டிராஃபிக் ராமசாமி அவர்க​ள் கைது : லோக்சத்தா கட்சி கண்டனம்

Saturday, March 14th, 2015 @ 3:09PM

சமூக ஆர்வலர் திரு. டிராஃபிக் ராமசாமி அவர்களை பொய் வழக்கில் கைது செய்த காவல் துறையை லோக்சத்தா கட்சி கண்டிக்கிறது.

சமூக அக்கறை கொண்ட ஒருவரை குற்றவாளியைப்போல் நடத்துவது அராஜகமான செயல். அவர் நடத்தப்படும் விதத்திலேயே இந்த கைது பழிவாங்கும் நடவடிக்கை என தெளிவாக தெரிகிறது. அதுவும் 82 வயதான ஒரு முதியவரை விடியற்காலை 4 மணிக்கு கைது செய்து சட்டை, செருப்பு கூட இல்லாமல் அவரை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி பின்னர் மருத்துவமனையில் அவசர நிலையில் சேர்க்கும் அளவுக்கு அவரின் உடல்நிலையை மோசமாக்கும் அளவுக்கு அலைக்கழித்தது மனித உரிமை மீறலாகும். அவரை கைது செய்த விதத்தை நீதிமன்றம் வன்மையாக கண்டித்ததை இங்கே நினைவுகூர்கிறோம்.

குற்றவாளி என நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ​செல்வி. ​ஜெயலலிதா அவர்களின் படத்தை அரசு அலுவலகங்களில், அரசின் நலத்திட்ட பேனர்களில் இருந்து நீக்கவோ, அரசியல் கட்சிகள் அனுமதியின்றி வைக்கும் பேனர்களை நீக்கவோ நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகள் இதுபோன்ற அப்பாவி சமூக ஆர்வலரை கைது செய்வது அவர்களின் தைரியமின்மையையே காட்டுகிறது. நம் மாநிலத்தில் ஊடக சுதந்திரத்தை ஒடுக்க அடிப்படைவாத சக்திகளின் முயற்சி, ஊழல், லஞ்சம், சட்டத்தின் ஆட்சியின்மை போன்ற முக்கிய பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளில் அரசும், காவல்துறையும் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது.

இந்த கைதில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளின் தகவல்களை நீதிமன்றம் கோரியிருப்பது வரவேற்கத்தக்கது. திரு. டிராஃபிக் ராமசாமி அவர்களை உடனடியாக விடுதலை செய்வதோடு இது போன்ற சமூக ஆர்வலர்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் வழிசெய்ய வேண்டும் என லோக்சத்தா கட்சி கோரிக்கை விடுக்கிறது.

Categories: Press Releases
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: