Chennai Next – அங்கீகரிக்க, அலச, அடுத்து நிகழாமல் தடுக்க ஆயத்தமாகும் தளம்.

டிசம்பர் 1 அன்று இரவு சென்னை கொஞ்சம் கொஞ்சமாக இருளில் மூழ்கி வந்தது. அவசரத்திற்கு வாங்கி வைத்த மெழுகுவர்த்தி அடுத்த 6 மணி நேரத்தில் உறங்கிபோனது. எங்கும் நிசப்தம். ஆனால் இது பயம்தரும் பேரமைதியாக இருந்தது. சுனாமி துக்கம்தான் நம் கடைசி துக்கம் என்ற நினைத்த நமக்கு பேரடியாக இது விழுந்தது. உயிர்கள் இழந்தோம். உடைமை இழந்தோம். கதறி அழக்கூட கதியற்று நின்றோம்.

தமிழகத்தின் பிற பகுதிகளில் நம் நிலைமை அறிந்துகொண்ட நம் உறவினர்கள் கலங்கினார்கள், பெற்றோர் கதறினார்கள். தொடர்பு அறுந்துபோக பயம் அவர்களை பற்றிக்கொண்டது. அடுத்த வேளை உணவிற்கு என்ன ஆர்டர் செய்யலாம் என்று யோசித்த மக்களை, அடுத்த வேளை உணவு கிடைக்குமா என யோசிக்க வைக்கும் பெருந்துயர் நிகழ்ந்தது. சொந்த வீடு தீவானது. சொந்த இடம் நம்மை அகதியாக்கியது. வாழ்வு முடிந்துவிட்டதோ என நினைத்த சமயம் இதுவரை கேட்காத குரல் ஒன்று கேட்டது.

‘யாராவது இருக்கீங்களா? உங்களுக்கு சாப்பாடு வேணுமா?’ – இதை படிக்கும்போது புல்லரித்தால் நீங்கள் உதவிக்கரம் நீட்டிய ஒருவராக இருக்கலாம். கண்ணீர் வடித்தால் நீங்கள் உதவி பெற்ற ஒருவராக இருக்கலாம்.

அந்த குரல் அதோடு நிற்கவில்லை. கர்ப்பிணி பெண்களை காப்பாற்றி பெருந்துயரில் அந்த பிஞ்சுக் குழந்தையின் சிரிப்பை கொண்டு வந்தது. அழும் குழந்தைக்கு பால் கொண்டுவந்து சேர்த்தது. இருளை போக்கும் மெழுவுவர்த்தி கொண்டுவந்தது. தன் உயிரை பொருட்படுத்தாது பல உயிரை காப்பாற்றியது. தன் கால்களில் வந்த சேற்றுப் புண் பார்க்காது மற்றவரின் சேற்றுப் புண்ணிற்கு மருந்து தடவியது. அது சமைத்தது, கொண்டுசென்று சேர்த்தது, தன் பசி மறந்து துடித்தது. இறந்து போன ஆன்மாக்களை அடக்கமும் செய்தது. பிறப்பு முதல் இறப்பு வரை இந்த நாட்டில் ‘லஞ்சம்’ இல்லாமல் நடக்காது என்பதை காலில் மிதித்து ‘மனிதத்தை’ தழைக்கவைத்தது.

அந்த குரல் தன் பணி முடித்தது, பாராட்டப் பெற்றது. சிலரால் அங்கீகரிக்கப்பட்டது.

அந்த குரலின் ஒரு சிறு துரும்பாக லோக்சத்தாவின் அங்கத்தினர் இருந்தார்கள். கட்சி அடையாளங்கள் எங்கும் வந்துவிடக் கூடாது என்று கவனமாக இருந்தார்கள். அதே சமயம் கட்சி சார்பாக அரசாங்கத்தின் தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டுபவர்களாகவும், இனியாவது அரசு என்ன செய்ய வேண்டும் என்று எடுத்துரைப்பவர்களாகவும் இருந்தார்கள்.

இதையொட்டி, ஜனவரி 10-ம் தேதி சென்னையில் ஒரு நிகழ்வை திட்டமிட்டுள்ளோம். இரண்டு நோக்கங்களுக்காக:

1) அங்கீகரிக்க – நல்லது செய்தவர்களை எத்துனை முறை பாராட்டினாலும் தகும்.ஒரு முக்கிய முயற்சியாக இங்கு பணி செய்த தன்னார்வலர்களோடு, சில சாமானியர்களையும் -, கடும் மழையில் தன் கடமை தவறாது பணி செய்தவர்கள் (உதாரண – கடும் மழையில் கழுத்தளவு தண்ணீரில் உங்கள் வீட்டிற்கு பால் கொடுத்த பால்காரர்), மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு உதவ வந்த நல்லுல்லங்களையும். அங்கீகரிப்போம்.

2) அலச, அடுத்து இது நிகழாமல் தடுக்க – எந்த விதமான மாற்றங்கள் – குறிப்பாக சென்னையில் – நடத்தப்பட வேண்டும் என்று ஆரம்ப கட்ட நிகழ்வாகவும் இது அமையும்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள, தங்கள் விவரங்களை கீழே அல்லது  இந்த லிங்கில் அளிக்கவும். நிகழ்விற்கான இடமும் பிற விவரங்களும் விரைவில் அறிவிக்கப்படும்

%d bloggers like this: