சென்னை குண்டு வெடிப்பு – லோக்சத்தா கண்டனம் – தீர்வுகள்

Friday, May 2nd, 2014 @ 7:50AM

நேற்று நிகழ்ந்த சென்னை சென்ட்ரல் இரயில் நிலைய குண்டு ​வெடிப்பு சம்பவத்தை லோக்சத்தா கட்சி கண்டிக்கிறது. இதில் மரணமடைந்தோர் குடும்பத்திற்கு லோக்சத்தா கட்சி தன் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

Blast-in-Chennai-Exp

Photo courtesy: freepressjournal.in

இச்சம்பவம் நம்மிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நம் மாநில காவல்துறை மற்றும் இரயில்வே துறை ஆகிவற்றின் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அலட்சியத்திற்கு இது போன்ற சம்பவங்களே சான்றாக அமைகிறது.

இதற்கு காரணமான தீவிரவாதிகளை காவல்துறை விரைவில் கைது செய்ய வேண்டும் என நாம் கோரும் இவ்வேளையில், இது போன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்க என்ன வழி என நாம் சிந்திக்க வேண்டும்.

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் உள்ள பிரச்சனைகளை முதலில் பார்ப்போம்:

  • சோதனை செய்ய கருவிகள் இருந்தும் முறையான சோதனைகள் நடைபெறுவது கிடையாது.
  • பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முறையான டிக்கெட் இல்லாத நபர்கள் பயணம் செய்தால் அவர்கள் மீது புகார்கள் அளிக்கும்பட்சதில் எந்தவித நடவடிக்கை ​​யும்​ எடுப்பது கிடையாது. இரயில் நிலையங்களில் சந்தேகத்திற்குரிய நபர்கள் சுதந்திரமாக சுற்றித்திரிவதை தடுக்க எந்த முயற்சி ​​யும் எடுக்கப்படுவதில்லை.
  • மக்களின் பாதுகாப்புக்கு உதவும் CCTV கேமரா, புகார் எண்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது.
  • இரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைக​​ ளிலும், இரயில்களிலும் உள்ள உரிமை கோரப்படாத பொருட்களை உடனடியாக அப்புறபடுத்துவது கிடையாது. பார்சல் சர்வீஸ்களில் செல்லும் பொருட்கள் குறித்து முறையான வகையில் சோதனை செய்யப்படுவதில்லை.
  • இரயில் நிலையத்திற்குள்ளும் இரயிலிலும் அவசர உதவி மருத்துவமனை/மருத்துவப்பிரிவு வசதிகள் கிடையாது.

இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க லோக்சத்தா கட்சி பரிந்துரைக்கும் தீர்வுகள்:

  1. சென்னை மாநகரம் மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களில் CCTV கண்காணிப்பு காமெராக்கள் பொறுத்த வேண்டும். இவை குண்டுவெடிப்பு தவிர பிற குற்ற சம்பவங்களின் விசாரணைக்கும் பெரிதாக பயன்படும். குற்ற சம்பவங்களையும் பெருமளவு குறைக்கும். ஹைதராபாத் நகரிலும் இது போன்று கண்காணிப்பு காமெராக்கள் பொறுத்த வேண்டும் என லோக்சத்தா தொடர்ந்து போராடி சில இடங்களில் வெற்றியும் கண்டுள்ளது.
    சென்னை நகருக்கு மொத்தம் 3500 கண்காணிப்பு காமெராக்கள் வேண்டும் என லோக்சத்தா கட்சியின் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை பிரிவு பரிந்துரைக்கிறது. இவற்றுக்காக ஆகும் செலவு மொத்தம் ரூபாய் 450 கோடி ஆகும்.
  2. கடந்த இரயில்வே பட்ஜெட்டில் பாதுகாப்பு சார்ந்த தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை அளிப்பதாய் சொல்லியிருந்தாலும் அதற்கென எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; அதற்கென நிதியும் ஒதுக்கப்படவில்லை. இரயில்வே துறை பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்திற்கு அதிக கவனம் செலுத்தி அதற்கான நிதி ஒதுக்கீட்டை செய்ய வேண்டும்.

மேலும் இன்றைய நிகழ்விற்கு பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என தமிழக அரசு அறிவித்திருந்தாலும், சமூக ஊடகங்களில் இதுபற்றிய வதந்திகள் பல நிலவி மக்களை அச்சமடைய செய்தது. இது போன்ற சூழல்களில் தமிழக அரசு மக்களின் அச்சத்தை போக்கும் வண்ணம், தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் அரசின் அறிவிப்புகளை விளக்கி விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் எனவும் லோக்சத்தா கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

Categories: Press Releases
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: