மாமனிதன் பாரதி

Saturday, January 25th, 2014 @ 11:13AM

மனிதனாகப் பிறந்தவன் மனிதனாக வாழ்ந்து, புனிதனாக உயர்ந்து எப்போதும் மக்கள் மனங்களில் சிம்மாசனமிட்டு வீற்றிருக்க வேண்டும். அதுதான் வாழ்தல். மற்றொரெல்லாம் வாழவில்லை. வீழ்கிறார்கள்.இதனை பாரதியார்…

bharathi

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ? – என்கிறார்.

மனித நிலையிலிருந்து புனித நிலைக்கு உயர்வது எவ்வாறு? தன்னைப் போல் பிறரையும் நினைத்து, பிறர் துன்பத்தை தன் துன்பம் போல் பார்த்து, பிறர் துன்பம் போக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்வது. அவ்வாறுதான் நம் முன்னோர்கள் பலரும் அரசியல் என்பதை மக்களுக்கு தொண்டு செய்ய ஏற்ற வழியாகக் கருதினார்கள். பாரதியார் நினைத்திருந்தால் எட்டையாபுர சமஸ்தானக் கவியாக எல்லாவித சுகபோகங்களுடன் வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அவர் நம் நாட்டு மக்களை அடிமைத்தளத்திலிருந்து விடுவிக்க தன் இன்பங்களைத் துறந்து போராளியாக, சிறைப்பட்டு சிரமப்பட்டு தன் வாழ்நாளை நம் நாட்டின் விடுதலைக்காக கழித்த சுதந்திரக் கவியாகத் திகழ்ந்தார். நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே.

“ஆடுவோமே பள்ளுபாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று”
என்று பாடிய தீர்க்கதரிசி பாரதியார்.

“நமக்குத் தொழில் கவிதை. நாட்டிற்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்று தன் கடைசிக் காலம் வரை சோர்வில்லாது நாட்டிற்கு உழைத்த உத்தமர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். இறவாப்புகழ் பெற்ற மகாகவியின் பிறந்த நாள் டிசம்பர் 11.அவருடைய தேச பக்திக் கவிதைகள் இளைய தலைமுறையினரின் நெஞ்சில் ஊடுருவட்டும். நல்ல தலைவர்கள் நம் நாட்டிற்கு கிடைக்கட்டும். வாழ்க பாரதம், வாழ்க தமிழகம், வாழ்க வளமுடன்…

– ஜி.பி. –

Categories: December 2013, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: