முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீர்ப்பு குறித்தும், அடுத்து செய்ய வேண்டியவையும்

Friday, October 10th, 2014 @ 9:38PM

Jayalalithaaவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு அளிக்கப்பட நீதிமன்றத் தீர்ப்பை லோக்சத்தா கட்சி வரவேற்கிறது. இத்தீர்ப்பு ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும். ஊழல் குற்றத்திற்காக ஜாமீன் மறுக்கப்பட்டதையும் லோக்சத்தா வரவேற்கிறது.
இத்தீர்ப்பு மக்கள் மத்தியில் நீதித்துறையின் மேல் உள்ள நம்பிக்கையை அதிகரிக்கும். எனினும் இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வர 18 ஆண்டுகள் ஆகியுள்ளது. மேல்முறையீடு செய்தால் இன்னும் பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படும். இந்த கால தாமதத்திற்கு வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு இருந்ததே காரணம் ஆகும். இது லோக் சத்தாவின் கோரிக்கையான ‘அரசியல் தலையீடு இல்லாத சுதந்திர விசாரணை ஆணையம்’ அமைய வேண்டும் என்பதற்கு வலு சேர்க்கிறது.
மேலும் இது போன்ற பெரும் அளவிலான ஊழல் வழக்குகளை விசாரிக்க ‘லோக் ஆயுக்தா’ தேவை என்னும் கோரிக்கையை லோக்சத்தா கட்சி முன்வைக்கிறது.

தண்டனைக்கு நோக்கும் கற்பிக்கும் வகையில் கர்நாடகத்தையும், காவிரி பிரச்சனையையும் காரணம் காட்டுவதை லோக்சத்தா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. நீதித்துறையை கேவலப்படுத்தும் செயல்களை கண்டிப்பதோடு, நீதித்துறையை இந்த நேரத்தில் மனமாற பாராட்டவும் செய்கிறது. ஊழல் என்ற கொடிய நோயை நம் நாட்டை விட்டு விரட்ட நீதித்துறை செய்யும் தொடர் முயற்சி போற்றுதலுக்குரியது.

முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு பெங்களுரு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மற்றும் தண்டனை காரணமாக தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்திய ரவுடிகளை லோக் சத்தா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் அதை தடுக்கத் தவறிய காவல்துறையை கண்டிப்பதோடு, இனியும் தாமதிக்காமல் கலவரத்தில் ஈடுபட்டோரை கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படியும் கோருகிறது.

ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்ற தண்டனைக்காக மக்களை துன்பப்படுத்துதல் கூடாது. நாம் வாழ்வது ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் தனிமனிதர்களை உயர்வாக தூக்கிபிடித்து அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக நினைக்கும்பொழுது, ஜனநாயகமும், சுதந்திரமும் நம்மை விட்டு பறிபோகும். தனி மனித புகழ் ‘சட்டத்தின் ஆட்சியை’ சீர்குலைப்பதாக இருத்தல் கூடாது.

 1. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு கோப்புகள் மற்றும் அரசின் திட்டங்கள், அரசின் இலவச பொருட்கள் அனைத்திலிருந்தும் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் புகைப்படம் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை லோக்சத்தா செப் 28 அன்றே விடுத்த பிறகும், சில கட்சிகளும் இதே கோரிக்கையை விடுத்த பிறகும் குற்றவாளி ஒருவரின் புகைப்படம் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் தொடர்கிறது. அதே போல் குற்றவாளி ஒருவரின் புகைப்படம் மற்ற அரசுத் திட்டங்களில் – அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா வாட்டர், அம்மா மருந்தகம் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.
 2. இந்த வழக்கு முடிவுகளின் சாதக பாதகங்களை உணர்ந்து தமிழக காவல்துறை செப் 27 சனிக்கிழமை மதியமே ரௌடிகளை கைது செய்திருக்க வேண்டும். வருங்காலத்தில் இது போன்ற சமயங்களில் காவல்துறை முன்னெச்சரிக்கையுடன் செயல்பட ஆயத்தமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் இருக்கும் மற்றொரு பிரதான கட்சியான திமுகவின் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையின் உள்ளது. நாளை அவர்களுக்கான தீர்ப்பு வரும்பொழுது இதே போன்ற நிலைமை உருவாகலாம். அப்பொழுதும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் மக்களுக்காக காவல்துறை செயல்படுவதாய் இருக்க வேண்டும்.
 3. இது போல் கலவரங்கள் நடக்கும் வாய்ப்பு ஏற்படும்பொழுது முன் நடவடிக்கையாக டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும்.
 4. ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபடும் அரசியல்வாதிகளை விரைந்து விசாரிக்க ‘லோக் ஆயுக்தா’ அமைப்பு தமிழகத்தில் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். ஆவின் பாலில் பெருத்த ஊழல் இருப்பது தெரிந்தும், அதில் அமைச்சர்களுக்கு, அதிகாரிகளுக்கு பங்கு இருப்பது தெரிந்தும் அவர்களை விசாரிக்கும் ஒரு அமைப்பு இங்கில்லை. லோக்பால் சட்டம் அமுலாக்கிய 365 நாட்களில் லோக் ஆயுக்தா சட்டம் எல்லா மாநிலங்களிலும் இயற்ற வேண்டும் என்பதை தமிழகம் இதுவரை கண்டிகொள்ளாமலே உள்ளது. மாநிலத்தின் புதிய ஆட்சியாவது லோக் ஆயுக்தாவிற்கான பணிகளை உடனடியாக துவக்க வேண்டும்.
 5. இது போன்ற பெரும் அளவிலான ஊழல் வழக்குகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் வாதிகளை விசாரிக்க ‘சிறப்பு நீதிமன்றங்கள்’ மற்றும் வழக்குகளை விரைந்து முடிக்கும் நீதித்துறை சீர்த்திருத்தங்கள் வேண்டும்.
 6. மேலை நாடுகளிலும், இந்தியாவில் இருக்கும் சில தேசிய கட்சிகளிலும் குற்றசாட்டுகள் நிரூபிக்கப்பட்ட உறுப்பினர்களின் மீது நடவடிக்கையும், அவர்களை கட்சியை விட்டு விலக்கும் நடவடிக்கையும் நடைமுறையில் உள்ளது. அதுபோல் இங்கும் ஏற்பட வேண்டும் ஒரு கட்சியின் பொதுசெயலாளர் தண்டிக்கப்பட்டு சிறை சென்றபின் ஒரு மாநிலத்தை ஆளும் கட்சி செய்வதறியாது இருப்பது கட்சிகளில் இருக்கும் உட்கட்சி ஜனநாயகம் என்பது அறவே இல்லை என்பதை மீண்டும் வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
 7. ஊடகங்களில் செல்வி. ஜெயலலிதாவின் வழக்கு குறித்தும், தீர்ப்பு குறித்தும் செய்திகள் வந்தாலே அரசு கேபிளில் அவை நிறுத்தப்படுவது ஊடகத்தின் சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும். குறிப்பாக தந்தி, புதிய தலைமுறை, சன் நியுஸ் மற்றும் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிகள் தொடர்ந்து நிறுத்தப்படுகின்றன. இது அரசு கேபிள் எவ்வாறு அரசின் ஏவலாக செயல்படுகிறது என்பதற்கு சாட்சி. ஊடக சுதந்திரத்தை காக்க அரசு கேபிள் தொழிலை கைவிட வேண்டும்.
 8. அதே போல் செப் 27, 28 தமிழகத்தின் பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்கிறது. இதற்கு என்ன காரணம் என்று மின்சார வாரியம் விளக்கம் அளிக்க வேண்டும்.
 9. நீதித்துறை சரியாக செயல்படும் இந்த நேரத்தில் காவல்துறை தன் கடமையை செய்யாதது மிகுந்த வருத்தமளிக்கிறது. அரசு இயந்திரத்தின் மிக முக்கியமான பணியான சட்ட ஒழுங்கை பாதுகாத்தலை, ஆளுங்கட்சியின் வற்புறுத்தல் உட்பட எந்த காரணத்திற்காகவும், காவல்துறை செய்யத் தவறக்கூடாது.
 10. மேலும் தங்கள் சொந்த பிரச்சனைகளுக்கு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதை ரவுடிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். இதை தடுக்க சேதமான பொது சொத்துகளுக்கு அவர்களிடமிருந்தே நஷ்ட ஈடு பெறப்பட வேண்டும். மேலும் தனியாக செய்தாலும் சரி கூட்டமாக செய்தாலும் சரி, இது போன்று பொறுக்கித்தனத்தில் ஈடுபட்டு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போர் அனைவர் மீதும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 11. அதே போல் நீதித்துறையையும், நீதிபதி குன்ஹாவையும் சிறுமைப்படுத்தி, காவிரி பிரச்சனையை இந்த தீர்ப்பிற்கு சம்மந்தப்படுத்தி சுவரொட்டிகள் ஒட்டிய அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சமூக வலைத்தளங்களிலும் இது போன்ற செய்திகள் பரப்புபவர்களும் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நீதித்துறையை களங்கப்படுத்தியவர்கள் மீதி நீதிமன்றமே ‘தானாக முன்வந்து’ வழக்கு தொடுக்க வேண்டும்.
 12. அனுமதியின்றி மக்கள் இடையூறு செய்யும், அவதூறு பரப்பும் பேனர் கலாசாரத்தை ஒழிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஜெயலலிதா அவர்களின் ஜாமின் மனு விசாரணைக்கு வரும்போதெல்லாம், முன் அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை ஒழித்து, அவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 27 முதலே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போராட்டம் என்ற பெயரில் அனுமதியின்றி அதிமுகவினர் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் பெறும் இடையூறு ஏற்படுத்தி வருகிறார்கள். வியாபாரிகளை கடைகளை அடைக்க சொல்லி வற்புறுத்துகிறார்கள். அவர்களுக்கு பெருத்த நஷ்டத்தையும் ஏற்படுத்துகிறார்கள். இவை யாவும் முன் அனுமதியின்றி நடத்தப்பட்ட போராட்டங்கள் என்பதை காவல்துறை அறியும். அப்படி போராட்டம் செய்தவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பொழுது நடவடிக்கை மட்டுமே இனி வரும் காலங்களில் இது போன்ற அசாம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும்.

மற்ற சங்கங்கள் மற்றும் தனியாரையும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு வற்புறுத்துகிறார்கள். ஆயுத பூஜை முடிந்து தத்தமது ஊர்களுக்கு செல்ல வேண்டியவர்களை சிரமப்படுத்தும் நோக்கில் அக் 5, தனியார் பேருந்துகள் இயங்காமல் இருந்தன. அதே போல் அக் 7 ஆசியாவின் மிகப் பெரிய சந்தையான கோயம்பேடு சந்தையை மூடும்படி வியாபாரிகள் வற்புறுத்தப்பட்டுள்ளார்கள்.
நீதிமன்றம் தலையிட்டும் அக் 7 தனியார் பள்ளிகள் பெரும்பாலான இடங்களில் மூடப்பட்டுதான் இருந்தன. சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சீர்குலைவதை தடுக்க வேண்டிய காவல்துறை அதிமுக தொண்டர்களுக்கு அடி பணிந்து செல்லும் நிலையே தொடர்கிறது.
அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா குற்றவாளி என்று நிரூபணம் ஆன செப் 27 எவ்வளவு அலட்சியமாக காவல்துறை இருந்ததோ அதே போன்று அவரின் ஜாமீன் மனு வரும் நாட்களிலும் எந்த முன்னெச்செரிக்கை நடவடிக்கையும் எடுக்காமலே உள்ளனர்.

ஊழல் புரிந்த மற்ற அரசியல் தலைவர்கள் – லாலு, யெடுரப்பா, சவுதாலா ஆகியோர் தண்டிப்பட்டபொழுது இதுபோன்ற கேலிக்கூத்துகள் மற்ற மாநிலங்களில் நடக்கவில்லை.

தமிழகத்தில் தொடர்ந்து பதட்டத்தை உருவாக்கும் இந்த செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று லோக்சத்தா கட்சி வலியுறுத்துகிறது.

கடந்த 12 நாட்களாக உலகம் தமிழகம் மீது கொண்டுள்ள பார்வை தமிழர்கள் அனைவரையும் தலைகுனிய வைப்பதாய் உள்ளது. அதை சீர்செய்வது ஒவ்வொருவரின் கைகளிலும் உள்ளது.
பொது வாழ்வில் மிக அதிகமானோர் இதை விட மோசமான ஊழல் குற்றங்களில் சிக்கியிருக்கிறார்கள். ஜெயலலிதா பெற்ற தண்டனை இவர்களை புனிதப்படுத்திவிடவில்லை. அவர்களின் குற்றம் நிரூபிக்கப்படும்பொழுது அவர்களில் சிறையில் அடைக்கப்படுவார்கள். ஆக ஒருவர் சிறையில் அடைக்கப்படும்பொழுது அதனை தங்கள் வெற்றியாக ஊழல் செய்த மற்றவர்கள் பார்ப்பது கோழைத்தனமே. தமிழக மக்கள் இதனை சரியாக புரிந்துகொள்ள் வேண்டும்.
ஊழலை ஒழிக்க அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும். ஏழை மற்றும் சாதாரண மக்களே இந்த ஊழல் புற்றுநோயால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர
வேண்டும். அரசியல் தலைவர்கள் செய்யும் ஊழலே இன்று பெரும்பாலான அரசு அலுவலகங்களில் லஞ்சமும், ஊழலும் பெருக்க காரணம். ஊழலுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஆதரிப்பவர்கள், நாளை இதே லஞ்சத்தாலும், ஊழலினாலும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.
நம் வாழ்க்கை அரசியல் கட்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மக்களுக்காகத்தான் அரசியல் கட்சிகளே தவிர, அரசியல் கட்சிகளுக்காக நாமில்லை. அரசியல் கட்சிகள் நம் வாழ்க்கையை செம்மைபடுத்தவே உள்ளனர் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

Categories: Press Releases
Tags: , , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: