நிலம் கையகப்படுத்தும் சட்டம் – விவசாயிகளையும் பங்குதாரராக ஆக்குவதே தீர்வு

Monday, March 9th, 2015 @ 7:46PM

தற்போது நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை வைத்து கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடாமல் அதற்கு சரியான தீர்வு கிடைக்க உழைக்க வேண்டும் என லோக் சத்தா கட்சி கோரிக்கை விடுக்கிறது. மேலும் இதற்கு சரியான தீர்வையும் லோக் சத்தா அளிக்கிறது.

“நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக நம் நாட்டின் முன்னேற்றம் கருதி நிலம் கையகப்படுத்தும் சட்டம் அவசியம் என ஒப்புக்கொண்டாலும் அந்த சட்டம் நில உரிமையாளர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் சரி செய்யப்பட வேண்டும். ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட இந்த சட்டத்தின் மூலம் விவசாயிகள் நெடுங்காலமாக வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளார்கள். எவ்வளவு தான் நிவாரணம் அளித்தாலும் நிலத்தை இழப்பவர் ஏமாற்றப்படும் சூழலுக்கே ஆளாகிறார். நிலத்தை கையகப்படுத்தி செயல்படுத்தப்படும் திட்டங்களில் அவர்களையும் பங்குதாரராக ஆக்குவதே சரியான தீர்வு.” என லோக் சத்தாவின் தேசிய துணைத் தலைவர் திரு. அஷ்வின் மகேஷ் அவர்கள் தெரிவித்தார்.

நில உரிமையாளர்கள் அந்த நிலத்தின் மதிப்பு உயர்ந்த பின்னர் அவர்களே அந்த நிலத்தின் ஒரு பகுதியை அவர்கள் நிலத்தை விற்ற விலையிலேயே வாங்க வழி செய்ய வேண்டும்.
மேலும் நிலம் கையகப்படுத்தல் தொடர்பான முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அரசின் அனுமதி வேண்டும் என்பதை லோக் சத்தா எதிர்க்கிறது. அதிகாரிகள் செய்யும் தவறுகளை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். அவர்களை காப்பாற்ற அரசு முயற்சிக்கக் கூடாது.

இந்த சட்டம் தொடர்பான லோக் சத்தாவின் நிலைப்பாடு பின்வருமாறு:

  1. முன்பு விலக்கு அளிக்கப்பட்ட 13 சட்டங்களை நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு (2013) சட்டத்தில் கொண்டு வந்து அந்த 13 சட்டங்களில் உள்ள அம்சங்களுக்கு நில உரிமையாளர்கள் நிவாரணம் பெற வழிவகை செய்தததை லோக் சத்தா ஆதரிக்கிறது.

  2. கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகளுக்கு பயன்படுத்தப்படாமல் இருந்தால் அதை திரும்பப்பெரும் அம்சத்தை நீக்கியதை ஆதரிக்கிறது. மிகப்பெரிய திட்டங்கள் செயல்வடிவம் பெற அதிக காலம் பிடிக்கும். எனவே இந்த 5 ஆண்டு காலக்கெடுவை நீக்கியது சரியானது.

  3. நாட்டின் பாதுகாப்பு, கிராமப்புற உள்கட்டமைப்பு, குறைந்த செலவில் கட்டுப்படியாகும் வீட்டுவசதி, தொழிற்பாதைகள், உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு நில உரிமையாளர் உடன்பாடு, சமூக பாதிப்பு தணிக்கை, பயிர் பாசன நிலம் கையகப்படுத்தத் தடை ஆகியவற்றில் இருந்து விலக்கு அளித்ததை கொள்கை அளவில் ஆதரித்தாலும் இது போல் விலக்கு அளிக்கப்படும் திட்டங்கள் மிக முக்கியமானவையாகவும் எண்ணிக்கையில் மிகக் குறைவானவையாகவும் இருக்க வேண்டும்.

  4. ‘குறைந்த செலவில் கட்டுப்படியாகும் வீட்டுவசதி’ என்ற போர்வையில் தனியார் ரியல் எஸ்டேட் மற்றும் நிலத் தரகர்கள் மேற்கூறிய விலக்கை தவறான முறையில் பயன்படுத்தாதபடி சட்டத்தை திருத்த வேண்டும்.

  5. ‘சமூக பாதிப்பு தணிக்கை’ தேவை இல்லாத மறைமுக பரிவர்த்தனை செலவிற்க்கு வழி வகுக்கும். போதிய நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு உறுதி செய்யப்படுமானால் முக்கிய திட்டங்களுக்கு இந்த ‘சமூக பாதிப்பு தணிக்கை’ தேவை இல்லை என லோக் சத்தா கருதுகிறது.

  6. மேலும் எந்தத் துறைகளிலெல்லாம் ‘சமூக பாதிப்பு தணிக்கை’ செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் அதை செயல்படுத்த தெளிவான எளிமையான வழிமுறையை உருவாக்க வேண்டும்.

  7. அரசு தனியார் கூட்டு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதை இன்னும் தெளிவாக விளக்க வேண்டும்.

  8. தனியார் மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் சமூகநல அமைப்புகளின் சார்பில் அரசு நிலம் கையகப்படுத்தி அவர்களுக்கு நிலம் அளிப்பதை லோக் சத்தா எதிர்க்கிறது. இந்த நில பரிவர்த்தனைகளை தனியாரே நேரடியாக நில உரிமையாளர்களிடம் செய்து கொள்ள வேண்டும். இதில் அரசு தலையிடக் கூடாது.

அனைத்து கட்சிகளும் நாட்டு மக்களின் நன்மை கருதி லோக் சத்தாவின் இந்த பரிந்துரைகளை பரிசீலிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

Categories: Press Releases
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: