அண்ணா பல்கலையின் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் குறைபாடுள்ளது – நிவர்த்தி செய்ய மாற்று வழிமுறைகளை லோக்சத்தா பரிந்துரை

Sunday, June 8th, 2014 @ 9:34PM

அண்ணா பல்கலைகழகம் தற்போது வெளியிட்டிருக்கும் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் குறைபாடுள்ளதாக லோக்சத்தா கட்சி கருதுகிறது. அதை நிவர்த்தி செய்ய மாற்று வழிமுறைகளை கட்சி பரிந்துரைக்கிறது.

Anna University

Anna University

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது. பெற்றோர்கள் மற்றும் பொறியியல் சேர விரும்பும் மாணவர்கள் ஆகியோர் முடிவு எடுக்க ஏதுவாக கல்லூரிகளின் கல்வி செயல்பாடு மற்றும் தேர்ச்சி விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை வெளியட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இப்போது வெளியிடப்பட்டிருக்கும் தரவரிசை பட்டியல் மிகவும் குறைபாடுள்ள ஒன்றாகும். இதன் முக்கியத்துவம் தெரியாமல் அவசர கதியில் வெறுமனே நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற பொறுப்பில்லாமல் உருவாக்கப்பட்ட ஒரு தரவரிசை பட்டியல் ஆகும். அண்ணா பல்கலைகழகத்தாலேயே வெளியிடப்பட்டிருப்பதால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படும், மிகவும் நம்பகமான தரவரிசை என அவர்களால் மதிக்கப்படும். இதனால் அதில் உள்ள குறைகள் அவர்களை தவறாக வழிநடத்தும் அபாயமிருக்கிறது.

இதில் உள்ள குறைபாடுகளை விரிவாகக் காண்போம். இந்த பட்டியல் அணைத்து கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை இறங்குவரிசையில் அடுக்கி அப்படியே பட்டியலிட்டுள்ளனர். கல்லூரியில் மொத்தம் தேர்வெழுதிய மாணவர் எண்ணிக்கை, கல்லூரியில் மாநில அளவில் முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை ஆகியவை கணக்கில் எடுக்கொள்ளப்படவில்லை. உதாரணமாக ஒரு கல்லூரியில் நவம்பர் 2012-இல் நடந்த செமெஸ்டர் தேர்வில் வெறும் 11 மாணவர்களே தேர்வை எழுதுகின்றனர். அவர்களில் மூன்று பேர் மட்டுமே தேறி தேர்ச்சி விகிதம் 27.27% ஆக 377-வது ரேங்க் பெற்றுள்ளது. அதே கல்லூரி ஏப்ரல் 2013-இல் செமெஸ்டர் தேர்வில் தேர்வெழுதிய 11 மாணவர்களில் 9 பேர் தேர்ச்சி பெற்று 81.72% ஆக 23-வது ரேங்க் பெற்றுள்ளது. இக்கல்லூரி ஆயிரம் இரண்டாயிரம் மாணவர்கள் தேர்வெழுதி அதிகம் பேர் தேர்ச்சி பெற்ற பல முன்னணி கல்லூரிகளை தரவைசையில் விஞ்சுகிறது. இதே போல் மற்றொரு உதாரணம், திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே தேர்வெழுதி உள்ளார். அவரும் தேர்வாகவில்லை என்பதால் தேர்ச்சி விகிதம் 0%-ஆக கடைசி ரேங்க் பெற்றுள்ளது. அந்த ஒரு மாணவர் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தால் கல்லூரி 100% பெற்று தமிழகத்திலேயே முதல் இடத்தில் இருந்திருக்கும். இதே போல் பல குளறுபடிகள் உள்ளன.

மேலும் தேர்ச்சி விகிதம் என்ற ஒற்றை அம்சம் மட்டுமே கொண்டு தரவரிசை தயாரித்தால் கல்லூரிகள் தேர்வே பிரதானம் என்று தேர்வில் மட்டுமே கவனம் செலுத்தி, மாணவர்களின் பிற மென் திறன்கள் மேம்பாடு, செயல்முறை, தொழிற்சாலை காட்சியுலா, வேலைவாய்ப்பு திறன் மேம்படுத்தல் ஆகியவற்றை கவனிக்காமல் விடும் அபாயம் உள்ளது.

அண்ணா பல்கலைகழகம் தேர்ச்சி விகிதம் என்ற ஒன்றை மற்றும் கருத்தில் கொள்ளாமல், பேராசியர்களின் எண்ணிக்கை, அவர்களின் தகுதி, கல்லூரி கட்டமைப்பு, வேலைவாய்ப்பு விகிதம், உயர்கல்வி கற்க செல்வோர் விகிதம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் உள்ள அங்கீகாரம் போன்ற அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என லோக்சத்தா கட்சி ஆலோசனை அளிக்கிறது.

இதே போல் தரவரிசையாக இல்லாமல் கல்லூரிகள் A+, A, A-, B+, B, B- என்று தரத்திற்கு ஏற்றாற்போல் வகைபடுத்தப்பட வேண்டும். ஒரு வகையிலிருந்து அடுத்த வகைக்கு முன்னேற வேண்டுமென்று கல்லூரிகள் உந்துதலுடன் செயல்பட்டு கல்வியின் தரம் உயரும். இவ்வாறு வகைபடுத்தப்பட்டால் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியுமாக அமையும்.

இந்த பரிந்துரைகளை இந்த கல்வியாண்டின் சேர்க்கைக்குள் செயல்படுத்த முடியாவிட்டாலும் அடுத்த கல்வியாண்டின் சேர்க்கைக்குள் செயல்படுத்துமாறு அண்ணா பல்கலைகழகத்தை லோக்சத்தா கட்சி கேட்டுக்கொள்கிறது.

Categories: Press Releases
Tags: , , , ,

1 Comment to "அண்ணா பல்கலையின் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் குறைபாடுள்ளது - நிவர்த்தி செய்ய மாற்று வழிமுறைகளை லோக்சத்தா பரிந்துரை" add comment
sam
July 5, 2014 at 5:59 pm

anna university results will declare soon?

Leave a Reply

%d bloggers like this: