சகோதரா கடிதம்

Sunday, January 5th, 2014 @ 8:15AM

சகோதரா, டிசம்பர் 3ம் தேதி மாற்றுத் திறனாளிகள் தினம் என்று கடைப்பிடிக்கிறோம். நமக்கு தெரிந்த பழைய வார்த்தைகள் எல்லாம் நொண்டி, குருடு, செவிடு, இதர பல. பின் ஊனமுற்றவர்கள் என்று பொதுபடையாக்கினோம். பின் மீண்டும் சமூக மதிப்பீட்டிற்காக மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கிறோம். சரி சற்று ஊன்றி இதை கவனிப்போம். இம்மாதிரி உடற் குறைபாடுகள் உள்ளவர்கள் எப்படி வாழ்கிறார்கள், எப்படி பார்க்கப்படுகிறார்கள்? உளவியல், உணர்வியல் நிலைப்பாடுகள் எப்படி உள்ளது என்று யோசிக்க வேண்டும். இந்த மாதிரி குறைபாடுகளால் ஏற்படும் சமூகக் கேவலங்கள் தகர்த்தெறியப்பட வேண்டும்.

பொதுவாக ஒரு குடும்ப பின்னணியில், வறுமையும் சேர்ந்து கொண்டால் இவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. ஒரு குறிப்பிட்ட வயது வரை, உழைக்கும் சக்தி உள்ளவரை ஏதோ காலம் தள்ளலாம். பின் கண் பார்வை குறைவு ஏற்பட்டாலோ, காது கேட்கும் திறன் குறைந்தாலோ அவர்களுக்கு எல்லாருக்கும் கிடைக்கும் மரியாதை கிடைக்காது. ஒரு கண்ணாடி அணிந்து வந்தாலே போதும். ரோடில் ‘நாலு கண்ணன்’ வர்றாண்டா என்பார்கள். அதில் உடல் உறுப்பு குறைபாடுகள் உள்ளவர்கள் கேட்க வேண்டிய அவச் சொல்களின் பட்டியல் வெகு நீளம்.

Kaditham

பொதுவாக பொருளாதார சமச்சீர் அடைந்த குடும்பங்களில் ஓரளவு பராமரிப்பு கிடைக்கிறது. அவர்களின் குறைபாடுகள் பிறரால் அனுசரிக்கப்படுகிறது. மேலும் குடும்ப உறுப்பினர்கள் தோள் கொடுக்கிறார்கள். ஓரளவு மன வேதனை குறைகிறது. ஏனெனில் வாழ்க்கை நடத்தும் வேகத்தில் வாழ்வதே சவாலாக உள்ள போது இது போன்ற பராமரிப்பு ஒருவித மன அழுத்தத்தை அதிகமாக்குகிறது. ஒவ்வொரு நாளும் பொழுது கழிவதே பெரும்பாடாக உள்ள தால், குறை உள்ளவர்களை ஒதுக்கி விடுவது சுலபமாக உள்ளது. ஏழ்மை ஒதுக்கி வைத்தலை வேகப்படுத்துகிறது. நாள் தவறாமல் தனி மனிதன் தன் வாழ்நாளை அடுத்தவர்க்கு கொடுப்பது சுமையாக முடிகிறது. ஜப்பான் போன்ற மேலை நாடுகளில் குறை உள்ளவர்களை எப்படி கவனிக்க வேண்டும் என்று வகுப்புகளே நடத்துகிறார்கள். வகுப்பில் இந்த அறிவு மலர ஆதாரமாக சில கேள்விகளை கேட்கிறார்கள்.

1) ஊனம் என்றால் என்ன? 2) யார் காரணம்? 3) காரணம் பெற்றோர்கள் என்றால் ஏன் இவர்கள் தண்டனை பெற வேண்டும்? 4) சமூக அந்தஸ்து கிடைக்கிறதா? 5) எப்படி சமநிலைப்படுத்துவது? 6) குறையை நிறையால் மாற்றுவது எப்படி? 7)உளவியல் சார்ந்த மன எழுச்சி நிலை.

இப்படி பட்டியலிட்டு மக்களுக்கு சொல்லி தருகிறார்கள். கை, கால் ஊனம் உள்ளவரை எப் படி சக்கர நாற்காலியில் உட்கார வைப்பது, அவர் களை தொட்டு, தூக்கி வைக்கும் போது என்ன முறையை கடைப்பிடிக்க வேண்டும், உடல் ரீதியான பாதிப்பு இல்லாமல், அதை நிகழ்த்த பயிற்சி அளிக்கிறார்கள். உட்கார வைத்தவுடன் எப்படி அவர்களை கூட்டி செல்ல வேண்டும், எந்த முறையில், என்ன வேகத்தில், சக்கர நாற்காலி இயக்கப்பட வேண்டும். மேடு பகுதியில் எப்படி தள்ள வேண்டும், சரிவுகளில் எப்படி வேகத்தை கட்டுப்படுத்தி அதில் அமர்ந்திருப்பவர் மன சங் கடம் அடையாமல் இருக்க சொல்லித் தருகி றார்கள். மேலும் தன் இயலாமை ஒரு குறை அல்ல எனவும், அதனால் வாழும் தகுதி இழக்க வில்லை எனவும் அவர்கள் உணரும்படி சட்டம் இட்டு காப்பாற்றி வருகிறார்கள்.

கண் குறைபாடு உள்ளவர்கள், எப்படி இருப் பார்கள், அவர்களின் அசௌகர்யங்கள் என்ன? தினசரி வாழ் நாளில் அனுபவிக்கும் பிரச்ச
னைகள் என்ன? இயற்கை உபாதைகள் கழிக்க உதவி கோரும் போது எப்படி தன்மானம் பாதிக் காதவாறு நடத்தப்பட வேண்டும், அவர்களுக்கு உணவு பரிமாறப்படும் போது உணவு உட்கொள்ளும் போது தன் இயலாமையை ஒரு குறையே அல்ல என்ற தன்னம்பிக்கையோடு
உணவு அருந்த எல்லாருக்கும் பயிற்சி கொடுக்கிறார். பொதுவாக மேலை நாடுகளில் பொது இடங்கள், குறிப்பாக சாலை பூங்கா, நூலகம், உணவகம், பள்ளி என எல்லா இடங் களும் மாற்றத் திறனாளிகள் புழங்க ஏதுவாக வடிவமைக்கிறார்கள். சக்கர நாற்காலி செல்ல ஏதுவாக பொது சாலைகள், கட்டிடங்கள், சாய்வு பாதைகள் கொண்டதாக அமைக்கப்படுகிறது.
‘பிரெய்ல்’ எனப்படும் எழுத்து வடிவம் கொண்டு நூலக அறிவிப்புகள், உணவக குறிப்புகள், பள்ளி புத்தகங்கள், சாலை சந்திப்பு குறிப்புகள் விளக்
கப்படுகிறது. சமூகமும் அவர்களை எல்லாரையும் போல் சமமாகப் பார்க்கிறது. ஏனெனில் இந்த குறைபாடுகளுக்கு அவர்கள் காரணமல்ல என்ற தெளிவு அவர்களிடத்தில் இருக்கிறது. சமூக அந்தஸ்து கிடைக்கிறது.

சகோதரா, இதை எல்லாம் படித்தால் நாம் எப்போது இப்படி மாறுவோம் என்ற ஏக்கம் கொள்ள வேண்டி உள்ளதல்லவா? இங்கு ஏதோ இந்த
வேலை எல்லாம் ஏதோ என்.ஜி.ஓ.க்கள் செய்ய வேண்டும், நமக்கும் அதற்கும் சம்மந்தமே இல்லை என்று நினைக்கிறோம். இது முற்றிலும் தவறான நிலை. மாற வேண்டும்.

வரும் தலைமுறையினருக்கு இதை விளக்க வேண்டும். குழந்தைகளுக்கு மாற்றுத் திறனாளி களின் நிலைப்பாடுகள் போதிக்கப்பட வேண்டும். சமூக பிணைப்பில் கொண்டு வர பயிற்சி அளிக் கப்பட வேண்டும். வாரம் ஒரு மணி நேரம் பள்ளி வகுப்பு இதற்காக ஒதுக்கப்பட வேண்டும். நேரடி பயிற்சி வகுப்புகள் வேண்டும். வறுமையில் உழல்வோருக்கு உதவ வேண்டும். விரைவாக முடிக்க வேண்டும். அவர்கள் சமூக அந்தஸ்துடன் வாழ எல்லாரும் கூடி உழைக்க வேண்டும். ஏதோ அர சாணைகளும், ஒரு சில இலவசங்களும், வேலை வாய்ப்புகளில் ஒதுக்கீடும் செய்து, நமக்
கென்ன என்று விட்டு விடக் கூடாது. மாறாக நாம் மிக அன்போடு உள்ள ஒருவருக்கு இக்குறைபாடு இருந்தால் எப்படி நடந்து கொள்வோமோ அப்படி எல்லாரிடமும் நடந்து கொள்ள வேண்டும்.

தெரியும் குறைபாடுகளில் ஏற்படும் பாதிப்பைவிட தெரியாத மன குறைபாடுகளினால் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். மாற்றுத் திறனாளிகளின் வாழ்வுரிமையை புறக்கணிப்பது சமூகத்தின் மன நோயின் அறிகுறி. எய்தவன் எங்கோ இருக்க அம்பை நோவதின் நிலை. அது எவ்வளவு தவறானதோ, அதை விட தவறா னது சக மனித சகோதரனின் உடல் குறையை பெரிதாக பார்த்து, இரக்கம் செலுத்துவது.

மாற்றுத் திறனாளிகளுக்கு தேவை இரக்கம் அல்ல, அந்தஸ்து. மற்றவர்க்கு தேவை இதைப் பற்றிய மாற்று சிந்தனை. வாருங்கள் நாம் மாறுவோம்.

– நெமோ

 

Categories: Article, December 2013, Whistle, கடிதம்
Tags:

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: