்லது ரேஷன் அட்டை என்பது அன்று வழங்கப்பட்ட காரணத்திலிருந்து மாறி இன்று ஒரு குடிமகனின் அடிப்படை குடியிருப்பு சான்று என்றாகிவிட்டது. வங்கிக் கணக்கு முதல் விலை யில்லா பொருட்கள் வரை அனைத்துக்கும் இந்த குடும்ப அட்டையே ஆதாரம். முன்பெல்லாம் குடும்ப அட்டை இல்லா வீடுகள் என்று கூறும் பங்களா வீட்டுக் காரர்களுக்கும் தற்போது பொருளில்லா அட்டை என தனியரு நிறமாய் வெள்ளை அட்டை என வழங்கப்பட்டு வருகிறது. இப்படி ஒவ்வொரு தனி மனிதனின் அடிப்படை ஆதாரமான இந்த குடும்ப அட்டை வாங்குவதில் உள்ள குழப்பங்களும், அலைச் சல்களும் தான் தற்போதைய பெரும்பான்மை குடும் பங்களில் சந்திக்கும் பெரும் போராட்டம்.

நமது கட்சியின் கோவை மாவட்டக் கிளையின் செயல்பாடுகளாய் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விழிப்புணர்வு சுவரொட்டிகள் என்ற முறையில் நாங்கள் இந்த முறை கையிலெடுத்ததுதான் இந்த குடும்ப அட்டை பிரச்சனை. குடும்ப அட்டை பெறுவது மற்றும் அது சம்பந்தமான பிற சேவைகள் குறித்தான மக்கள் சாசனத்தின் கால வரையை மேற்கொள் காட்டி கால தாமதமாகினால் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்துமாறு அந்த சுவரொட்டியை வடிவமைத்திருந்தோம். ஆனால் நாங்கள் சற்றும் எதிர்பாராத விதமாக சுவரொட்டி ஒட்டிய சில நிமிடங்களில் ஆரம்பித்து ஒரு வாரத்திற்குள் சுமார் 500 நபர்கள் எங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களுக்கு அது போன்ற குறைபாடுகள் உள்ளதாகவும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை எவ்வாறு பயன் படுத்த வேண்டுமெனவும் ஆலோசனை பெற்றனர். ஒருவேளை கோவையில் சுமார் 10,000 பேர் வரை இந்த சுவரொட்டியை பார்த்திருக்கின்றனர் என வைத் தாலும், பார்க்கும் 20ல் ஒருவருக்கு குடும்ப அட்டை சம்பந்தமான ஏதோ ஒரு குறையிருக்கிறது என தெரி கிறது. அப்படியென்றால் கோவை நகரத்திலுள்ள 16 லட்சம் மக்களில் அதே அளவீடை கொண்டு ஒப் பிட்டால் 50,000 பேருக்கு தால் தாண்டுமே…? மொத்த கோவை மாவட்டம் முழுக்க எடுத்துக் கொண்டால்…?
‘இப்பவே கண்ணைக்கட்டுதே’ என்ற நகைச்சுவை வரிதான் ஞாபகம் வருகிறது.

Ration Card

இன்னொரு தகவலை புள்ளி விபரத்தில் எடுத்து கொண்டால் இன்னும் வேகமாய் கண்ணைக் கட்டும் போல உள்ளது. எங்களுக்கு வந்த அழைப்புகள் புதிய மற்றும் நகல் அட்டை வேண்டி விண்ணப்பித்து காத்திருப்போர் மட்டும் 100க்கும் மேற்பட்டோர். அப்படியென்றால் நூற்றுக்கு ஒருவர் என கணக்கிட்டுப் பார்த்தால் கோவை மாவட்டத்திலுள்ள 34 லட்சம் மக்களுள் கிட்டத்தட்ட 34,000 பேர், அல்ல… அல்ல… 34,000 குடும்பங்களின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதா? அதுவும் கோவையில் மட்டுமா? என்ற அதிர்ச்சியே மேலோங்குகிறது. இதில் பெரும்பாலானோர் நேரடியாக சென்று சம்பந்தப்பட்ட அலுவல கத்தில் தங்களின் காலதாமதமாகும் விண்ணப்பங்கள் குறித்து கேட்டதற்கு ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தேதிகளைக் கூறி அன்று வந்து வாங்கிச் செல்லுமாறு அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றனர். இதிலும் முக்கிய காரணமாய் சொல்லப்பட்ட வரை குடும்ப
அட்டையில் ஒட்டப்பட்டிருக்கும் சிறப்பு ஹோலோகிராம் அரசு முத்திரை கைவசம் இல்லையாம். ஆம் நம்புங்கள்…! இந்த ஒரு ஒட்டி (ஸ்டிக்கர்) இல்லை என்பதால்தான் 2011ம் ஆண்டு விண்ணப்பித்தவர்கள் முதல் இன்று வரை விண்ணப்பித்தவர்களில் அநேகம் பேருக்கு கிடைக்கவில்லையாம். இந்த ஒரு தகவல்தான் மிகுந்த கோபத்தை வரவழைத்தது.

இரண்டரை ஆண்டுகள் முதல் 6 மாதங்கள் வரை விண்ணப்பித்து கால தாமதம் ஆகிறது. வழங்கல் அலுவலகம் சென்றால் அலைக்கழிப்பு என நம்மிடம் தெரிவித்த மக்களுக்கு உடனடியாக தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின்படி கால தாமதத்திற்கு முறையான காரணம் கேட்டு மனு செய்ய உதவி செய்தோம். உண்மையில் இந்த கால தாமதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தான் எத்தனை? கடவுச்சீட்டு விண்ணப்பிக்க முடியவில்லை. கல்லூரியில் உதவித்தொகை பெற
முடியவில்லை. வங்கிக்கடன் பெற கால தாமதம் ஆகிறது என விதவிதமான கவலைகளோடு மக்கள் உள்ளனர்.

மலிவு விலை உணவகம், குடிநீர் என கவர்ச்சித் திட்டங்கள் மட்டும் தனது ஆட்சியில் நிறைவேற்றினால் போதும், மக்களின் முக்கிய பிரச்சனைகளை கண்டு கொள்ள வேண்டாமென நினைக்கிறதா இந்த அரசு. வெறும் ஒரு ஹோலோ கிராம் இல்லாததால் இரண்டு வருடம் வரை காலம் தாழ்த்துவது எந்த விதத்தில் நியாயம் என சம்பந்தப்பட்ட அலுவலருக்கோ,உணவுப்பொருள் வழங்கல் துறையில் உள்ள அலுவலருக்கு தெரிய வேண்டாமா? ஆண்டுக்கு ஆண்டு ஊதிய உயர்வும், போனஸ் தொகையும் கேட்டுப் பெறும் இவர்களுக்கு வாங்கும் சம்பளத்திற்கு வேலை பார்க்கும் எண்ணம் எப்போது வருமென்று தெரியவில்லை.3-4 மாதத்திற்கு ஒருமுறை நாளேடுகளுக்கு அளிக்கும் பேட்டியில் “கூடிய விரைவில் இந்த பிரச்சனை சரி செய்யப்படும்” என்ற ஒரே பதிலைத்தான் அளிக்கின்றனர்.

சேவை பெறும் உரிமைச் சட்டம் எனும் வாய்ப்பூட்டுச் சட்டம் வரும் வரை இந்த அலுவலர்களின் பொறுப்பற்ற நிலையும், அலட்சியமான பதில்களும் நிற்கப்போவதில்லை. நம்புவோம்…நாம் உரக்க ஒலிக்கும் ஒவ்வொரு குரலும் சேவை பெறும் உரிமைச்சட்டம் வர உதவியாக இருக்கும். உறங்கிக் கொண்டிருக்கும் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரையிலான
அனைத்து அலுவலர்களுக்கும் எச்சரிக்கை மணி அடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதையும் அவர்கள் உணரட்டும்.

எம்.எஸ்.ஆனந்தம்

Categories: Article, December 2013, Whistle
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: